Published:Updated:

உதவும் ஆளுங்கட்சிப்புள்ளி... கோட்டைவிட்ட காவல்துறை... ‘தில்லாலங்கடி’ பாலாஜி!

ராஜேந்திர பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜியும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அந்த அரசியல்புள்ளியும் பல ஆண்டுகளாகவே படு நெருக்கம். தொடக்க காலத்தில் பாலாஜியை அரசியலில் வளர்த்துவிட்டதே அந்த அரசியல்புள்ளிதான்.

தான் சிறுவயதில் ஆடிய ‘கண்ணாமூச்சி’ ஆட்டத்தை, கடந்த ஒரு வாரமாகத் தமிழகக் காவல்துறையுடன் ஆடிவருகிறார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 3.1 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர்மீது கடந்த நவம்பரில் வழக்கு பதியப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கிடைக்காத நிலையில், டெல்லியின் அனுசரணையை எதிர்பார்த்தார் ராஜேந்திர பாலாஜி. ஆனால், டெல்லியின் கதவுகளும் மூடப்பட்டதால், கைதிலிருந்து தப்பிக்க ஓட ஆரம்பித்தவர், ஓடுகிறார்... ஓடுகிறார்... ஓடிக்கொண்டேயிருக்கிறார். எட்டு தனிப்படைகளை அமைத்தும், டிசம்பர் 23-ம் தேதி வரை காவல்துறையால் அவரை நெருங்கக்கூட முடியவில்லை என்பது முதல்வர் அலுவலகத்தையே கொதிப்படையச் செய்திருக்கிறது. இந்தச் சூழலில், ‘ராஜேந்திர பாலாஜியின் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து சிலர் உதவுகிறார்கள்’ என்கிறது விவரமறிந்த வட்டாரம். உண்மை நிலவரத்தை அறிய, களமிறங்கினோம். கிடைத்த தகவல்களெல்லாம் `ஷாக்’ ரகம்!

உஷாரான பாலாஜி... கோட்டைவிட்ட காவல்துறை!

வழக்கமாக அரசியல் வி.ஐ.பி-க்களின் மீது நிலுவையிலுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் தேதி, அதன் தீர்ப்பு விவரங்களை உளவுத்துறை உன்னிப்பாகக் கண்காணிப்பது வழக்கம். ராஜேந்திர பாலாஜி மீது மோசடிப் புகார் எழுப்பப்பட்டு, அவர் முன்ஜாமீன் கோரியிருந்த மனு, டிசம்பர் 17-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்திருந்தது. ஆனாலும், அது குறித்த எந்த அப்டேட்டும் காவல்துறையிடம் இல்லாததால்தான், ராஜேந்திர பாலாஜி சுலபமாகத் தப்பிவிட்டார் என்கிறது காக்கிகள் வட்டாரம். இது குறித்து நம்மிடம் பேசிய தென்மண்டல காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர், “ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் காவல்துறை கோட்டைவிட்டது உண்மைதான். கடந்த டிசம்பர் 17-ம் தேதி, ‘தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து, தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அ.தி.மு.க நடத்தியது. விருதுநகரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ராஜேந்திர பாலாஜி தலைமையேற்றிருக்கிறார். காலை 11 மணியளவில், அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டவுடன், பாலாஜி உஷாராகிவிட்டார். ‘தான் கைதுசெய்யப்பட வாய்ப்புகள் அதிகம்’ என்பதை உணர்ந்தவர், வெவ்வேறு கார்களில் பயணித்து அங்கிருந்து தப்பிவிட்டார்.

உதவும் ஆளுங்கட்சிப்புள்ளி... கோட்டைவிட்ட காவல்துறை... ‘தில்லாலங்கடி’ பாலாஜி!

அவர் தொடுத்திருந்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரவிருப்பதால், டிசம்பர் 17-ம் தேதி காலையிலிருந்தே ராஜேந்திர பாலாஜியை மாவட்ட உளவுத்துறை போலீஸார் தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்வதைக் காவல்துறை மொழியில் ‘ஷேடோ வாட்சிங்’ என்பார்கள். ஆனால், அப்படி எந்த ஏற்பாடும் செய்யவில்லை. தீர்ப்பு வந்ததற்குப் பிறகு, சாவகாசமாக மாலை 4 மணிக்குக் கீழ்நிலை அதிகாரிகளுக்கு போன் போட்ட மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி, ‘ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்காருனு பாருங்கப்பா’ என்றிருக்கிறார். அதற்குள் பாலாஜி மாயமாகிவிட்டார். உளவுத்துறை, காவல்துறையின் மெத்தனமே பாலாஜி தப்பிப்பதற்கு முழுமுதற் காரணம்” என்றார் கோபமாக. இந்த விவகாரத்தில், காவல்துறை கோட்டைவிட்டது ஒருபக்கம் தகிப்பை உருவாக்கியிருக்கும் சூழலில், இந்தச் சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் மாவட்ட உளவுத்துறை அதிகாரி ஒருவரை ஆளுங்கட்சி அரசியல் புள்ளி நேரில் அழைத்துப் பேசியிருப்பதும், ராஜேந்திர பாலாஜி தப்பிப்பதற்கு அந்தப் புள்ளி பல வகைகளில் உதவியிருப்பதும்தான் தென்மாவட்டங்களில் அரசியல் வெப்பத்தைக் கூட்டியிருக்கிறது.

