Published:Updated:

சசிகலா எடப்பாடி பன்னீர் மூவரும் கூட்டுக்கொள்ளையர்!

கே.சி.பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
கே.சி.பழனிசாமி

வறுத்தெடுக்கிறார் கே.சி.பழனிசாமி

சசிகலா எடப்பாடி பன்னீர் மூவரும் கூட்டுக்கொள்ளையர்!

வறுத்தெடுக்கிறார் கே.சி.பழனிசாமி

Published:Updated:
கே.சி.பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
கே.சி.பழனிசாமி

‘கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான மேல் விசாரணையைத் தடுக்க முடியாது.’ - இப்படி அழுத்தம் திருத்தமாகத் தீர்ப்பளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இன்னொரு பக்கம், கொடநாடு விவகாரத்தில் அ.தி.மு.க தலைவர்களுக்குத் தொடர்பிருப்பதாக அதிரடியான கருத்துகளைத் தெரிவித்துவருகிறார் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி. அவரிடம் உரையாடியதிலிருந்து...

“அ.தி.மு.க கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தியதாக ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட நீங்கள், இப்போதும் அதே கட்சியின் பெயர், சின்னத்தைப் பயன்படுத்திவருகிறீர்களே..?’’

“இன்றைய தேதியில் உண்மையான அ.தி.மு.க தலைவனாகச் செயல்பட்டுவருபவனே நான்தான். கொடநாடு விவகாரத்தில், சசிகலா, எடப்பாடி, பன்னீர் மூன்று பேருமே கூட்டுச் சேர்ந்து உண்மையை மறைத்துவருகின்றனர். நான் ஒருவன்தான் அ.தி.மு.க தொண்டர்களின் குரலாக, ‘கொடநாடு விவகாரத்தில் மேல் விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும்’ என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறேன். அ.தி.மு.க தொண்டர்களும் என் பக்கம்தான் நிற்கிறார்கள்.’’

“அ.தி.மு.க-விலேயே இல்லாத நீங்கள், ‘உண்மையான அ.தி.மு.க தலைவர் நான்தான்’ என்று எப்படிச் சொல்கிறீர்கள்?’’

“இன்றைக்கும் அ.தி.மு.க-வின் உறுப்பினராக நான் நீடிக்கிறேன். ஒரு லட்சம் தொண்டர்கள் என் வழியில்தான் பயணிக்கின்றனர். ஆனாலும், எனது டார்கெட் 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான். அடுத்த ஆண்டுக்குள் ஒவ்வொரு தொகுதியிலும் அ.தி.மு.க தொண்டர்கள், எம்.ஜி.ஆர் விசுவாசிகள் ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து 2024 தேர்தலுக்கான களப்பணியில் அவர்களை ஈடுபடவைப்பேன். அப்போது, அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பே என்னிடம் வந்துவிடும்!’’

“இதெல்லாம் நம்புகிற மாதிரித் தெரியவில்லையே... கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது நீங்களோ, உங்கள் ஆதரவு தொண்டர்களோ அ.தி.மு.க-வுக்காக என்ன செய்தீர்கள்?’’

“நானும் என்னைப் பின்தொடரும் தொண்டர்களும் கடந்த தேர்தலில், ‘சூரியனைச் சுட்டெரித்து இரட்டை இலை வெற்றிபெற வேண்டும்’ என்ற உத்வேகத்தோடு அ.தி.மு.க-வைத்தான் ஆதரித்து பணியாற்றினோம். என்றைக்குமே நான் தலைவராக ஆசைப்பட்டதில்லை. அதேசமயம், ‘எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க., அவர் வழியில் என்றென்றைக்கும் மக்கள் பணியாற்ற வேண்டும். அதற்கான பணியில் அ.தி.மு.க-வைக் காப்பாற்றி வழிநடத்த வேண்டும்’ என்று மட்டுமே நினைத்துச் செயல்பட்டுவருகிறேன்.’’

“கொடநாடு மேல் விசாரணையை ‘பழிவாங்கும் செயல்’ என்று அ.தி.மு.க-வினர் கொந்தளித்துவரும் சூழலில், நீங்கள் மட்டும் விசாரணையை ஆதரிப்பது அ.தி.மு.க தலைவர்களை வெறுப்பேற்றாதா?”

“அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அதன் தலைவர்கள்தான் மேல் விசாரணையை எதிர்க்கிறார்கள். ஆனால், தொண்டர்கள் ‘உண்மை வெளிவருவதற்கு மேல் விசாரணை தேவை’ என்றுதான் கேட்கிறார்கள். தொண்டர்களின் மனநிலையைத்தான் நானும் பிரதிபலிக்கிறேனே தவிர... யாரையும் வெறுப்பேற்றும் எண்ணம் எனக்கில்லை. இந்த விஷயத்தில், தமிழக அரசும் காவல்துறையும்கூட முழுமையான விசாரணையைத்தான் விரும்புகின்றன.”

சசிகலா எடப்பாடி பன்னீர் மூவரும் கூட்டுக்கொள்ளையர்!

“அ.தி.மு.க-விலிருந்து உங்களை நீக்கிவிட்டார்கள் என்கிற விரக்தியில்தான் நீங்கள் இப்படியெல்லாம் பேசிவருவதாகச் சொல்கிறார்களே?’’

“எம்.ஜி.ஆரின் வழி வந்தவன் நான். அரசியலில் எனக்கு எதிர்காலமே இல்லையென்றாலும்கூட அவர் வழியில்தான் பயணிப்பேன். எனவேதான், எடப்பாடி என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றதும் தி.மு.க-வுக்கு ஓடிவிடாமல், அ.தி.மு.க-வின் மீட்சிக்காகப் பாடுபட்டுவருகிறேன். எடப்பாடி, பன்னீர் ஆகியோருடன் நான் நெருக்கமாக இருந்தபோதே, ‘தொண்டர்கள் மூலமாகத்தான் அ.தி.மு.க-வுக்கு பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; கட்சியின் விதிகளைத் திருத்துவது தவறு’ என்றெல்லாம் சொல்லி தேர்தல் ஆணையத்தில் மனு செய்தவன் நான். எங்கிருந்தாலும் உண்மையைத் தயங்காமல் சொல்லிவரும் என்னை விரக்தியில் பேசுவதாகச் சொல்வது தவறு.’’

“சரி, எந்த ஆதாரத்தின் அடிப்படையில், கொடநாடு விவகாரத்தில் சசிகலா, எடப்பாடி, பன்னீர் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறீர்கள்?’’

“கொடநாடு சம்பவத்தின்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது தொடங்கி சிசிடிவி கேமராக்கள் ஆஃப் செய்யப்பட்டது, காவல்துறையினர் அப்புறப்படுத்தப்பட்டது, வழக்கு விசாரணை முடக்கப்பட்டது என அனைத்தையும் செய்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அதேசமயம், இவற்றையெல்லாம் எடப்பாடி தனக்காகச் செய்தாரா, தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்காகச் செய்தாரா அல்லது கட்சியிலிருந்த ஐவர் அணிக்காகச் செய்தாரா என்பதுதான் இங்கே கேள்வி. ஆக, சசிகலா, எடப்பாடி, பன்னீர் மூவருமே இந்த விவகாரத்தில் கூட்டுக்கொள்ளையர்கள்தான். அதனால்தான் எடப்பாடி - பன்னீர் இடையே முரண்பாடு ஏற்பட்டாலும், இறுதியில் எடப்பாடியிடம் சரண்டர் ஆகிவிடுகிறார் பன்னீர். இன்னொரு பக்கம் கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர்களில் ஒருவரான சசிகலாவும், கொடநாடு விவகாரம் குறித்து ஒரு கேள்வியும் எழுப்பாமல் மெளனம் காக்கிறார். இந்த ஆதாரங்களெல்லாம் போதாதா?’’

“கொடநாடு சம்பவம் நடைபெற்றபோது அ.தி.மு.க-வில்தான் நீங்கள் இருந்தீர்கள்... அப்போதே நீங்கள் ஏன் இந்தச் சந்தேகங்களை எழுப்பவில்லை?’’

“அன்றைக்கும்கூட, ‘இந்த விவகாரத்தை முறையாக விசாரிக்க வேண்டும்; உண்மை நிலவரங்கள் என்னவென்று மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும்’ என்றெல்லாம் பேசியிருக்கிறேன். எனது நிலைப்பாட்டிலிருந்து கொஞ்சமும் விலகாமல், 2019-லும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தியிருக்கிறேன். இப்போதும் தொடர்ந்து பேசிவருகிறேன்.’’