Published:Updated:

`சென்னையில் முகாம்; இரு முக்கியத் தலைவர்களுடன் பேச்சு!'- தி.மு.க-வை குறிவைக்கும் `பா.ம.க' வைத்தி

`ஸ்டாலினைக் கடுமையாக விமர்சனம் செய்தவர், வைத்தி. இவரை தி.மு.க-வுக்குள் விட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாகக் காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள், தி.மு.க-வினர்'.

வைத்தி
வைத்தி

காடுவெட்டி குருவின் வலதுகரமாக இருந்த வைத்தியைப் பா.ம.க தலைமை அதிரடியாக நீக்கியது. இதனால் கட்சித் தலைமையின் மீது விரக்தியிலிருந்தவர், தி.மு.க-வில் சேர்வதற்காக வன்னியர் சொந்தங்களை நாடியிருக்கிறார் வைத்தி. எப்படியாவது பதவியை வாங்கிவிட்டுத்தான் அரியலூருக்கு வருவேன் என்று சென்னையில் முகாமிட்டிருக்கிறார். இவர், தி.மு.க-விற்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாகக் காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள், அரியலூர் மாவட்ட தி.மு.க-வினர்.

வைத்தி
வைத்தி

பா.ம.க-வின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. அதன்பிறகு, பா.ம.க -வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வைத்தி நீக்கப்பட்டார் என அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பாக பா.ம.க மாநிலத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும்,

அன்புமணியுடன் வைத்தி
அன்புமணியுடன் வைத்தி

மாநில வன்னியர் சங்கச் செயலாளராகவும் பொறுப்பு வகித்த வைத்திக்குப் பதிலாக இனி, அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களின் துணை பொதுச் செயலாளராக திருமாவளவன் செயல்படுவார். வைத்தியலிங்கம் இனி நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி மாவட்டங்களின் வன்னியர் சங்க வளர்ச்சிக்காகப் பாடுபடுவார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் தெரிந்தவுடன், வைத்தி ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவரது ஆதரவாளர்கள் 3 பேர் கட்சிப் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்கள்.

பா.ம.க-விலிருந்து வைத்தியை ஏன் நீக்கினார்கள்? தி.மு.க-வில் அவர் இணைய இருப்பதாக வெளியான தகவல் எனப் பரபரக்கவே, அதுகுறித்து விசாரித்தோம். ``அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முடிசூடா மன்னனாக வலம்வந்தவர், காடுவெட்டி குரு. அவருக்கு வலதுகரமாகவும் படைத் தளபதியாகவும் இருந்தவர், வைத்தி. இவர் இல்லாமல் மாவட்டத்தில் அணுவும் அசையக்கூடாது என்பது எழுதப்படாத விதியாக வைத்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில், போலீஸ் மற்றும் அதிகாரிகளைக் கையில் வைத்துக்கொண்டு ரவுடியிசம், கட்டப் பஞ்சாயத்து என அதிகமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

காடுவெட்டி குருவுடன் வைத்தி
காடுவெட்டி குருவுடன் வைத்தி
தி.மு.கவில் இணைவதற்காக ஜெகத்ரட்சகனைச் சந்தித்திருக்கிறார். அவர், துரைமுருகனிடம் அழைத்துச்செல்ல, அவரோ, `மாவட்டச் செயலாளரைக் கேட்காமல் எதுவும் செய்ய முடியாது' என்றிருக்கிறார்.

இச்செயல் தலைமைக்குத் தெரியவந்தது. இவரை விட்டால் இப்பகுதியில் கட்சியை சிறப்பாக நடத்த ஆள் இல்லை என்ற காரணத்தால், அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவைத்திருந்தது. இந்த நிலையில், அவரின் மனைவி தேன்மொழி தற்போது ஆண்டிமடம் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரை சேர்மன் ஆக்குவதற்காகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவந்தார். கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் மறைமுகமாகப் பல வேலைகளைச் செய்யத் தொடங்கினார் வைத்தி. ஒரு சில ஆப்ளிகேஷனுக்காகத் தலைமைக்குத் தெரியாமல் அ.தி.மு.க அமைச்சரான சி.வி.சண்முகத்தைச் சந்தித்துவந்திருக்கிறார்.

சி.வி.சண்முகத்துக்கும் ராமதாஸ் குடும்பத்திற்கும் ஏழாம் பொருத்தம். அப்படிப்பட்டவரை வைத்தி சந்தித்ததை பா.ம.க தலைமை ரசிக்கவில்லை. அதேபோல், `மாவட்டத்தில் எந்தவொரு கூட்டம் நடந்தாலும் மாவட்டச் செயலாளரான ரவியின் பெயரை அழைப்பிதழில் போடக்கூடாது' என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மறைமுக உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் வைத்தி.

ஸ்டாலின், துரைமுருகன்
ஸ்டாலின், துரைமுருகன்

அதேபோல், இவர் செய்த முறைகேடுகளை அப்படியே பட்டியலிட்டு, தலைமைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதைப் பார்த்துத்தான் மிரண்டுபோன பா.ம.க தலைமை, அவர் வகித்து வந்த பதவியைப் பறித்திருக்கிறது. இனிமேல் இந்தக் கட்சியில் இருந்தால் அவரை மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்துகொண்டு முதலில் சி.வி சண்முகம் மூலமாக அ.தி.மு.க-வில் பேசியிருக்கிறார். அதற்கு அரசுக்கொறடா தாமரை ராஜேந்திரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதன் பின்பு, தி.மு.க-வில் சேர்வதற்காக வைத்தி, ஜெகத்ரட்சகனைச் சந்தித்திருக்கிறார். அவர் துரைமுருகனிடம் வைத்தியை அழைத்துச் சென்றிருக்கிறார்.

அதற்கு அவர், `எதற்காக நீங்கள் தி.மு.க-வில் சேர நினைக்கிறீர்கள்?' என்று கேட்டிருக்கிறார். அதற்கு வைத்தி, நடந்தவற்றை எடுத்துச்செல்லியிருக்கிறார். அதைக் கேட்டுக்கொண்ட துரைமுருகன், `மாவட்டச் செயலாளரைக் கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. அவரிடம் பேசுங்கள். நானும் பேசுகிறேன்' என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். வைத்தியும் தி.மு.க மாவட்டச் செயலாளர் சிவசங்கரை நாட இருக்கிறார். `ஸ்டாலினைக் கடுமையாக விமர்சனம் செய்வர் வைத்தி. இவரை தி.மு.க-விற்குள் விட்டுவிடக்கூடாது' என்பதில் தெளிவாகக் காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள், மாவட்ட தி.மு.க-வினர்.

வைத்தி
வைத்தி

ஆனால், எப்படியாவது பதவியை வாங்கிக்கொண்டுதான் ஊருக்கே வருவேன் என்று சொல்லிவிட்டு சென்னையில் முகாமிட்டிருக்கிறார், வைத்தி'' என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதுகுறித்து வைத்தியிடம் பலமுறை பேச முயற்சி செய்தோம். அவர் போனை எடுக்கவில்லை. அவரது மற்றொரு எண்ணிலும் தொடர்புகொண்டோம். அதற்கும் பதிலில்லை. அவரது உதவியாளர் எண்ணிலும் தொடர்புகொண்டோம். அவரும் பேச மறுத்துவிட்டார். இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கும்பட்சத்தில், தகுந்த பரிசீலனைக்குப் பின்னர் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.