Published:Updated:

`அந்த அம்மாவுக்கு பெரிய பதவி; எனக்கு சின்ன பதவியா?’ - வேலூர் கட்சித் தாவல் காமெடி

சீனிவாசன் - கார்த்தியாயினி
சீனிவாசன் - கார்த்தியாயினி

`சீனிவாசனைத் தொடர்ந்து வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் கார்த்தியாயினியும் அ.தி.மு.க-வுக்கு சென்றுவிடுவாரோ?’ என்று கமலாலயத்தில் பரபரப்பாகப் பேச்சு அடிபடுகிறது. 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாரதிய ஜனதாவில் ஐக்கியமானவர் ஆற்காடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ வி.கே.ஆர்.சீனிவாசன். சமீபத்தில் இவரைத் தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பார்வையாளராகவும் நியமித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தது கமலாலயத் தலைமை. அந்தப் பொறுப்புகளைத் தூக்கியெறிந்த சீனிவாசன், பா.ஜ.க-வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க-வுக்குத் தாவியிருக்கிறார். அதுவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இணைந்துள்ளார்.

சீனிவாசன்
சீனிவாசன்

இதற்கான ஏற்பாடுகளை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி ஆகியோர் செய்துள்ளனர். சீனிவாசனின் இந்தச் செயலால் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கொதிப்பில் இருக்கிறார்கள்.

``சொந்தக் கட்சிக்கும் விசுவாசமாக இல்லை. அடைக்கலம் கொடுத்த கட்சியையும் அரவணைக்கத் தெரியவில்லை. இதுபோன்ற நபர்களால்தான், கூட்டணியில் விரிசல் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜூ.வி பைட்ஸ்: அன்புமணி `அக்னி டாட்டூ' சர்ச்சை; ``தமிழக பா.ஜ.க-வின் நயன்தாரா!''

முன்னாள் எம்.எல்.ஏ-வாக இருந்தாலும், பாரதிய ஜனதாவை அவமதித்துவிட்டு வந்த நபரை முதலமைச்சர் எப்படி சந்திக்க அனுமதி கொடுக்கலாம் என்று நினைக்கும்போதுதான் ஆத்திரம் வருகிறது’’ என்கிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள்.

அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, ``சீனிவாசனுடன் நட்பு பாராட்டும் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் கார்த்தியாயினியும், அம்மா இறந்த பிறகு பா.ஜ.க-வில் ஐக்கியமானவர்தான். அந்தக் கட்சியில் கார்த்தியாயினிக்கு தற்போது மாநிலச் செயலாளர் பதவி, திருப்பத்தூர் மாவட்ட பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கார்த்தியாயினி
கார்த்தியாயினி

தன்னால் பா.ஜ.க-வுக்கு அழைத்துவரப்பட்ட கார்த்தியாயினி உச்சம் தொட்டதை சீனிவாசனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தனக்கு பா.ஜ.க-வில் உரிய அங்கீகாரம் கிடைக்காத கோபத்தில் மீண்டும் அ.தி.மு.க-வுக்கே வந்துள்ளார்’’ என்றனர். `சீனிவாசனைத் தொடர்ந்து கார்த்தியாயினியும் அ.தி.மு.க-வுக்கு சென்றுவிடுவாரோ?’ என்றுதான் கமலாலயத்தில் பரபரப்பாகப் பேச்சு அடிபடுகிறது.

கட்சித் தாவல் குறித்து தெரிந்துகொள்வதற்காக வி.கே.ஆர்.சீனிவாசனை போனில் தொடர்புகொண்டோம். நம்மிடம் அவர், ``பிரஸ் மீட் வைக்கிறேன். அப்போது சொல்கிறேன்’’ என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு