அலசல்
Published:Updated:

‘நவீன விஞ்ஞானி’ செந்தில் பாலாஜி! - கலாய்க்கிறார் முன்னாள் ‘விஞ்ஞானி’ செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
News
செல்லூர் ராஜூ

தி.மு.க தலைவரேகூட ‘நவீன விஞ்ஞானி’ என்றெல்லாம் என்னைக் கிண்டல் செய்திருக்கிறார்... இனிமேல் அப்படி என்னை யாரும் கிண்டல் செய்ய முடியாது.

ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக வாளைச் சுழற்ற ஆரம்பித்திருக்கிறது தி.மு.க அரசு. போதாக்குறைக்கு மத்திய தணிக்கைக்குழுவும் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளைப் புட்டு புட்டுவைத்துள்ளது. இதற்கிடையே கூட்டுறவுத்துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் மோதல்கள் களைகட்டுகின்றன. இப்படியான சூழலில், நாம் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அசராமல் பதில் தருகிறார் கூட்டுறவுத்துறையின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

.“கடந்த ஆட்சியில், கூட்டுறவு வேளாண்மை வங்கிகளில் வழங்கப்பட்ட விவசாயக்கடன் தள்ளுபடிகளில் மோசடி நடைபெற்றிருப்பதாக தி.மு.க அரசு குற்றம்சாட்டியிருக்கிறதே?’’

“விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடனை தன்னிச்சையாக யாரும் வழங்கிட முடியாது. மாவட்ட கூட்டுறவு வங்கியின் சூப்பர்வைசர், கள ஆய்வாளர், சங்கத்தின் செயலாளர் ஆகியோர் முதலில் ஆய்வுசெய்து ஒப்புதல் வழங்க வேண்டும். இவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு கடனை அனுமதிக்கும். இதில் சில சங்கங்களின் நிர்வாகிகள் தவறிழைத்திருந்தாலோ அல்லது தணிக்கையைச் சரிவர முடிக்காமல் இருந்தாலோ அந்தக் குறிப்பிட்ட சங்கத்தின் வழியே கடன் பெற்றவர்களுக்குத் தள்ளுபடி கிடைக்காது. இப்படி விவசாயக் கடன் பெறுவதற்கும், தள்ளுபடி சலுகைகளைப் பெறுவதற்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் இருக்கும்போது எப்படித் தவறு நடக்கும்?’’

“ஆனால் சேலம், ஈரோடு மாவட்டங்களில் மற்ற பகுதிகளைவிடவும் ஐந்து மடங்கு அதிகம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டமன்றத்திலேயே குற்றம்சாட்டியிருக்கிறாரே?’’

“துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சருக்கு ஒன்றும் தெரியவில்லை. நகைக்கடன் தள்ளுபடி குறித்து அன்றைய முதல்வர் மதியம் 2 மணிக்கு அறிவிப்பு கொடுக்கிறார். ஆனால், அன்று மாலை 4 மணிக்கே தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை அறிவித்துவிட்டது. அதனால், முதல்வரின் சட்டமன்ற அறிவிப்பு அதோடு நின்றுவிட்டது. அரசாணைகூட வெளியாகவில்லை. ஆக, கடன் தள்ளுபடியே கொடுக்கப்படாத நிலையில், அதில் மோசடி நடந்திருப்பதாக அமைச்சர் சொல்கிறார் என்றால், அவருக்கு அப்படிப் பேசச் சொல்லி எழுதிக் கொடுத்தவர்கள் யாரென்று தெரியவில்லை!’’

“கணினிக்கும் ஆன்லைனுக்கும் வித்தியாசம் தெரியாத ‘நவீன விஞ்ஞானி’ செல்லூர் ராஜூ என உங்களை அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளாரே?’’

“ஆட்சிப் பொறுப்பேற்று 45 நாள்களே ஆகின்றன. இப்போதே விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அமைதிகாத்துவருகிறேன். சொல்ல வேண்டியவற்றை மென்மையாகவும் சொல்லிவருகிறேன். அதாவது, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் 4,449 சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசின் வெகுமதியும் நமக்குக் கிடைத்துள்ளது. அடுத்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை ஆன்லைன்படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. நாங்கள் திரும்பவும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருந்தால், இந்நேரம் அந்த வேலைகளை முடித்திருப்போம். அதைத்தான் நான் சொன்னேன். அமைச்சர் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு பேச வேண்டும்.’’

‘நவீன விஞ்ஞானி’ செந்தில் பாலாஜி! - கலாய்க்கிறார் முன்னாள் ‘விஞ்ஞானி’ செல்லூர் ராஜூ

“சசிகலாவைக் குறிப்பிட்டு, ‘சின்னம்மா, ஜெ-வுக்கு பாதுகாப்பாக இருந்தவர்’ என்றெல்லாம் மதிப்புடன் நீங்கள் பேசிவருவது, கட்சிக்குள் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறதா?’’

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தவிர கட்சியில் வேறு யாரையும் எனக்குத் தெரியாது. யாரிடமும் எதற்காகவும் போய் நின்றதும் இல்லை. அந்தம்மாவால் (சசிகலா) அடையாளம் காட்டப்பட்டு, பெரும் பதவிகளுக்கு வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள்தான் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஆனாலும்கூட யாரையும் எடுத்தெறிந்து பேசும் வழக்கம் என்னிடம் இல்லை; அரசியல் நாகரிகத்துடன்தான் எப்போதும் பேசிவருகிறேன். அதனால், எனக்கு எந்த நெருக்கடியும் வந்ததில்லை.’’

“சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் இயற்றினார்கள். மதுரை மாவட்டத்தில் நீங்கள் தீர்மானம் இயற்றினீர்களா?’’

“மதுரை மாவட்டத்தில்தான் முதலில் தீர்மானம் நிறைவேற்றினோம். மேலும், எங்கள் மாவட்டத்திலுள்ள கட்சியின் இளைஞரணி துணைச் செயலாளர் ஒருவர் அந்தம்மாவிடம் பேசியதாகத் தெரிந்தவுடன் அவரைக் கூப்பிட்டுக் கண்டித்தேன். ‘யாரும், எந்த ஊடகம் வழியாகவும் பேசக் கூடாது’ என்று மதுரை மாவட்டத்தில்தான் கண்டனத் தீர்மானம் போட்டோம். அதன் பிறகே மற்ற மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் போட்டுவருகின்றனர். என்ன... நாங்கள் ‘சசிகலா’ என்று பெயரைக் குறிப்பிடாமல் தீர்மானம் போட்டுவிட்டோம். அதற்காக மறுபடியுமா தீர்மானம் போட முடியும்?’’

“சமீபத்தில் வெளியான ஆடியோவில், ‘இனி அரசியலிலிருந்து ஒருபோதும் விலக மாட்டேன்’ என்கிறாரே சசிகலா?’’

“அது அவருடைய எண்ணம். நமக்கென்ன தெரியும்? அ.தி.மு.க-வுக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று எங்கள் கட்சித் தலைமை ஒன்றுகூடி முடிவெடுத்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில், அவரைப் பற்றியே திரும்பத் திரும்பக் கேட்டால், அது சாயம் பூசுகிற வேலையாகத்தான் இருக்கும். வேறு கேள்வியைக் கேளுங்கள்.’’

“தெர்மகோல் விஞ்ஞானி என்ற உங்களின் கடந்தகால மீம்ஸ்களுக்குப் போட்டியாக, ‘அணில் மீம்ஸ்’கள் வரிசைகட்டுவதைப் பார்த்தீர்களா?’’

“ `நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்...’ என்று தலைவர் ஒரு பாட்டில் சொன்னதைத்தான் நானும் சொல்கிறேன். தி.மு.க தலைவரேகூட ‘நவீன விஞ்ஞானி’ என்றெல்லாம் என்னைக் கிண்டல் செய்திருக்கிறார்... இனிமேல் அப்படி என்னை யாரும் கிண்டல் செய்ய முடியாது. அதுதான், இப்போது செந்தில் பாலாஜி ‘நவீன விஞ்ஞானி’யாகிவிட்டாரே... ‘மீம்ஸ் க்ரியேட்டர்ஸ்’களிடமிருந்து என்னைக் காப்பாற்றிய செந்தில் பாலாஜிக்கு எனது அன்பான வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்!’’