Published:Updated:

“ஸ்டாலினின் ஆரம்பம் அருமையா இருக்கு!” - ராஜேந்திர பாலாஜி ஓப்பன் டாக்

தேர்தல்னு வந்தா யாராவது ஒருத்தர் ஆட்சி அமைச்சுத்தானே ஆகணும்... கடந்த ஒரு வருஷமா அவங்களோட உழைப்பு, திட்டமிடல் முக்கியமானது.

பிரீமியம் ஸ்டோரி
அமைச்சராக இருந்த நாள்களில் இவர் பேசினாலே பரபரப்புதான்! ஊடகமோ, பொதுக்கூட்டமோ மைக்கைப் பார்த்துவிட்டால் போதும்... தி.மு.க உட்பட எதிர்க்கட்சியினரைப் பற்றி அதிரடியாகப் பேசுவார். அதேநேரம், ‘மோடி எங்கள் டாடி’, ‘எல்லாம் மேல உள்ளவன் பார்த்துக்குவான்’ என்றெல்லாம் பா.ஜ.க-வை மெய்ம்மறந்து புகழ்வார். இதனாலேயே இவர் அ.தி.மு.க-வா, பா.ஜ.க-வா என்ற குழப்பம் மக்களுக்கு மட்டுமல்ல... அ.தி.மு.க-வினருக்கே ஏற்படும். அவர்தான் ராஜேந்திர பாலாஜி! சிவகாசியிலிருந்து ராஜபாளையத்துக்கு மாறிப் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜியோடு சேர்த்து, விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளில் ஆறில் அ.தி.மு.க கூட்டணி தோற்றுள்ளது. இந்தநிலையில், தோல்விக்குப் பின் திருத்தங்கலிலுள்ள வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் ராஜேந்திர பாலாஜியைத் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘தி.மு.க வெற்றிபெறும் என்று நினைத்தீர்களா... அவர்கள் வெற்றிபெற்றதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘தேர்தல்னு வந்தா யாராவது ஒருத்தர் ஆட்சி அமைச்சுத்தானே ஆகணும்... கடந்த ஒரு வருஷமா அவங்களோட உழைப்பு, திட்டமிடல் முக்கியமானது. பிரசாரமெல்லாம் தரமா பண்ணுனாங்க. கடுமையா வேலை செஞ்சு வெற்றி பெற்றிருக்குறாங்க. மு.க.ஸ்டாலினோட உழைப்பைக் குறை சொல்ல முடியாது.’’

‘‘மு.க.ஸ்டாலினால் முதல்வராக முடியாது என்று தாங்கள் உட்பட அ.தி.மு.க தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தீர்களே?”

‘‘அரசியல் கட்சின்னா அப்படித்தான்! கட்சியோட நிலைப்பாட்டைத்தானே பேச முடியும்?’’

‘‘விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் ஆறில் தி.மு.க வெற்றிபெற்றுவிட்டதே... இதற்கு உட்கட்சி பிரச்னைதான் காரணமா?’’

‘‘அப்படியெல்லாம் கிடையாது. 10 வருஷம் அ.தி.மு.க ஆண்டுவிட்டது. ஒரு முறை தி.மு.க-வுக்கு வாய்ப்பு கொடுப்போம்னு மக்கள் நினைச்சுட்டாங்க.’’

‘‘பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததுதான் தோல்விக்குக் காரணம் என்று அ.தி.மு.க-வினரே கூறுகிறார்களே?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை.”

“ஸ்டாலினின் ஆரம்பம் அருமையா இருக்கு!” - ராஜேந்திர பாலாஜி ஓப்பன் டாக்

‘‘பா.ஜ.க-வுடன் கூட்டணி அ.தி.மு.க-வுக்கு பலமா... பலவீனமா?’’

‘‘ரெண்டும் இருக்கு. பலமான கட்சி என்று நினைச்சுத்தான் கட்சிகளோட கூட்டு சேருறாங்க. பலமில்லாத கட்சிகளோட கூட்டு சேருறதில்லை.’’

