Published:Updated:

பண மோசடி வழக்கு: ஒத்திவைக்கப்பட்ட ஜாமீன் மனு விசாரணை! - முன்னாள் அமைச்சர் தலைமறைவு?!

விசாரணைக்கு ஆஜராகாமல் சரோஜாவும அவரின் கணவரும் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எப்படியும் முன்ஜாமீன் கிடைத்துவிடும் என்று நினைத்த சரோஜாவுக்கு, வாய்தா மேல் வாய்தாவாக விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியைத் தந்திருக்கிறது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட அதிமுக முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் இருக்கிறார். இந்த நிலையில், அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணயை மூன்றாவது முறையாகத் தள்ளி வைத்திருக்கிறது நாமக்கல் நீதிமன்றம்.

நாமக்கல் நீதிமன்றம்
நாமக்கல் நீதிமன்றம்
நாமக்கல்: போலி பணி ஆணை; வேலை வாங்கித் தருவதாக ரூ.24 லட்சம் மோசடி - அதிமுக கிளைச் செயலாளர் கைது!

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தொடர்ச்சியாக ரெய்டு நடத்தப்படுகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில், முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜாவுக்கு எதிராக அவரின் உறவினரான குணசீலன் என்பவர், ராசிபுரம் காவல் நிலையத்தில், கடந்த ஆகஸ்ட், 28 -ம் தேதி ஓர் அதிரடிப் புகாரைத் தெரிவித்திருந்தார்.

குணசீலன்
குணசீலன்

சத்துணவு அமைப்பில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 15 பேரிடம் ரூ. 76,50,000 வசூலித்துத் தரச்சொல்லி பெற்றுக்கொண்டதோடு, அவர்களுக்கு வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் சரோஜா ஏமாற்றிவிட்டதாக புகார் தெரிவித்திருந்தார். அதன்பிறகு, அந்த புகார் சைலன்ட் மோடில் இருந்தது. குணசீலனும் அது குறித்துப் பேசாமல் அமைதி காத்தார். இந்த நிலையில், குணசீலனின் புகார் அடிப்படையில், சரோஜாமீது 406, 420, 506/1 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், கடந்த மாதம் 26 -ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் சரோஜா தரப்பில் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் கடந்த 29 -ம் தேதி தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 பண மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

பின்னர், கடந்த 1-ம் தேதி அந்த மனு மீதான விசாரணையின்போது, விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று மீண்டும் முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன்ஜாமீன் மனு, நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை வருகிற 15 -ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார். இதற்கிடையில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராகாமல் சரோஜாவும், அவரின் கணவரும் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சரோஜா
சரோஜா

எப்படியும் தங்களுக்கு முன்ஜாமீன் கிடைத்துவிடும், அதன்பிறகு வெளியில் வரலாம் என்று நினைத்த சரோஜாவுக்கு, ஜாமீன் கிடைக்காமல் வாய்தா மேல் வாய்தாவாக விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியை தந்திருக்கிறதாம். ஆனால், குணசீலனோ, ``போலீஸ் விசாரணைக்கு அழைத்தும் ஒருமுறைகூட அவர் ஆஜராகவில்லை. கணவரோடு செல்போன்களை ஆஃப் செய்துவிட்டு, தலைமறைவாக இருக்கிறார். ஆனால், கோர்ட் மூலம் ஜாமீன் வாங்க முயல்கிறார்கள். எங்கள் வழக்கறிஞர் குறுக்கீடு செய்வதால், சரோஜாவுக்கு ஜாமீன் கிடைப்பது தள்ளிப்போகிறது. அவருக்கு ஜாமீன் கிடைக்கவிட மாட்டேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு