Published:Updated:

விழுப்புரம்: `மண் அடித்துச் சென்றதற்கா ரூ.7 கோடி?’ - தடுப்பணை விவகாரத்தில் கேள்வி எழுப்பும் பொன்முடி

பொன்முடி
பொன்முடி

தென்பெண்ணை ஆற்றில் 25.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணையின் சுவர் ஒரே மாதத்தில் உடைந்ததுடன், மதகுத் தண்ணீரில் அடித்துச் சென்ற விவகாரத்தில் நான்கு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசின் பொதுப்பணித்துறை.

கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 320 கிலோமீட்டர் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. அதில் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மட்டும் 106 கிலோமீட்டர் நீளத்தைக் கடந்து செல்கிறது. இந்த ஆறு கடக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், எல்லீஸ் சத்திரம், சொர்ணாவூர் பகுதிகளில் இருக்கும் சிறிய தடுப்பணைகளில் போதுமான நீரைத் தேக்கிவைக்க முடியாததால், ஒவ்வோர் ஆண்டும் பெருமளவு நீர் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது.

உடைந்த தடுப்பணை
உடைந்த தடுப்பணை

அதனால் விழுப்புரம்-கடலூர் மாவட்டங்களை இணைக்கும்விதமாக புதிய அணைக்கட்டு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று இரு மாவட்ட விவசாயிகளும் பல ஆண்டுகளாகக் கோரிக்கைவைத்தனர். அதனடிப்படையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. அந்தப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2019-ம் ஆண்டு, ஜனவரி மாதம் தொடங்கியது. 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரமும்கொண்ட அந்தத் தடுப்பணை, 2020 டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தால் திறந்துவைக்கப்பட்டது.

புதிதாகத் திறக்கப்பட்ட தடுப்பணையின் சுவர்களின் ஒரு பகுதி ஜனவரி 23-ம் தேதி திடீரென உடைந்து விழுந்தது. தொடர்ந்து அணையிலிருந்த தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அத்துடன் ஒரு மதகும் அடித்துச் செல்லப்பட்டது. தகவலறிந்து அங்கு ஓடிய விவசாயிகளும் பொதுமக்களும் பாறைகளைக்கொண்டு அணை உடைப்பைச் சரிசெய்ய முயன்றனர். அந்த முயற்சியில் தோல்வியடைந்த பொதுமக்கள், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

தென்பெண்ணையாறு
தென்பெண்ணையாறு

அதன் பிறகு அதிகாரிகள் வந்து தடுப்பணையை ஆய்வு செய்யாததால், நேற்று முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் எம்.எல்.ஏ இருவரும் தி.மு.க தொண்டர்களுடன் தென்பெண்ணையாற்றில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு மதியம் 12 மணிக்கு அங்கு வந்த அதிகாரிகள் தடுப்பணை உடனே சரிசெய்யப்படும் என்று கூறியதையடுத்து போராட்டம் கைவிட்டப்பட்டது.

தொடர்ந்து விழுப்புரம் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்துப் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ``அணை உடையவில்லை. சேதம் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. சேதமடைந்த தடுப்புச் சுவரை கட்ட ரூ.7 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் தடுப்புச் சுவர் கட்டப்படும்” என்றார்.

பொன்முடி போராட்டம்
பொன்முடி போராட்டம்

இந்தநிலையில், தடுப்பணை உடைந்த விவகாரம் தொடர்பாக தலைமைப் பொறியாளர் அசோகன், கண்காணிப்புப் பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற்பொறியாளர் சுமதி உள்ளிட்ட நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக பொதுப்பணித்துறை.

இந்த விவகாரம் குறித்து விகடனிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, `` `தடுப்பணை உடையவில்லை, வெறும் மண்தான் அடித்துச் சென்றிருக்கிறது’ என்று நேற்று பேட்டி கொடுத்திருக்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

Vikatan

ஆனால், ஒரு மதகே அடித்துச் சென்றிருக்கிறது. அவர் கூறுவது போல வெறும் மண்தான் அடித்துச் சென்றது என்றால், எதற்காக அரசிடம் ரூ.7 கோடி கேட்கிறார் என்று தெரியவில்லை. தடுப்பணை உடைந்த விவகாரத்தை உடனடியாக விசாரணை செய்து அதற்குக் காரணமானவர்கள் அதிகாரிகளா அல்லது ஒப்பந்ததாரர்களா என்பதைக் கண்டறிய வேண்டும். தடுப்பணை கட்டிய ஒப்பந்ததாரர் மீதுதான் முதல் தவறு இருக்கிறது. ஆனால், அந்தத் தடுப்பணையைக் கட்டிய ஒப்பந்ததாரர் தற்போது வேறொரு தடுப்பணை கட்டிவருகிறாரம். இப்படியிருந்தால் என்னவென்று சொல்வது?” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு