Published:Updated:

என்மீது பழி போட்டு தப்பிக்க நினைக்கிறார்கள்! - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.பி.வேலுமணி

2017 வரை என்மீது எந்தப் புகாரும் இல்லை. எடப்பாடி அண்ணன் முதல்வராக வந்த பிறகுதான் என்மீது பல்வேறு ஊழல் புகார்களை தி.மு.க சுமத்தத் தொடங்கியது.

என்மீது பழி போட்டு தப்பிக்க நினைக்கிறார்கள்! - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

2017 வரை என்மீது எந்தப் புகாரும் இல்லை. எடப்பாடி அண்ணன் முதல்வராக வந்த பிறகுதான் என்மீது பல்வேறு ஊழல் புகார்களை தி.மு.க சுமத்தத் தொடங்கியது.

Published:Updated:
எஸ்.பி.வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.பி.வேலுமணி

அ.தி.மு.க செயற்குழுக் கூட்டப் பரபரப்புகள் முடிந்திருந்தன. சென்னையிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் இருந்தார் உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி. ஏராளமான கட்சி நிர்வாகிகளோடு தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். இதுவரை எங்கும் வாய் திறக்காதவரிடம் வருமான வரித்துறை சோதனை, ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் புகார், முதல்வரின் விமர்சனம், அ.தி.மு.க பிரச்னைகள் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

“சென்னை நகரம் ஒட்டுமொத்தமாக மழைநீரில் மிதப்பதற்கு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நீங்கள் செய்த ஊழல்தான் காரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறாரே?”

“ஸ்மார்ட் சிட்டி திட்டம், மத்திய அரசு கொண்டுவந்தது. அப்போது முதல்வராக இருந்த அம்மா, பிரதமரிடம் பேசி தமிழ்நாட்டுக்கு 11 நகரங்களில் அதைச் செயல்படுத்த அனுமதி வாங்கி வந்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, அனுமதிக்கப்பட்ட 11 மாநகராட்சிகளின் எல்லாப் பகுதிகளுக்கும் பயன்படுத்த முடியாது. ஆனால், நான்தான் மத்திய அமைச்சரைச் சந்தித்து, ‘அந்த நிதியை மாநகராட்சியின் எல்லாப் பகுதிகளுக்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கோரினேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் நினைக்கிறபடியெல்லாம் பயன்படுத்திவிட முடியாது. மத்திய அரசு, அதன் கீழ் இயங்கும் ஐ.ஏ.எஸ் தலைமையிலான ஓர் அமைப்பு, நிதித்துறைச் செயலாளர் தலைமையிலான அமைப்பு என மூன்று தரப்பிடமும் பணி குறித்து விளக்கி, அவர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடியும். ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது, வெறும் மழைநீர் வடிகால் அமைப்பது மட்டுமல்ல. சாலைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் அமைப்பது எனப் பல பணிகளை உள்ளடக்கியது. இதெல்லாம் முதல்வருக்குத் தெரியுமா... அல்லது அவருக்குக் கொடுக்கப்படும் தவறான தகவல்களைவைத்துப் பேசுகிறாரா எனப் புரியவில்லை.”

என்மீது பழி போட்டு தப்பிக்க நினைக்கிறார்கள்! - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

“ஆனால் சாலைகள், பூங்காக்கள் போன்றவற்றை அமைத்ததில் சூழலியல் சார்ந்த, மழைவெள்ளப் பிரச்னை பற்றிய எதிர்காலத் திட்டமிடல்கள் செய்யப்படவில்லை என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு. அதற்கு என்ன சொல்கிறீர்கள்?”

“தவறான குற்றச்சாட்டு. மழை இவ்வளவு தூரம் பெய்யாது என மேம்போக்காக இருந்துவிட்டார்கள். அதுதான் இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம். சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முடிந்த அடுத்த நாளே சென்னையிலுள்ள மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணியைத் தொடங்கியிருக்க வேண்டும். சென்னை நகரத்தின், 2,100 கி.மீ மழைநீர் வடிகால்களில் 1,600 கி.மீ தூர்வாரியிருந்தாலே போதுமானது. மழைநீர் தேங்கியிருக்காது. அதையும் மீறித் தேங்கும் நீரை வெளியேற்ற மோட்டார்கள் தயார்நிலையில் இருந்திருக்க வேண்டும். சென்னை குடிநீர் வாரியம், மாநகராட்சி உள்ளிட்ட அமைப்புகளோடு இணைந்து ஆலோசித்து, முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். இவ்வளவையும் செய்யாமல் விட்டுவிட்டு, அதை மறைப்பதற்கு என்மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துவிடலாம் என நினைக்கிறார்கள்.”

“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்தவித ஊழலும் நடக்கவில்லை என்கிறீர்களா... எந்த ஆதாரமும் இல்லாமலா முதல்வரே உங்கள் பெயரைக் குறிப்பிட்டு குற்றம்சாட்டுவார்?”

“2017 வரை என்மீது எந்தப் புகாரும் இல்லை. எடப்பாடி அண்ணன் முதல்வராக வந்த பிறகுதான் என்மீது பல்வேறு ஊழல் புகார்களை தி.மு.க சுமத்தத் தொடங்கியது. அம்மா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வையும், எடப்பாடி தலைமையிலான அரசையும் காப்பாற்றியதில் தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலருக்கும் பங்கு உண்டு என்றாலும், என்னுடைய பங்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஏதாவது கலாட்டா செய்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என ஸ்டாலின் நினைத்ததற்கு மாறாக, 2019 இடைத்தேர்தலிலும் எட்டு இடங்களைக் கைப்பற்றி ஆட்சி சிறப்பாகத் தொடர நான் அடித்தளம் அமைத்தேன். இதெல்லாம்தான் என்மீது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தின. சில அமைப்புகளை வைத்துக் கொண்டு என்மீது தொடர்ச்சியான ஊழல் புகார்களைக் கொடுக்கவைத்தார். என் பெயரைக் கெடுக்க வேண்டும் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். நானும் பேசவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன். ஸ்டாலினின் ஏவலின் பேரில் என்மீதும், என்னைச் சார்ந்தவர்களிடமும் காவல்துறை நடந்துகொண்ட விதத்தை நான் சொல்ல விரும்பவில்லை. அத்தனை கொடூரம்.”

“உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி எனச் சொன்னவர்களெல்லாம் ‘ஊழல் அமைச்சர் வேலுமணி’ எனச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்களே..?”

“தொடக்கத்தில் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன் என்பது உண்மைதான். ஆனால், இப்போது அது பழகிவிட்டது. நான் அமைச்சராக இருந்தபோது, சிறந்த நிர்வாகத்துக்காக 147 முறை மத்திய அரசிடமிருந்து விருது வாங்கியிருக்கிறோம். 50,000-க்கும் மேற்பட்ட கிராமசபைக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக 50,000-க்கும் மேற்பட்ட புதிய சாலைகள் அமைத்துள்ளேன். சென்னையில் அப்போதைய குடிநீர்ப் பிரச்னையைச் சரிசெய்ததோடு, சென்னை முழுவதும் 1,870 எம்.எல்.டி குடிநீர் வழங்கும் அளவுக்குத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினேன். இப்படி நான் செய்த திட்டங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஆனால், இப்போது வேலுமணி என்ற பெயரைச் சொன்னதும், ஆளாளுக்கு `1,000 கோடி ஊழல்’, `5,000 கோடி ஊழல்’ என அள்ளிவிடுகிறார்கள்.”

“உங்கள் மீதான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்ய நீங்கள் பேரம் பேசியதாகவும், தேவைப்பட்டால் தி.மு.க-வுக்கே செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றனவே?”

“ஆச்சர்யமாக இருக்கிறது. ஊடகங்களில் இப்படிச் சொல்லப்படுவதாக எனக்கும் தகவல்கள் வந்தன. என்னுடைய குடும்பம் 1972-லிருந்து அ.தி.மு.க-வில் இருக்கிறது. அப்போதிருந்து தி.மு.க எதிர்ப்பில் மிகத் தீவிரமாக இருந்திருக்கிறோம். என்னால் எந்தக் காலத்திலும் தி.மு.க-வோடு இணக்கமாகச் செல்ல முடியாது. அது எனக்குத் தேவையும் இல்லை. நான் தப்பு செய்தால்தானே அவர்களோடு இணக்கமாகச் செல்ல வேண்டும்? இப்போது இருக்கும் வழக்குகள் மட்டுமல்ல, இன்னும் எத்தனை வழக்குகள் என்மீது தொடர்ந்தாலும் தி.மு.க எதிர்ப்பில் இதைவிடத் தீவரமாகத்தான் செயல்படுவேன்.”

