Published:Updated:

நான் தவறு செய்திருந்தால் வழக்கு தொடரலாம்!

தோப்பு வெங்கடாசலம்
பிரீமியம் ஸ்டோரி
தோப்பு வெங்கடாசலம்

- போட்டுத்தாக்கும் தோப்பு

நான் தவறு செய்திருந்தால் வழக்கு தொடரலாம்!

- போட்டுத்தாக்கும் தோப்பு

Published:Updated:
தோப்பு வெங்கடாசலம்
பிரீமியம் ஸ்டோரி
தோப்பு வெங்கடாசலம்
2021 சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காமல் தனித்துவிடப்பட்டு, ஆதரவாளர்களுடன் தேம்பித் தேம்பி அழுதவர் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம். கடந்த சில வருடங்களாக எடப்பாடி ராகம் பாடிக்கொண்டிருந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு, “நிதியைத் தேடி வரவில்லை... உதயநிதியைத் தேடி அணிலாக வந்திருக்கிறோம்’’ என்று பஞ்ச் டயலாக் பேசி, தி.மு.க-வில் இணைந்திருக்கிறார்! அவரிடம் பேசியதிலிருந்து...

“கடந்த சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட உங்களுக்கு சீட் வழங்கப்படாததற்குக் காரணம் என்ன?’’

“பெருந்துறை தொகுதியில் மக்கள் மத்தியில் மட்டுமல்ல... கட்சியினர் மத்தியிலும் எனக்கு எந்தவித கெட்ட பெயரும் இல்லை. எல்லோருமே என்னைத்தான் ஆதரித்தார்கள். இது கட்சி எடுத்த ரிப்போர்ட்டிலுமே தெளிவாகியிருக்கிறது. ஆனாலும்கூட எனக்கு சீட் தரப்படவில்லை. மாறாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்

அ.தி.மு.க-வுக்கு எதிராக வேலை செய்து, கட்சிப் பொறுப்பிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டு, உள்ளாட்சித் தேர்தலிலும் கட்சிக்கு எதிராக சுயேச்சை வேட்பாளர்களைப் போட்டியிடச் செய்த ஜெயக்குமாருக்கு பெருந்துறை தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன்தான் இதன் பின்னணியில் எனக்கு எதிராக மறைமுகமாக வேலை செய்திருக்கிறார்.’’

நான் தவறு செய்திருந்தால் வழக்கு தொடரலாம்!

“கே.சி.கருப்பணனுக்கு உங்கள் மீது அப்படி என்ன பகை?’’

“தனிப்பட்ட வகையில் அவருக்கும் எனக்கும் எந்தப் பகையும் இல்லை. என்மீது அப்படி என்ன பகையை அவர் மனதில் வைத்திருக்கிறார் என்றும் தெரியவில்லை. ஏற்கெனவே மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் பொறுப்பிலிருந்த நான் எங்கே அவருக்குப் போட்டியாக வந்துவிடுவேனோ என்று என்னை ஒரு போட்டியாளராக அவர் பார்த்திருக்கலாம்.’’

“மக்கள் ஆதரவு உங்களுக்கு இருந்தது என்கிறீர்கள். ஆனால், பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட உங்களால் 10,000 வாக்குகள்கூட வாங்க முடியவில்லையே?’’

“1996 தேர்தலில், ஜெயலலிதா வெற்றி வாய்ப்பை இழந்தார். அதற்காக அவர் மக்கள் செல்வாக்கு இல்லாதவர் என்று சொல்ல முடியுமா? பெருந்தலைவர் காமராஜரும்கூட தேர்தலில் தோல்வியுற்றிருக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றிபெற்ற திருநாவுக்கரசரும்கூட அதற்கு முந்தைய தேர்தலில் தோல்வியைச் சந்தித்திருக்கிறார். ஒருவருக்குக் கிடைக்கிற வாக்குகளின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு அவர்களது செல்வாக்கைத் தீர்மானித்துவிட முடியாது.

மேலும், தேர்தலின்போது நான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க தரப்பிலிருந்து மக்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகப் பேசப்படுகிறது. சுயேச்சையாகப் போட்டியிட்ட நான், குறுகிய காலகட்டத்துக்குள் என் சின்னத்தை மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்க்க முடியாததும் பின்னடைவாகிவிட்டது. பாமர மக்கள் நிறைய பேர், நான் இரட்டை இலைச் சின்னத்தில்தான் நிற்கிறேன் என நம்பி வாக்களித்துவிட்டதும் அவர்களது வெற்றிக்கு ஒரு காரணம்.’’

“தி.மு.க-வில் நீங்கள் இணைந்ததன் நோக்கம்தான் என்ன?’’

“பெருந்துறை தொகுதியில் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஆகியவை இன்னும் முழுமையாகச் செய்து முடிக்கப்படவில்லை. கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே முழுமையாக நிறைவேற்றித் தர முடியும். ஏனெனில், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்றாலும்கூட, அவை மக்களுக்குப் பயன்படுகிற திட்டங்களாக இருந்தால் அவற்றைச் செய்து முடிக்கிற ஆர்வம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம்தான் இருக்கிறது. உதாரணம், ‘அம்மா உணவக திட்டம்.’ இந்தச் சூழலில், என் ஆதரவாளர்களும், தொகுதி மக்களும் ‘தி.மு.க-வில்தான் உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்’ என்று கூறியதால் நான் தி.மு.க-வில் இணைந்தேன்.’’

“மணல் கடத்தல் விவகார வழக்கு விசாரணைகளிலிருந்து தப்பிக்கத்தான் நீங்கள் தி.மு.க-வில் அடைக்கலமாகி யிருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றனவே?’’

“இது தவறான கேள்வி. அப்படி என்மீது குற்றச்சாட்டு வைப்பவர்கள் யார்... அந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம்... அப்படி நான் தவறு செய்திருப்பதாக ஆதாரம் இருந்தால் என் மீது வழக்கு தொடர வேண்டியதுதானே?’’

நான் தவறு செய்திருந்தால் வழக்கு தொடரலாம்!

“தி.மு.க-விலும்கூட மாவட்டச் செயலாளர் வழியாக இல்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜி மூலமாக இணைந்திருக்கிறீர்களே... இங்கேயும் உட்கட்சிப் பிரச்னைகள் ஏற்பட்டுவிடாதா?’’

“யார் மூலமாகக் கட்சியில் சேர்ந்தால் என்ன? அரசியல் என்பது தொட்டியில் இருக்கிற தண்ணீரில் நீந்துவதுபோல சாதாரண விஷயமில்லை... பாயும் தண்ணீரில் எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டும். ஒருவர் வளர்ந்தால் அது அடுத்தவருக்கு வீழ்ச்சியாகிவிடுமோ என்ற போட்டி எல்லாக் கட்சிகளிலுமே இருக்கும். எல்லா இடங்களிலும் நமக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுவிட மாட்டார்கள். ஆனால், தி.மு.க-வில் என்னிடம் எல்லோருமே அன்பாகப் பழகுகிறார்கள். தி.மு.க-வில் நான் சேர்ந்ததை முதலமைச்சர் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இந்தப் பெருந்தன்மையை, மரியாதையை நான் எதிர்பார்க்கவேயில்லை... அவர் மீதான பற்றும் விசுவாசமும் எனக்கு இன்னும் கூடியிருக்கிறது!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism