Published:Updated:

`என் குடும்பத்தையே கருவறுப்பேன் என்றார் செந்தில் பாலாஜி!’ - ரெய்டுக்குப் பிறகு வெடித்த தங்கமணி

பேட்டியளிக்கும் தங்கமணி
News
பேட்டியளிக்கும் தங்கமணி ( நா.ராஜமுருகன் )

'ஆயிரம் செந்தில் பாலாஜிகள் வந்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது. செந்தில் பாலாஜியின் முழு சுயரூபம் இன்னும் தி.மு.க தலைமைக்குத் தெரியவில்லை. குறிப்பாக, முதலமைச்சருக்கு தெரியவில்லை. கூடியவிரைவில் அவருக்குத் தெரியவரும்.' - தங்கமணி

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு உள்ளான அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி, செந்தில் பாலாஜி முன்பு சபதமிட்டதுபோல், தனது குடும்பத்தைக் கருவறுக்கப் பார்ப்பதாக, அதிரடியாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

தங்கமணி வீட்டின் முன்பு குவிந்த அ.தி.மு.க-வினர்
தங்கமணி வீட்டின் முன்பு குவிந்த அ.தி.மு.க-வினர்
நா.ராஜமுருகன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டுவருகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் வரிசையில் ஐந்தாவது நபராக, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சம்பந்தப்பட்ட 69 இடங்களில் நேற்று காலை முதல் இரவு வரை சோதனை நடைபெற்றது. சென்னையில் அவர் சம்பந்தப்பட்ட, தொடர்புடைய 14 இடங்கள், ஆந்திரா, பெங்களூரு, சொந்த மாவட்டமான நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர், கிருஷ்ணகிரி என்று பல பகுதிகளில் சோதனை நடைபெற்றது. அதோடு, நாமக்கல் மாவட்டத்தில் 33 இடங்களில் சோதனை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் எட்டு இடங்களிலும், கரூரில் இரண்டு இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரனின் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் சோதனை நடைபெற்றது.

சோதனையின் முடிவில், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில், கணக்கில் வராத ரூ. 2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அறிக்கை மூலம் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, 1.13 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி, முக்கிய ஆவணங்கள், செல்போன்கள், வங்கி பாதுகாப்புப் பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

தங்கமணி வீடு
தங்கமணி வீடு
நா.ராஜமுருகன்

இந்த நிலையில், நாமக்கல் பள்ளிப்பாளையம் அருகில் உள்ள கோவிந்தம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் நடைபெற்ற ரெய்டுக்குப் பிறகு, வெளியில் வந்த தங்கமணி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"பழிவாங்கும் நோக்கத்தோடும், அ.தி.மு.க-வை அழிக்கும் நோக்கத்தோடும் இன்று என் வீட்டிலும், கட்சியினர் வீடுகளிலும் சோதனை நடத்தியுள்ளனர். பல செய்திகளில் எனது வீட்டில் ரூ.2.16 கோடி பணம் கிடைத்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், என் வீட்டிலிருந்து ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போகவில்லை. என்னுடைய செல்போனை மட்டும்தான் எடுத்துச் சென்றுள்ளனர். வேறு எதையும் என் வீட்டிலிருந்து எடுத்துப்போகவில்லை. தவறான தகவலைப் பரப்புகிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் கரங்கள் வலுப்படக் கூடாது என்பதற்காக, இப்படி பொய் வழக்கு போட்டு எங்களை ஒடுக்கப் பார்க்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், இதற்கெல்லாம் நாங்கள் யாரும் அஞ்ச மாட்டோம். இந்தச் சோதனையின் உள்நோக்கம் என்னவென்றால், மின்சாரத்துறை அமைச்சராக இருக்கிற செந்தில் பாலாஜி, பொதுத்தேர்தலுக்கு முன்பு கரூரில் ஒரு துக்க நிகழ்ச்சிக்குச் செல்கிறார். க.பரமத்தி பகுதியில் நடந்த அந்த நிகழ்ச்சியில் எங்கள் அமைப்பின் ஒன்றியப் பெருந்தலைவர் அங்கே சென்றிருக்கிறார். அவரைப் பார்த்து செந்தில் பாலாஜி, 'இன்னும் மூணு மாசம்தான். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், நான்தான் மின்சாரத்துறை அமைச்சராவேன். அப்போது, தங்கமணியை மட்டுமல்ல, அவரின் குடும்பத்தையே கருவறுப்பேன். தங்கமணி, அவரின் மனைவி, மகன்னு மூணு பேரையும் கருவறுக்கப் போகிறேன்' என்று பேசியிருக்கிறார். அதைப் பற்றி அப்போதே என்னிடம் சொன்னார்கள். 2012-ம் ஆண்டு என்னுடைய மகன் திருமணத்துக்கு செந்தில் பாலாஜி வீட்டுக்கு, அவரிடம் போன் மூலம் கேட்டுவிட்டு, எனது மனைவியோடு பத்திரிகை வைக்கப் போனேன்.

பேட்டியளிக்கும் தங்கமணி
பேட்டியளிக்கும் தங்கமணி
நா.ராஜமுருகன்

ஆனால், எங்களை ஒரு மணி நேரம் காக்கவைத்துவிட்டு, பின்வாசல் வழியாகப் போய்விட்டார். அதன் பிறகு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரின் சுயரூபம் தெரிந்து, செந்தில் பாலாஜி வகித்த பதவியைப் பறித்து எனக்கு வழங்கினார். அதன் பிறகு, அவருக்கு ஐந்து ஆண்டுக்காலத்துக்கு எந்தப் பதவியையும் கொடுக்கவில்லை. அதனால், எந்தெந்தக் கட்சிக்கு அவர் போனார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அந்தக் கோபத்தையெல்லாம், இப்போது தி.மு.க தலைமையிடம் சொல்லி, என் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தவைத்து, பழிவாங்கி தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறார். ஆனால், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் சட்டத்தை நம்புபவன். என் மகன் நேர்மையாகத் தொழில் செய்கிறார். சரியாக கணக்குகளை வைத்திருக்கிறார். அதனால், நீதிமன்றத்தில் இதைச் சந்தித்துக்கொள்வேன்.

என்னை ஒழிக்க வேணடும் என்பதற்காக, செந்தில் பாலாஜி ரெய்டு நடத்தவைத்திருக்கிறார். ஆயிரம் செந்தில் பாலாஜிகள் வந்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது. செந்தில் பாலாஜியின் முழு சுயரூபம் இன்னும் தி.மு.க தலைமைக்குத் தெரியவில்லை. குறிப்பாக, முதலமைச்சருக்குத் தெரியவில்லை. கூடியவிரைவில் அவருக்குத் தெரியவரும். நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க-வை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, எங்கள் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்த வைத்திருக்கிறார்கள். இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையால், நானும் கழகமும் ஒழிந்துவிட மாட்டோம். இன்னும் எழுச்சியாவோம்" என்றார் ஆவேசமாக!