‘‘கடந்த காலங்களில் நீங்கள் பேசிய பேச்சுகள் சர்ச்சையாகின. அதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. மீம்ஸ் போட்டார்கள். இதைப் பற்றி நீங்கள் ஃபீல் செய்திருக்கிறீர்களா?’’

‘‘ரொம்ப வருத்தப்படுறேன். நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. ரொம்ப வேகமாகவும் கடுமையாகவும் பேசுறதை மக்கள் விரும்பலை. இந்தத் தேர்தலுக்குப் பின் என்னோட நடைமுறை எல்லாமே மாறும்.’’

‘‘வருங்கால அரசியலில் புதிய ராஜேந்திர பாலாஜியைப் பார்க்கலாமா?’’

‘‘நிச்சயமா. என்னோட நடவடிக்கைகளை மாத்திக்குவேன். மக்கள் என்ன விரும்புறாங்களோ அதுபோல் நடந்துக்குவேன். வேகத்தோடு செயல்படுவதைவிட விவேகத்தோடு செயல்படுவேன். மக்கள் வெறுக்கிற மாதிரி நடந்துக்கக் கூடாது என்கிறதுல கவனம் செலுத்துவேன்.’’

‘‘உங்களுக்கு எதிராகச் சிலர் செயல்பட்டதுதான் உங்கள் தோல்விக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறதே?’’

‘‘உண்மைதான். எல்லா கட்சியிலேயும் எனக்கு நண்பர்கள் இருக்காங்க. அதேநேரம், சொந்தக் கட்சியில எதிரிகளும் இருக்காங்க. இனி அந்த மாதிரி இல்லாம பார்த்துக்கணும். நடக்கிற ஒவ்வொரு சம்பவமும்தான் நம்மளை பக்குவப்படுத்துது. எல்லாம் ஒரு பாடம்தான்!’’

‘‘‘ஓரளவுக்கு இடங்களைப் பிடித்துள்ள அ.தி.மு.க எதிர்க்கட்சியாக, சிறப்பாகச் செயல்படுமா?’’

‘‘ஆம்... கடுமையா எதிர்க்கட்சிப் பணியை செய்வாங்க. அப்படித்தானே தி.மு.க போராடியது. அதுபோல, மீண்டும் உழைச்சு மக்களிடம் செல்வாக்கு பெறணும்.’’

‘‘ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?’’

‘‘இப்ப கொரோனா தீவிரமா பரவிக்கிட்டிருக்கு. கடுமையான காலகட்டத்துல ஸ்டாலின் முதலமைச்சரா பதவி ஏத்துருக்கார். அவரோட ஆரம்பம் அருமையா இருக்கு.’’

‘‘எதிர்க்கட்சி மீது வழக்குகள் போட்டு பழிவாங்குவார்கள் என்று நினைக்கிறீர்களா?’’

‘‘அது பத்தி எனக்குத் தெரியாது!’’

‘‘அமைச்சராக இருந்தபோது ‘மோடி எங்கள் டாடி’, ‘மேல உள்ளவன் பாத்துக்குவான்’ என்று நீங்கள் பேசியதை வைத்து பா.ஜ.க-வின் ஆளாக உங்களை எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ததை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?’’

‘‘நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். அனைத்து மதத்தையும் மதிப்பவன். கோயில்களுக்கு அதிகம் செஞ்சிருக்கேன். காலையில சாமி கும்பிட்டுட்டுத்தான் எந்த வேலையையும் ஆரம்பிப்பேன். என்னோட இந்தச் செயல்பாட்டை வெச்சு என்னை வேறு மாதிரியா சித்தரிச்சுட்டாங்க. ஊர்ல விசாரிச்சுப் பாருங்க... இஸ்லாமியர்களோட உறவினர்போல் உறவாடுவேன். அதுபோல நாலுமாவடியில நடக்கும் கிறிஸ்துவக் கூட்டங்களுக்கு பலமுறை போயிருக்கேன். ஆனா, என்னை ஒரு மதத்துக்கு மட்டும் உரிய ஆள்போல் சித்தரிச்சுட்டாங்க. இனி, அது மாதிரியான தோற்றம் வராத வகையில செயல்பட முடிவெடுத்துட்டேன்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு