Published:Updated:

இந்த அரசுக்கு தெரிந்ததெல்லாம் கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன்!

ரகளை கூட்டுகிறார் ராஜகண்ணப்பன்

பிரீமியம் ஸ்டோரி

“நான் அடிக்கடி கட்சி மாறவில்லை; மக்கள் நலனுக்காக அரசியல் நிலைப்பாடுதான் எடுக்கிறேன்!’’ - தன் மீதான குற்றச்சாட்டுக்கு இப்படி விளக்கம் கொடுக்கிறார், தி.மு.க-வில் மீண்டும் இணையவிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

ராஜகண்ணப்பனை பற்றி சிறு குறிப்பு இதோ...

ஜெயலலிதா 1991-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது அந்த அமைச்சரவையில் முக்கியமான மூன்று துறைகளுடன் செல்வாக்குடன் இருந்தவர் ராஜகண்ணப்பன். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க தோற்றவுடன் கட்சியிலிருந்து வெளியேறினார். யாதவர் சமூக தலைவராகவும் உருவானவர், 1996-ல் மக்கள் தமிழ் தேசம் கட்சியைத் தொடங்கினார். தனியாகவும் தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தும் இரண்டு தேர்தல்களைச் சந்தித்தார். ஒருகட்டத்தில் தி.மு.க-விலேயே இணைந்தார். இளையான்குடி தொகுதியில் தி.மு.கழக எம்.எல்.ஏ-வாக இருந்தவர், மீண்டும் அ.தி.மு.க-வுக்குச் சென்றார். 2009-ம் ஆண்டு சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் தோல்வியடைந்தார். அந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

அ.தி.மு.க-வில் இருந்தபோது - கட்சித் தொடக்க விழா
அ.தி.மு.க-வில் இருந்தபோது - கட்சித் தொடக்க விழா

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டானபோது ஓ.பி.எஸ் அணிக்குச் சென்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் கடுப்பான ராஜகண்ணப்பன், அ.தி.மு.க-வுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி, வெளியில் வந்தார். தி.மு.க-வுக்கு ஆதரவாக பிரசாரமும் செய்தார். இப்போது மீண்டும் தி.மு.க-வில் ஐக்கியமாகும் முடிவை எடுத்திருக்கிறார். இதற்காக, பிப்ரவரி 23-ம் தேதி மதுரை ஒத்தக்கடையில் பிரமாண்டமான விழா நடத்தி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணையவிருக்கிறார் ராஜகண்ணப்பன். விழாவுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தவரிடம் பேசினோம்...

“பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வெளியே சென்ற நீங்கள், மீண்டும் தி.மு.க-வில் இணைய என்ன காரணம்?’’

“நான் எதையும் எதிர்பார்த்து தி.மு.க-வில் இணையவில்லை. தமிழக மக்களின் நலனுக்காகத்தான் இணைகிறேன். அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமியும்

ஓ.பன்னீர்செல்வமும் மத்திய அரசுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு தமிழக உரிமைகளை இழந்து ஆட்சி நடத்திவருகிறார்கள். தி.மு.க-வால் மட்டுமே இதை மாற்ற முடியும். அதனாலேயே இணைந்து பணியாற்ற முடிவெடுத்தோம். இரண்டு லட்சம் பேர் இந்த இணைப்பு விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.’’

தி.மு.க-வில் இணைந்தபோது - ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவு...
தி.மு.க-வில் இணைந்தபோது - ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவு...

“ ‘அடிக்கடி கட்சி மாறுகிறார்’ என்று உங்கள்மீது விமர்சனம் வைக்கப்படுகிறதே?”

“நான் அடிக்கடி கட்சி மாறவில்லை. மக்கள் நலனுக்காக அரசியல் நிலைப்பாடுதான் எடுக்கிறேன். மோசமான ஆட்சியை நீக்க, இதுபோன்ற முடிவுகளை எடுக்கத்தான் வேண்டும். அப்படி விமர்சனம் செய்கிறவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை!’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“யாதவர் சமுதாயத்தில் உங்களுக்கு முன்பிருந்த ஆதரவு இப்போது இல்லை என்கிறார்களே?’’

‘‘சிலர் வெறுப்பில் விமர்சிப்பார்கள். என்னை நம்பும் மக்கள் அப்படியே இருக்கிறார்கள்.’’

ராஜகண்ணப்பன்
ராஜகண்ணப்பன்

“எடப்பாடி ஆட்சியில் யாதவர் சமூகத்தினருக்கு சரியான பிரதிநிதித்துவம் தராததால்தான் இந்த முடிவை எடுத்தீர்களா?’’

‘‘யாதவர் சமூகம் என்றில்லை, எந்தச் சமூகத்தினருக்கும் இந்த ஆட்சியில் நன்மை கிடைக்கவில்லை என்பதே உண்மை. அமைச்சர்கள் அனைவரும் கோமாளிகள்போல் பேசித் திரிகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன் மட்டும்தான்!’’

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தது... என மத்திய அரசுக்கு எதிரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

‘‘இவையெல்லாம் நாடகங்கள். இன்னும் பல மோசமான திட்டங்களுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஏற்கெனவே ஹைட்ரோ கார்பனுக்காக கிணறுகள் தோண்டுவதற்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்துசெய்யப்பட வில்லை. நீட் தேர்வை விலக்க எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகக் குரல்கொடுக்கவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த திராவிடக் கொள்கைகளை மறந்து பா.ஜ.க-வின் ஊதுகுழலாகவே இந்த ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்கள்.’’

இவர் போவதால் அவருக்குப் பதவி!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாதவர் சமுதாய மக்களின் வாக்குகள், தி.மு.க-வுக்குப் பெருமளவில் கிடைத்ததில் ராஜகண்ணப்பனின் பிரசாரத்துக்குப் பெரும் பங்கு இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர். முன்பிருந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் இப்போதும் அவருக்கு அந்தச் சமுதாய மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதை அ.தி.மு.க-வினருமே ஒப்புக் கொள்கின்றனர்.

அவர் தி.மு.க-வில் இணைவதால், மாநகராட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு விழும் யாதவர் வாக்குகளில் பெரியளவில் சரிவு ஏற்படும் என்ற கருத்தும் ஆளுங்கட்சியில் பரவிவருகிறது. அந்தச் சமுதாயத்தினரைத் திருப்திப்படுத்தும் நோக்கில், காலியாக உள்ள ராஜ்யசபா இடங்கள் மூன்றில் ஒன்றை யாதவர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் மதுரை எம்.பி-யான கோபாலகிருஷ்ணன் அல்லது கோகுல இந்திராவுக்கு வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவுசெய்துள்ளதாக ஒரு தகவல் பரவிவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு