Published:Updated:

பிரணாப் முகர்ஜி: `கல்லூரி ஆசிரியர் டு பாரத ரத்னா வரை..!’ - பல்துறை வித்தகரின் அரசியல் எழுச்சி #RIP

பிரணாப் முகர்ஜி
News
பிரணாப் முகர்ஜி

`ஆர்.எஸ்.எஸ் விழா ஒன்றில் பிரணாப் முகர்ஜி பங்கெடுத்துப் பேசினார். தேர்தலுக்கு சற்று முன்பு இத்தகைய செயலில் ஈடுபட்டதால் காங்கிரஸ் வட்டாரத்தில் அவர்மீது அதிருப்தி நிலவியது.'

1969-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மிட்னாபூர் தொகுதியின் இடைத்தேர்தலின்போது வி.கே.கிருஷ்ண மேனன் என்ற சுயேச்சை வேட்பாளர் வெற்றிவாகை சூடினார். அந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவரின் உழைப்பையும் திறமையையும் கண்டு அன்றைய பிரதமரான இந்திரா காந்தி, அவரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகுபார்த்தார். அன்று அரசியலில் கால்பதித்த அவர், பின்னாளில் இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தார். அவர்தான் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.

டிசம்பர் 11, 1935-ம் தேதி மேற்கு வங்காளத்தின் மிராத்தி கிராமத்தில், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் பிரணாப் முகர்ஜி. இவருடைய தந்தை கமதா கின்கர் பானர்ஜி. இந்திய சுதந்திரத்துக்காகப் போராடி பலமுறை சிறை சென்றவர். தந்தையைப் பின்பற்றியே காங்கிரஸில் பிரணாப் முகர்ஜி சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த அவர், அதற்கு பிறகு அங்கே சட்டமும் பயின்றார். அரசியல் பிரவேசத்துக்கு முன்னதாக அவர் கல்லூரி ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றிவந்தார்.

1969 -ம் ஆண்டு தொடங்கி 1975, 1981, 1993, 1999 என்று தொடர்ச்சியாக ஐந்து முறை காங்கிரஸ் சார்பாக மாநிலங்களவை உறப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டார். இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரியவராக விளங்கிய பிரணாப்புக்கு 1973-ல் தொழில்துறை வளர்ச்சிக்கான இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1982 முதல் 1984 வரை நிதியமைச்சராக சிறப்பாகப் பணியாற்றிவந்த பிரணாப் முகர்ஜியை, 1984-ம் ஆண்டின் உலகின் தலைசிறந்த நிதியமைச்சர்களுள் ஒருவராக 'யூரோ மணி' இதழ் தேர்ந்தெடுத்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்திரா காந்தி இறப்புக்குப் பின்னர், பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்கையில் சிக்கல் ஏற்பட்டது. அதுவரை சிறப்பாக செயல்பட்டுவந்த அவருக்கு, ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை. இதையடுத்து காங்கிரஸிலிருந்து வெளியேறிய அவர், `ராஷ்ட்ரிய சமாஜ்வாதி காங்கிரஸ்' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். பின்னர் ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட சமரசத்துக்குப் பின்பு 1989 -ல் தன் கட்சியை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார். 1991-ல் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது பிரணாப் முகர்ஜியை திட்டக்குழுவின் துணைத் தலைவராக நியமித்தார். அப்போது அவருடைய அரசியல் வாழ்க்கை புத்துயிர் பெற்றது.

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

1993 -95-ல் வர்த்தகத்துறை அமைச்சராகவும், 1995-96 மற்றும் 2006-09 ஆகிய காலகட்டங்களில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், 2004-06-ல் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் 2009-12-ல் நிதியமைச்சராகவும் பணியாற்றினார். கிட்டத்தட்ட எல்லா முக்கியத் துறைகளின் அமைச்சராகவும் பணிபுரிந்ததால் இவரை 'இந்தியா கொண்டிராத பிரதமர்' என்று பத்திரிகைகள் பலமுறை குறிப்பிட்டுள்ளன. 2004-ம் ஆண்டு ஜங்கிப்பூர் தொகுதியில் வெற்றி பெற்று முதன்முறையாக மக்களவை உறுப்பினர் ஆனார், குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக 2012 -ம் ஆண்டில் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய அரசியலில், மிக முக்கியப் பங்கு வகித்தவர் பிரணாப். அவர் 1982-ல் நிதியமைச்சராக இருந்தபோது, இந்தியா சர்வதேச நாணய நிதியத்திடம் (International Monetary Fund) பெற்ற கடனை அடைப்பதில் முக்கியப் பங்காற்றினார். மேலும், மன்மோகன் சிங்கை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமித்ததும் இவரே.

2009-ம் ஆண்டு மீண்டும் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜி, 2010-ம் ஆண்டு 'எமர்ஜிங் மார்க்கெட்' பத்திரிகையால் `ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர்’ என்று பாராட்டப்பட்டார். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இவர், பாதுகாப்புத்துறை அமைச்சராக 2005-ல் அமெரிக்காவுடனான 10 வருட பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். `அமெரிக்கா உடனான உறவுகளை வலுப்படுத்தினாலும், ரஷ்யாவே இந்தியாவுக்கு முதல் பாதுகாப்புக் கூட்டாளராக விளங்கும்’ என்று தெரிவித்தார். கூட்டணிகள் அமைப்பது, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, சர்ச்சைகள் எழும்போது சமரசம் பேசுவது என்று காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை இயக்கியதில் பிரணாப் முகர்ஜிக்கு பெரும் பங்குண்டு. 1998-ம் ஆண்டு சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதிலும் முக்கியப் பங்காற்றினார் பிரணாப்.

 பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

2012-ம் ஆண்டு, குடியரசு தலைவர் தேர்தலில் 70 சதவிகித வாக்குகளைப் பெற்று குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். 2017-ம் ஆண்டு இவருடைய பதவிக்காலம் முடிவடைந்தது. அதோடு அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2008-ம் ஆண்டு பத்ம விபூஷண் பட்டத்தையும், 1997-ம் ஆண்டு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருதையும், 2011-ம் ஆண்டு இந்தியாவின் சிறந்த ஆட்சியாளர் பட்டத்தையும், 2019-ம் ஆண்டு பாரத ரத்னா விருதையும் பெற்றுள்ளார். பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடி இவரை `இக்காலத்தின் சிறப்புமிக்க ஆட்சியாளர்களில் ஒருவர்’ என்று பாராட்டினார்.

பிரணாப் முகர்ஜி, `மிட் டேர்ம் போல்', 'தி டர்புலன்ட் இயர்ஸ்', 'தி கொயாலிஷன் இயர்ஸ்' எனப் பல புத்தகங்களை எழுதியுள்ளார். 2013-ம் ஆண்டில் தாகா பல்கலைக்கழகமும், 2014 -ல் கொல்கத்தா பல்கலைக்கழகமும் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் அளித்தன. அதுமட்டுமன்றி பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஐந்து கௌரவ டாக்டர் பட்டங்களை இவருக்கு அளித்துள்ளன.

ஆர்.எஸ்.எஸ் விழாவில் பிரணாப் முகர்ஜி
ஆர்.எஸ்.எஸ் விழாவில் பிரணாப் முகர்ஜி

கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ் விழா ஒன்றில் பிரணாப் முகர்ஜி பங்கெடுத்துப் பேசினார். தேர்தலுக்கு சற்று முன்பு இத்தகைய செயலில் ஈடுபட்டதால் காங்கிரஸ் வட்டாரத்தில் அவர்மீது அதிருப்தி நிலவியது.

கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி மருத்துவமனைக்கு வேறொரு சிகிச்சைக்காகச் சென்றபோது, தனக்கு கொரோனா இருப்பது உறுதியானதாகவும், தன்னைச் சந்தித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை மேற்கொள்ளுமாறும் ட்விட்டரில் பிரணாப் முகர்ஜி பதிவிட்டார். டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, மூளையில் ரத்த உறைவு இருந்ததற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் உடல்நிலை மோசமானது. கோமாநிலைக்குச் சென்ற அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ராணுவ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ மருத்துவமனைக்குச் சென்று பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் நேரில் கேட்டறிந்தார்.

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தநிலையில் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். `இந்தியா, தனது பெருமைமிகு மகனை இழந்துவிட்டது’ என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.