“நீ கவலைப்படாதே... நான் பார்த்துக்குறேன்!” - கைகொடுத்த ஆளுங்கட்சிப்புள்ளி

இது குறித்து விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம். “ராஜேந்திர பாலாஜியும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அந்த அரசியல்புள்ளியும் பல ஆண்டுகளாகவே படு நெருக்கம். தொடக்க காலத்தில் பாலாஜியை அரசியலில் வளர்த்துவிட்டதே அந்த அரசியல்புள்ளிதான். எதிரும் புதிருமான அரசியல் இயக்கங்களில் இருந்தாலும், இந்த இருவருக்கும் இடையிலான நட்பு மட்டும் ஒருபோதும் அறுந்துபோகவே இல்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஒரு குற்ற விவகாரத்தில் அந்த அரசியல்புள்ளியின் பெயர் அடிபட்டது. போலீஸ் நெருக்குதல் அதிகமானவுடன், அவர் தலைமறைவானார். அப்போது காவல்துறை அதிகாரிகளை அழைத்த பாலாஜி, ‘அண்ணன் பெயில் வாங்குற வரைக்கும் அவர்மேல கைவைக்க வேண்டாம்’ என்றிருக்கிறார். அப்படியே, போலீஸ் நடவடிக்கையும் மந்தமானது.

உதவும் ஆளுங்கட்சிப்புள்ளி... கோட்டைவிட்ட காவல்துறை... ‘தில்லாலங்கடி’ பாலாஜி!

இந்தப் பின்னணி முழுவதுமாகத் தெரியாத ஜெயலலிதா, அந்த அரசியல்புள்ளியின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்தத் தகவலை பாலாஜி மூலம் தெரிந்துகொண்ட அந்த அரசியல்புள்ளி, அதன் பிறகே வெளியே வந்தார். பாலாஜியின் ஏற்பாட்டில் சிறைச்சாலையிலேயே அந்தப் புள்ளிக்குச் சிறப்பான தடபுடல் கவனிப்பு நடந்தது. இந்த உதவியை அந்த அரசியல்புள்ளி எந்நாளும் மறக்கவில்லை.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில்கூட, விருதுநகர் மாவட்டத்தில் நடந்த டெண்டர் விவகாரங்கள், வேலை மாறுதல்களில் அரசியல்புள்ளியின் ‘சிபாரிசு’கள் உடனடியாக ‘ஓகே’ செய்யப்பட்டன. அரசியல்புள்ளி கைகாட்டிய அதிகாரிக்கு, ஆவினில் உயர் பொறுப்பையும் வாங்கிக்கொடுத்தார் பாலாஜி. மாதம் பிறந்தால், பாலாஜியிடமிருந்து மூன்று ஸ்வீட் பாக்ஸ்கள் தன் வீடு தேடி வந்துவிடும் என்பதால், எதிர்க்கட்சி என்கிறரீதியில் எந்தக் குடைச்சலையும் பாலாஜிக்கு அந்த அரசியல்புள்ளி தரவில்லை. இந்த நட்பு தற்போதும் பலமாக இருப்பதால், போலீஸ் தன்னை நெருக்கியவுடன் அவரைத் தொடர்பு கொண்டிருக்கிறார் பாலாஜி. ‘நீ கவலைப்படாதே. நான் இருக்கேன்ல, பார்த்துக்குறேன்... முன்ஜாமீன் வாங்குறதுக்கு உண்டான வேலையை மட்டும் சீக்கிரமா பாரு. தலைவருக்குச் சந்தேகம் வந்துட்டா, அப்புறம் என்னால எதுவும் பண்ண முடியாது’ என்று பாலாஜிக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார் அந்த அரசியல்புள்ளி.

இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 16-ம் தேதி, மாவட்ட உளவுத்துறை அதிகாரியை நேரில் அழைத்த அந்த அரசியல்புள்ளி, ‘பாலாஜி முன்ஜாமீன் மனுவுல உயர் நீதிமன்றம் எந்தத் தீர்ப்புக் கொடுத்தாலும் சரி, நீங்க கண்டுக்க வேண்டாம். தேவையில்லாம நீங்க கைவெச்சு, அதனால அ.தி.மு.க-காரங்க போராட்டம், மறியல்னு இறங்கிட்டா, தேவையில்லாத பிரச்னை வரும். அவர் முன்ஜாமீன் வாங்குறவரை கை வைக்காதீங்க’ என்றிருக்கிறார். இதனால்தான், ராஜேந்திர பாலாஜியைக் கண்காணிக்க எந்தக் காவலரும் பணியமர்த்தப்படவில்லை. தவிர, ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது ராஜபாளையம் அருகில் 30 கோடி ரூபாய் அளவுக்கு இடம் வாங்கியதாகப் புகார் எழுந்தது. இதை விசாரித்த ‘விநாயகர்’ பெயர்கொண்ட மாவட்ட உளவுத்துறை அதிகாரி, ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக ‘அது பொய்யான புகார்’ என்று காவல்துறை மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையை நம்பாத அப்போதைய டி.ஜி.பி ராமானுஜம், தனியாக அதிகாரிகளை அனுப்பி விசாரித்தார். அறிக்கை பொய் என்பது தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்படி, ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாகச் செயல்பட்ட அந்த ‘விநாயகர்’ பெயர்கொண்ட அதிகாரிதான், தற்போது விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவில் முக்கியப் பணியிலிருக்கிறார். அவர் ரூட்டில்தான் போலீஸ் நடவடிக்கைகள் ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு உடனுக்குடன் போகின்றன. இப்படி ஆங்காங்கே ஆட்களைவைத்து ‘தில்லாலங்கடி’யாகத் தப்பியிருக்கிறார் பாலாஜி” என்றனர்.

“பாலாஜியைக்கூட கைது பண்ண நமக்குத் துப்பில்லையா?” -
வறுத்தெடுத்த முதல்வர் அலுவலகம்!


ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டும், அவர் கைதுசெய்யப்படாமல் இருப்பது, முதல்வர் அலுவலகத்தைக் கொதிப்படையச் செய்திருக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி, விருதுநகர் மாவட்ட காவல் உயரதிகாரியை போனில் அழைத்த முதல்வர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர், “ஒரு ஆளை உருப்படியாகக் கண்காணிக்க முடியலை, கைதுசெய்ய முடியலை... எதுக்கு டிபார்ட்மென்ட்ல இருக்குறீங்க? சி.எம் ரொம்ப கோபமா இருக்கார். 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்வர் ஸ்டாலினை ரொம்ப பர்சனலாகவே சீண்டினார் ராஜேந்திர பாலாஜி. ‘குத்தாலத்துக்கு என்கூட குளிக்க வர்றியா’னு முதல்வரை அவர் கிண்டல் பண்ணினதை தி.மு.க-காரங்க யாரும் மறக்கவே இல்லை. ‘பாலாஜியைக்கூட கைது பண்ண நமக்குத் துப்பில்லையா’னு நேரடியாகவே சில அமைச்சர்கள் கேக்கறாங்க. என்ன செய்வீங்களோ தெரியாது, இந்த வாரத்துக்குள்ள நீங்க அரெஸ்ட் காட்டியாகணும்” என்று வறுத்தெடுத்துவிட்டாராம். அதன் பிறகுதான், மாவட்ட காவல்துறையிலிருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செய்திக்குறிப்பு வெளியாகியிருக்கிறது.

டிசம்பர் 17 ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன், முன்னாள் எம்.எல்.ஏ இன்பத்தமிழன் காரை வரவழைத்து சிட்டாகக் கிளம்பிய ராஜேந்திர பாலாஜி, காரில் ஏறியவுடன் தன் மொபைல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கிறார். கடைசியாக ராஜேந்திர பாலாஜியை மாவட்ட எல்லை வரை சென்று வழியனுப்பிவைத்தது, அவருக்கு நெருக்கமான அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் உதவியாளர்தானாம். தனக்குச் சகலமுமாக இருக்கும் ‘திருத்தங்கல்’ அடைமொழிப் பிரமுகருடன் வேறொரு நம்பரிலிருந்து பேசியிருக்கும் ராஜேந்திர பாலாஜி, சில பண விவகாரங்கள் தொடர்பாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இவர்கள் யாரையும் போலீஸ் இதுவரை அழைத்து விசாரிக்கவில்லை என்பதே பல்வேறு சந்தேகக் கேள்விகளை அரசியல் வட்டத்தில் எழுப்பியிருக்கிறது.

உதவும் ஆளுங்கட்சிப்புள்ளி... கோட்டைவிட்ட காவல்துறை... ‘தில்லாலங்கடி’ பாலாஜி!

கேரளாவில் சிக்னல்... கிறிஸ்துமஸுக்குள் கைது?

காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். “அந்த ஆளுங்கட்சி அரசியல்புள்ளியின் பங்களா, அவருடைய மில் உள்ளிட்டவற்றைக் கண்காணிக்கத் தீர்மானித்தோம். அதற்குக் காவல் மேலிடம் அனுமதியளிக்கவில்லை. அதேபோல, சிவகாசியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் பாலாஜிக்கு மிக நெருக்கம். அந்தத் தொழிலதிபரின் மில்லைக் கண்காணிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. கடைசியாக, பாலாஜிக்கு நெருக்கமான 143 பேரின் எண்களைச் சேகரித்து, அவர்களின் போன் விவரங்களைக் கண்காணிப்பில் வைத்தோம். இப்படிக் கண்காணிக்கப்பட்டதில், கடைசியாக ராஜேந்திர பாலாஜி கேரளாவிலிருந்து பேசியிருப்பது ‘சிக்னல்’ மூலம் தெரியவந்திருக்கிறது. தான் பெங்களூரு தப்பிவிட்டதாக ஒருபக்கம் தகவலைக் கசியவிட்டுவிட்டு கரூர், கோவை வழியாக, கேரளாவுக்குத் தப்பியிருக்கிறார் பாலாஜி. இன்னும் ஓரிரு நாளில் அவரைப் பிடித்துவிடுவோம்” என்றனர்.

ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்வதில் தீவிரமாக இருக்கிறாராம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் தங்கம் தென்னரசு. ‘உச்ச நீதிமன்றம் விடுமுறையில் இருப்பதால், ஜனவரி 2-ம் தேதிக்கு முன்னதாக அவருக்கு முன்ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்காக மெத்தனமாக இருக்கக் கூடாது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் பாலாஜியை அரெஸ்ட் காட்டியே ஆக வேண்டும்’ என்று கண்டிப்பான உத்தரவு ஆட்சி மேலிடத்திடமிருந்து வந்திருப்பதால், அவரை சல்லடைபோட்டுத் தேடுகிறது போலீஸ். இதே போன்ற வேலைவாய்ப்பு மோசடிப் புகார்தான் முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, நிலோபர் கபில் ஆகியோர் மீதும் பதியப்பட்டது. ஆனால், அவர்கள்மீது ஆக்‌ஷன் எடுக்க ஆளும் தரப்பு இப்படித் தீயாகப் பறந்ததில்லை. தேர்தல் காலகட்டத்தில் முதல்வர் ஸ்டாலினைப் படுமோசமாக ராஜேந்திர பாலாஜி விமர்சித்ததாலேயே, இந்த அளவுக்கு ஸ்பீடை ஆளும் தரப்பு அவர்மீது காட்டுகிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டால், கடந்த ஆட்சியில் ஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்தும் விசாரித்து, அவர்மீது புதிய வழக்குகளைப் போடவும் தீவிரமாகியிருக்கிறது தி.மு.க தரப்பு.

அ.தி.மு.க மேடையில் பேசும்போதெல்லாம், தன்னைத் தன்னடக்கமாக ‘சில்வண்டு’ என்று அழைத்துக்கொள்வார் ராஜேந்திர பாலாஜி. அந்தச் சில்வண்டு சிக்குமா?

மஞ்சள் டு வெள்ளை... சாய்த்த சந்திர புத்தி?

ஜாதகத்தின் மீது ராஜேந்திர பாலாஜிக்கு அதீத ஆர்வமும் நம்பிக்கையும் உண்டு. சமீபத்தில் ஒரு ஜோதிடரை அவர் சந்தித்திருக்கிறார். “உங்களுக்கு இப்போது ஏழரை சனி. தனுசு ராசி, குருதசையில் சந்திர புத்தி நடக்கிறது. பிப்ரவரி, 2023 வரை உங்களுக்கு நேரம் சரியில்லை. தலைமறைவு வாழ்க்கைதான் வாழ வேண்டும். நீதிமன்றப் படியேறவேண்டியிருக்கும். சந்திர புத்தி முடியும் வரை வெள்ளை நிற ஆடையை அணியுங்கள்” என்றிருக்கிறார் அந்த ஜோதிடர். இதையடுத்து, தான் அணிந்திருந்த மஞ்சள் நிறச் சட்டையை மாற்றி, வெள்ளை நிறச் சட்டைக்கு மாறியிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. அதேபோல, உட்காரும் சேர், பேனா, வீட்டு அறைகள், பயணிக்கும் காரின் சீட் எனச் சகலத்தையும் வெள்ளை நிறத்துக்கு மாற்றியிருக்கிறார். ‘வெள்ளைக்கு மாறியும் விடாமல் சந்திர புத்தி அவரைச் சாய்த்துவிட்டது’ என்கிறார்கள் பாலாஜிக்கு நெருக்கமான ஜாதக நம்பிக்கையாளர்கள்!