“ ‘முதல்வர் என்னைக் கைதுசெய்ய நினைக்கிறார். என் அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறார்’ எனப் பேசுவது பயத்தாலா?”

“முன்பாகவே முதல்வர் ஆகியிருக்கவேண்டிய கனவு என்னால் தகர்ந்தது என்கிற கோபத்தில், எப்படியாவது என் அரசியல் வாழ்க்கையை முடித்துவிட நினைக்கிறார் ஸ்டாலின். யார் நினைத்தாலும் என் அரசியல் வாழ்க்கையை அவ்வளவு எளிதில் அழித்துவிட முடியாது. ஸ்டாலின் என்னைக் கடுமையாக விமர்சிக்க விமர்சிக்கத்தான் கோவையில் என்னுடைய செல்வாக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது.”

என்மீது பழி போட்டு தப்பிக்க நினைக்கிறார்கள்! - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், உங்களுக்குப் போட்டியாகத்தான் தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜியை இறக்கியிருக்கிறதா?”

“கோவை, அ.தி.மு.க-வின் கோட்டை. நான் இருக்கும் வரை மட்டுமல்ல, எனக்குப் பிறகும்கூட அதில் எந்த மாற்றமும் இருக்காது. உறுதியாக கோவை மாநகராட்சியை நாங்கள்தான் கைப்பற்றுவோம். அதிலும் மாற்றமில்லை.”

“எடப்பாடி, ஓ.பி.எஸ்., சசிகலா என அ.தி.மு.க-வில் தனித்தனி கோஷ்டிகள் இருக்கின்றனவா?”

“அப்படியெல்லாம் ஒரு அணியும் இல்லை. ஆளாளுக்குப் பேசி, இல்லாத ஒன்றை இருப்பதாகக் கட்டமைக்கிறார்கள்”

“கோஷ்டிகள் இல்லையென்றால், ஒரே விவகாரத்துக்கு ஏன் இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிடுகிறார்கள்?”

“பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் ஓ.பி.எஸ்ஸும் அறிக்கை கொடுக்கிறார்கள். யார், எதற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்பதைப் பிரச்னைதான் தீர்மானிக்கிறதே தவிர, அணி அல்ல.”

“வருமான வரித்துறை ரெய்டு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்ததுபோல இருந்தனவே, அன்றைய நடப்புகள்?”

“எதிர்க்கட்சியாக இருக்கும்போதே என்மீது பல்வேறு வழக்குகள் போட்டவர்கள், ஆட்சிக்கு வந்தால் கூடுதலாக வழக்குகள் போடுவார்கள் என்று சொன்னார்கள். மேலும், தேர்தல் வெற்றிக்காக தி.மு.க கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது. எப்படியும் அதை நிறைவேற்ற முடியாது. மக்கள் அது குறித்துக் கேள்வி எழுப்புவார்கள். அப்போதெல்லாம் அதை திசைதிருப்ப அ.தி.மு.க அமைச்சர்கள்மீது ஏதாவது ஊழல் புகாரைச் சொல்லி திசைதிருப்பவே முயல்வார்கள் என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, ஆட்சியை இழந்த நாளிலிருந்தே வருமான வரித்துறையின் ரெய்டுக்காகக் காத்திருந்தோம். நினைத்துபோலவே என்மீது வருமான வரித்துறை ரெய்டு நடத்தினார்கள். என்னுடைய வீடு பெரிய கிராமத்தில் அமைந்திருக்கிறது. ஏதாவது பிரச்னை என்றால், சும்மாவே ஐந்நூறு பேர் கூடிவிடுவார்கள். கோவையில் 10 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். எனக்காகக் கூடியவர்களை நான்தானே பார்த்துக்கொள்ள வேண்டும்? அப்படி நடந்ததுதான் அவையெல்லாம்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism