Published:Updated:

ஒருங்கிணைப்பாளர் ஆவதற்கு, மா.செ-க்களுக்கு எவ்வளவு கொடுத்தார் ஓ.பி.எஸ்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

ஆர்.பி.உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.பி.உதயகுமார்

எப்போதுமே ஒரு விஷயத்தில் முடிவெடுக்கக் கொஞ்சம் கால அவகாசம் எடுப்பார். பின்னர், நல்ல தீர்வை கொடுப்பார்.

ஒருங்கிணைப்பாளர் ஆவதற்கு, மா.செ-க்களுக்கு எவ்வளவு கொடுத்தார் ஓ.பி.எஸ்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

எப்போதுமே ஒரு விஷயத்தில் முடிவெடுக்கக் கொஞ்சம் கால அவகாசம் எடுப்பார். பின்னர், நல்ல தீர்வை கொடுப்பார்.

Published:Updated:
ஆர்.பி.உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.பி.உதயகுமார்

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரம், மெல்ல மெல்லச் சாதியப் பிரச்னைகளுக்குள் அடியெடுத்துவைத்திருக்கிறது. அது தொடர்பாக எடப்பாடியுடன் ஆலோசனை மேற்கொள்ள, எம்.எல்.ஏ விடுதியிலிருந்து கிளம்பத் தயாரான முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமாரை நேரில் சந்தித்து, பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்...

“சசிகலா காலத்திலேயே ‘ஒற்றைத் தலைமை’ கோஷத்தை எழுப்பியவர் நீங்கள். இப்போது எடப்பாடியை ஆதரிப்பது ஏன்?”

“அம்மா மறைவுக்குப் பின்னர், அவரைப் போலவே திறமையாக, பல பிரச்னைகளை எடப்பாடி பழனிசாமி கையாண்டார். இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடியார் தன்னை நம்பியவர்களைக் கைவிடவில்லை. கட்சி, ஆட்சி என எல்லாச் சுமைகளையும் தாங்க எடப்பாடியார் முன்வந்தார். ஆனால், ஓ.பி.எஸ் அந்தச் சுமையைத் தாங்கத் தயாராக இல்லை. பேசவேண்டிய இடத்தில்கூட, பல நேரங்களில் மவுனம் காத்துவிட்டார். சட்டமன்றத்தில் அ.தி.மு.க ஆட்சிக்குப் பெரும்பான்மை கோரும் தீர்மானத்தின்போது, அமைதியாக இருந்து எங்களைப் போன்ற தொண்டர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். சட்டமன்றத் தேர்தலின்போது பிரசாரத்தைக்கூட ஒழுங்காகச் செய்யவில்லை.”

ஒருங்கிணைப்பாளர் ஆவதற்கு, மா.செ-க்களுக்கு எவ்வளவு கொடுத்தார் ஓ.பி.எஸ்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

“எல்லா விஷயங்களிலும் ஓ.பி.எஸ் அமைதியாக இருப்பது, ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யும்போதே உங்களுக்குத் தெரியாதா?”

“ஒருங்கிணைப்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்ட காலகட்டம் வேறு. இன்றைய சூழல் வேறு. 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டை ஆண்ட கட்சியின் தலைவராக இருக்கும் ஓ.பி.எஸ்., தீர்க்கமாகவும் விரைவாகவும் முடிவெடுக்க வேண்டும். ஆனால், அவரின் மௌனம் கட்சிக்குள் பல நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது. இனியும் குழப்பத்தை நாங்கள் சகித்துக்கொள்ள விரும்பவில்லை.”

“அ.தி.மு.க-வின் தொடர் தோல்விகளுக்கெல்லாம், ‘ஒற்றைத் தலைமை முடிவே’ சர்வலோக நிவாரணியாக அமைந்துவிடுமா?”

“நிச்சயமாக... உலக வரலாறும் அதுதான். எந்தக் கட்சியிலும் இரட்டைத் தலைமை இல்லை. தலைமைக்கு ஆலோசனை கூறுவதற்கு வேண்டுமென்றால் மூத்தவர்கள் இருப்பார்கள். ஆனால், ஒரு விஷயத்தில் உறுதியான முடிவை எடுக்க ஒற்றைத் தலைமையால்தான் முடியும். முடிவெடுக்கும் அதிகாரம் ஒருவர் கையில்தான் இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் இரண்டு பேரும் கையெழுத்து போடவேண்டும், இருவரிடமும் ஆலோசனை செய்ய வேண்டும் என்ற நிலையால்தான் கட்சி முடங்கியது. இதை நான்கரை ஆண்டுகளாகக் கண்கூடாக நானே பார்த்திருக்கிறேன். அதனால், வலிமையாக இருக்கும் எடப்பாடியார் வர வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம்.’’

“ஆனால், தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாகப் பன்னீர் கூறுகிறாரே?”

“அப்படியெல்லாம் இல்லை. 2,000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், 69 மாவட்டச் செயலாளர்களும் எடப்பாடியார் தான் தலைமை ஏற்க வேண்டும் என்று வழிமொழிந்திருக்கிறோம். (நக்கல் சிரிப்புடன்) ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகிய நான்கு பேரைத் தவிர அனைத்துத் தலைமைக் கழக நிர்வாகிகளும் எடப்பாடியாருக்கு ஆதரவு அளித்துள்ளனர். பெரும்பான்மைக் கருத்தை ஏற்றுக்கொண்டு விலகுவதுதான் ஓ.பி.எஸ்-ஸுக்கும், கட்சிக்கும் நல்லது. ஆனால், தொண்டர்களின் கோரிக்கைகளை அவர் பரிசீலிக்கவே தயாராக இல்லை.’’

“உயர்மட்டக்குழு அமைத்து, அவர்கள் சொல்லும் கருத்தை ஏற்பதாகவும், பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் சொல்லியிருக்கிறார்களே..?”

“பெரிய பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்கின்றனர். ஓ.பி.எஸ் குறிப்பிட்ட மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து, பேச்சுவார்த்தைக்குப் பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டோம். சமீபத்தில்கூட, அவர் சொன்ன நாளில், சொன்ன இடத்தில், சொன்ன நேரத்தில், கொட்டும் மழையில் இரவு 11 மணி வரை பேச்சுவார்த்தைக்காகக் காத்திருந்தோம். ஆனால், கடைசி நிமிடத்தில், ‘அவர் வரச் சாத்தியமில்லை’ என்று கூறிவிட்டனர். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்தான். ஆனால், ஏதோ ஒரு சக்தி பேச்சுவார்த்தைக்குத் தடையாக இருக்கிறது.”

“யார் அந்த சக்தி என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“எப்போதுமே ஒரு விஷயத்தில் முடிவெடுக்கக் கொஞ்சம் கால அவகாசம் எடுப்பார். பின்னர், நல்ல தீர்வை கொடுப்பார். அதுதான் ஓ.பி.எஸ்-ஸின் சுபாவம். ஆனால், இந்த முறை தடை ஏற்படுகிறது. அந்த சக்தி, தனிநபராகவோ, கட்சித் தலைவர்களாகவோகூட இருக்கலாம்.”

“எடப்பாடிக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர்களெல்லாம் பணம் கொடுத்து வாங்கப்பட்டதாகக் கூறுகிறார்களே?”

“ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டு, நான்கரை ஆண்டுகள் பதவியிலிருந்தாரே, அப்போது எவ்வளவு கொடுத்தார்... அவர் அதை வெளிப்படையாகச் சொல்லட்டும். பின்னர், நாங்கள் பதில் சொல்கிறோம்.”

“பொதுக்குழு நெருங்க நெருங்க ஓ.பி.எஸ் பக்கமிருந்தவர்களெல்லாம் அணி மாற... வேறு என்ன காரணம் இருக்கிறது?”

“கட்சியின் வளர்ச்சி குறித்து அவரின் நிலைப்பாடு ஒன்றும் இல்லை என்று எண்ணியவர்கள், எங்கள் பக்கம் வந்துவிட்டனர். அவ்வளவுதான். இதில் பணம் எதுவும் கைமாறவில்லை.”

“உங்களைப் போன்ற ஓ.பி.எஸ்-ஸின் சமூகத்தினரை வைத்தே, அவரை வசைபாட வைக்கிறார் எடப்பாடி என்ற குற்றச்சாட்டு குறித்து...”

“அம்மா மறைவின்போது, ஓ.பி.எஸ்-ஸை முதல்வராக்கும் முடிவை நாங்கள் யாரும் எதிர்க்கவில்லை. அப்போது, சின்னம்மா முதல்வராகவும் நாங்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், ‘தர்மயுத்தம்’ என்று ஒன்றைத் தொடங்கி முதன்முறையாகப் பஞ்சாயத்து இழுத்தது ஓ.பி.எஸ்-தான். அன்று தொடங்கிய பஞ்சாயத்துக்குத்தான் இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை. அவரின் அதிகாரத்துக்கோ, பதவிக்கோ, செல்வாக்குக்கோ பின்னடைவு என்று நினைத்தால், உடனே அவர் ‘அமைதி’ யுத்தத்தைத் தொடங்குவார். நான் உட்பட அனைவரும் கட்சியின் நலனுக்காகத்தான் பேசுகிறோம். இதில் சமூகப் பின்னணி எதுவுமில்லை.”

“அப்படியென்றால், ஓ.பி.எஸ்-ஸை சுயநலவாதி என்கிறீர்களா?”

“ம்... சாமானிய தொண்டராகக் கட்சியில் இணைந்து தமிழ்நாட்டின் உச்ச பதவிக்கு மூன்று முறை தேர்வு செய்யப்பட்டுவிட்டார். இதற்கு மேல் உயரமே இல்லை. ‘உழைப்பவரே உயர்ந்தவர்’ என்ற அடிப்படையில் அவர் விலகிக்கொண்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஒற்றைத் தலைமை விவகாரத்தைப் பேசிப் பேசிச் சலித்தேவிட்டது.”

“ஓ.பி.எஸ் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளை வைக்கிறீர்கள். ஆனால், ஜெயலலிதாவால் இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே?”

“அந்தக் காலம் வேறு. தற்போது அவரின் செயல்பாடு என்ன, எடப்பாடியாரின் செயல்பாடு என்ன என்பதைக் கட்சிக்காரர்கள் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். தி.மு.க-வை எதிர்க்கும் நிலை வரும்போதெல்லாம் ஓ.பி.எஸ் பின்வாங்குகிறார். அவரால் எப்படி எங்களை வழிநடத்த முடியும்... ஆனால், எடப்பாடியார் தி.மு.க எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார். அதுதானே அ.தி.மு.க-வின் அடிப்படையே. ஓ.பி.எஸ்-ஸின் தவப்புதல்வனும், அ.தி.மு.க-வின் ஒற்றை எம்.பி-யுமான ரவீந்திரநாத், ஸ்டாலினைச் சந்தித்து, ‘ஆட்சி நன்றாக இருக்கிறது!’ என்று சான்றிதழ் கொடுக்கிறாரென்றால் அ.தி.மு.க என்ற கட்சி எதற்கு... கட்சிக்குப் பெரிய பூட்டுப்போட்டு, சாவியை ஸ்டாலினிடமே கொடுத்துவிடலாமே...”

ஒருங்கிணைப்பாளர் ஆவதற்கு, மா.செ-க்களுக்கு எவ்வளவு கொடுத்தார் ஓ.பி.எஸ்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

“ஒற்றைத் தலைமை விவகாரம் சாதியப் பிரச்னை நோக்கி நகர்ந்திருக்கிறதே... உங்களை வசைபாடிக்கூட போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றனவே?”

“ஆம்... வேண்டுமென்றே, செயற்கையாக இந்தப் பிரச்னை உருவாக்கப்படுகிறது. என் இனத்தையும், அதைச் சார்ந்த நபர்களையும் அ.தி.மு.க எப்படி உயர்த்திப் பிடித்தது என்று அனைவருக்கும் தெரியும். பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவருக்குக் கிடைக்காத முதல்வர் பதவி ஓ.பி.எஸ்-ஸுக்கு அ.தி.மு.க-வால்தான் கிடைத்தது. அதனால்தான், முக்குலத்தோர் இன மக்கள் அ.தி.மு.க மீது எப்போதும் பாசமும் பற்றும் வைத்திருக்கின்றனர். அ.தி.மு.க-வின் வாக்குவங்கியாக இருக்கும் அவர்களை, திசைதிருப்பவே வதந்திகள் பரப்பப்படுகின்றன.”

“யார் வதந்தியைப் பரப்புகிறார்கள் என்று வெளிப்படையாகச் சொல்லலாமே..?

“ஓ.பி.எஸ் தரப்புதான்... முக்குலத்தோர் சமூகத்தில் பல ஆளுமைகளை அ.தி.மு.க உருவாக்கியிருக்கிறது. ஆனால், அ.தி.மு.க-வை விட்டு வெளியேறியவர்களை என் இன மக்கள் ஆதரிப்பதில்லை என்பதற்கு திருநாவுக்கரசு, சேடப்பட்டி முத்தையா, நெல்லை கருப்பசாமி பாண்டியன், ராமநாதபுரம் சத்தியமூர்த்தி ஆகியோரே உதாரணம். மக்கள் இயக்கத்தின் பக்கமே நின்றிருக்கிறார்கள் என்பதை ஓ.பி.எஸ் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.”

“இரட்டை இலைச் சின்னம் முடங்க வாய்ப்பிருப்பதாகப் பன்னீர் தரப்பு கூறியிருக்கிறதே..?”

“அதுதான் எங்கள் கொந்தளிப்புக்குக் காரணமே. பிரச்னை வரும்போது அது குறித்து நிர்வாகிகளுடன் விவாதிக்காமல், வக்கீல்களுடனேயே பேசிக்கொண்டிருக் கிறார்கள். ஏற்கெனவே சின்னத்தை முடக்கிய கசப்பான அனுபவம் இருக்கும் நிலையில், இது போன்று பேசுவது நல்லதல்ல. இப்போதுகூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை. பெரும்பான்மை நிர்வாகிகளின் கருத்தைப் பரிசீலனை செய்வதாக அவர் கூறினால், கட்சியில் அவருக்குண்டான மதிப்பு கிடைக்கும். ஜூலை 11-ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. நன்றாக யோசித்து, நல்ல முடிவை எடுக்கட்டும்”