Published:Updated:

`தனியா நில்லுங்க... யாருக்கு என்ன பலம்னு பார்ப்போம்!’ - அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி சலசலப்பு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சுக்கு அ.தி.மு.க தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

``தமிழகத்தில் பா.ஜ.க-வின் காலம் தொடங்கிவிட்டது. அதற்கு உதாரணமாக உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளதைக் காட்டுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டிருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் எங்களால் மக்கள் ஆதரவைப் பெற முடியும். தனித்து நின்றிருந்தால் அதிக இடங்களில் போட்டியிட்டு அதிக வெற்றிகளைப் பெற்றிருப்போம்” என சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு அ.தி.மு.க தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, ``அதைத்தான் நாங்களும் கூறுகிறோம். எல்லோரும் தனித்து நின்றால்தானே உங்களுடைய பலம் என்னவென்று உங்களுக்குத் தெரியும். தி.மு.க-வும் தனித்து நிற்க வேண்டும். அவர்கள் இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அடுத்த தேர்தலில் எல்லா கட்சிகளும் தனித்து நிற்கட்டும் யாருக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என பார்போம்” என்றார்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்புக்குத் தடை! - உயர்நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்ட தி.மு.க

இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ``பொன். ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க ஒரு நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை மூடி மறைக்க தேர்தல் ஆணையரை அடிக்கடி சந்தித்து மனு அளிப்பது, தேர்தல் ஆணையருக்குத் தேவையில்லாத அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக் கூடாது என்பதுதான் தி.மு.க-வின் எண்ணம். அதன்காரணமாகதான் நீதிமன்றம் செல்கின்றனர். ஜனநாயகத்தில் வெற்றி பெற்றவர்கள் தங்களது கடமையை ஆற்ற உள்ள நிலையில், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்கின்றனர்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு