Published:Updated:

பா.ஜ.க வளர்வதாக கூறுவதெல்லாம் கற்பனைக்குரியது! - செல்லூர் ராஜு சுரீர்!

செல்லூர் ராஜு
பிரீமியம் ஸ்டோரி
செல்லூர் ராஜு

அ.தி.மு.க என்கிற மாபெரும் இயக்கத்தை விமர்சிக்கும்போது, தொண்டனாக எங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறோம்.

பா.ஜ.க வளர்வதாக கூறுவதெல்லாம் கற்பனைக்குரியது! - செல்லூர் ராஜு சுரீர்!

அ.தி.மு.க என்கிற மாபெரும் இயக்கத்தை விமர்சிக்கும்போது, தொண்டனாக எங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறோம்.

Published:Updated:
செல்லூர் ராஜு
பிரீமியம் ஸ்டோரி
செல்லூர் ராஜு

‘சென்ற வாரம் செல்லூர் ராஜூ வாரம்’ என்பதுபோலப் பரபர கருத்துகளால் பட்டாசு கொளுத்தினார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. “அ.தி.மு.க மேல் துரும்பை வீசினால், திருப்பி தூணைக்கொண்டு வீசக்கூடியவங்க நாங்க”, “தமிழ்நாட்டில் கூட்டணிவைக்காமல் தனித்துப் போட்டியிடத் தயாரா?” என்று அவர் வீசிய கணைகள் கமலாலயத்தைத் துளைத்தன. சூட்டோடு சூடாக அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“அ.தி.மு.க-வும், பா.ம.க-வும் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க-வையே விமர்சிப்பதன் பின்னணி என்ன?”

“பா.ஜ.க தரப்பில்தான் முதலில் மோசமாகப் பேச ஆரம்பித்தார்கள். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பா.ஜ.க-தான் எதிர்க்கட்சி என்பதுபோலவும், அ.தி.மு.க செயல்படாததுபோலவும் தொடர்ந்து பேசிவருகிறார்கள். ஆரம்பத்திலேயே இந்தப் போக்கு வேண்டாம் என்று நட்புரீதியில் சொல்லியிருக்கிறோம். ஆனாலும் ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 எம்.பி-க்களை வெல்வோம்’ என்று கூட்டணிக்கு முரணாகத் தன்னிச்சையாகத் தங்கள் கருத்துகளைப் பகிர்கிறார்கள். அதற்கான எதிர்வினையாகத்தான் நாங்கள் பேசவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.”

“உங்களின் கருத்துகளைத் தலைமையே ரசிக்கவில்லையே?”

“அ.தி.மு.க என்கிற மாபெரும் இயக்கத்தை விமர்சிக்கும்போது, தொண்டனாக எங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறோம். அதேநேரத்தில் தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள்தான்.”

“ஆனால், தலைமையை மீறி ‘நிரந்தர மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜு’ என்று மதுரையிலும் ‘நிரந்தரப் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்’ என்று ஓ.பி.எஸ் ஊரான தேனியிலும் போஸ்டர் யுத்தங்கள் நடக்கின்றனவே?”

“இந்த போஸ்டர் அரசியலெல்லாம் எங்கள் கட்சியினர் செய்கிறார்களா அல்லது பிரச்னையை உருவாக்கப் பிற கட்சியினர் செய்கிறார்களா என்பதே தெரியவில்லை. ஒருவேளை எங்கள் கட்சியினரே செய்திருந்தால், இனி அதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அ.தி.மு.க-வுக்கு இரட்டைத் தலைமைதான்.”

“அப்படியானால், இனி அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவி கிடையாதா?”

“அம்மா பொதுச்செயலாளராக இருக்கும்போது என்ன பணி செய்தாரோ, அதையே ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்கிறார்கள். இவர்களே கிளைக் கழகம் முதல் மாவட்டக் கழகம் வரை உட்கட்சித் தேர்தலையும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர். இப்போது வரை எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்.”

பா.ஜ.க வளர்வதாக கூறுவதெல்லாம் கற்பனைக்குரியது! - செல்லூர் ராஜு சுரீர்!

“அ.தி.மு.க-வைப் பலவீனப்படுத்தி பா.ஜ.க வளர்வதாகக் கூறப்படுகிறதே..?”

“அப்படியான ஒன்று சாத்தியமே இல்லை. அ.தி.மு.க தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா வழியில் வந்த பேரியக்கம். தமிழ்நாடு, தந்தை பெரியாரின், அண்ணாவின் பூமி. எனவே அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தி பா.ஜ.க வளர்வதாகக் கூறுவதெல்லாம் கற்பனைக்குரியதாக இருக்குமே ஒழிய நடைமுறைக்குச் சாத்தியம் ஆகாது.”

“பெரியார் வழி வந்த கட்சி என்று கூறுகிறீர்கள். பிறகு, பா.ஜ.க-வுடன் கூட்டணி ஏன்?”

“அறிஞர் அண்ணா சொன்னதுபோல, கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு மாதிரி. கொள்கை என்பது வேட்டி மாதிரி. வேட்டியை நாங்கள் எப்போதும் விடுவது கிடையாது. தேர்தலில் வெற்றிதான் நோக்கம். அந்த நேரத்தில் வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகத்தான் கூட்டணியெல்லாம். அதேசமயம், பா.ஜ.க-வோடு கூட்டணி இல்லாமலும் பல தேர்தல்களில் வெற்றி கண்டிருக்கிறோம். 2014- மக்களவைத் தேர்தலில், சேலை கட்டிய சிங்கமாக அம்மா தனித்து நின்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாரே... தேவை இருந்தால் மட்டுமே கூட்டணி!”

“மத்திய அரசுக்குப் பயந்துதான் பா.ஜ.க-வுடன் இன்னும் கூட்டணியில் இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றனவே?”

“தி.மு.க-வை வேண்டுமானால் அப்படிச் சொல்லலாம். உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருக்கும்போது, ஒரு பக்கம் சி.பி.ஐ விசாரணை, மறுபக்கம் தி.மு.க-வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நாங்கள் ஒருபோதும் அப்படி பயந்து கூட்டணி அமைத்தது கிடையாது. அ.தி.மு.க மீது வேறு குறை சொல்ல முடியாததால், இப்படி விமர்சித்து ஊரை ஏமாற்றுகிறார்கள். நாங்கள் எதற்கும், யாருக்கும் அஞ்சாதவர்கள்!”

“சசிகலா இல்லாதது அ.தி.மு.க-வுக்கு பலவீனமா, இல்லையா?”

“அப்படியெல்லாம் ஏதும் இல்லை. இப்போதைக்குக் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று தலைமை சொல்கிறது. ஏனெனில் புரட்சித்தலைவர், அம்மா என மாஸ் லீடர்கள் இருந்தபோது இருந்த செல்வாக்கைவிட இப்போது அதிக எழுச்சியோடு நாங்கள் இருக்கிறோம்.”

“தி.மு.க-வினர் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று பெருமிதப்படுவது குறித்து?”

“இன்று இவர்கள் பேசக்கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு வித்திட்டவரே எம்.ஜி.ஆர்-தான். அ.தி.மு.க ஆட்சியில்தான் தந்தை பெரியாரின் கனவுகளெல்லாம் நிறைவேறின. அதுதான் உண்மையான திராவிட மாடல். தி.மு.க-வினர் எம்.ஜி.ஆருக்கு நன்றிக்கடன் பட்டவர்கள்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism