Published:Updated:

`தை பிறந்தால் வழி பிறக்கும்!' - சசிகலாவுக்காகக் காய்நகர்த்துகிறாரா சோ.அய்யர்?

அய்யர் - சசிகலா
News
அய்யர் - சசிகலா

முன்னாள் மாநில தேர்தல் ஆணையரும், சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவருமான சோ.அய்யர், சசிகலாவை அ.தி.மு.க-வுக்குள் கொண்டுவருவது தொடர்பாகச் சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சோ.அய்யர் ஜெயலலிதாவுக்கும், சசிகலா குடும்பத்துக்கும் மிக நெருக்கமானவர். டாஸ்மாக் எம்.டி-யாகப் பணியாற்றியபோது, மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்குப் பல கோடி ரூபாய் வருமானம் கொண்டுவரும் வழியை ஏற்படுத்தியவர். 2011-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், அய்யருக்கு மாநில தேர்தல் ஆணையர் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2015-ல் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. இப்படித் தொடர்ந்து அதிகாரப் பதவியிலிருந்த அய்யர், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்திலும் சீர்மரபினர் நல வாரிய தலைவராகப் பதவிவகித்தார். இந்த நிலையில், அய்யர் தற்போது சசிகலாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க-வின் இரண்டாம்கட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவுடன் அய்யர்
ஜெயலலிதாவுடன் அய்யர்

இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் சிலர், ``சோ.அய்யரும் சசிகலாவும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பிணைப்பு காரணமாக, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அதிகாரப் பதவியில் அய்யர் வலம்வந்தார். அப்போதே, அ.தி.மு.க-வைச் சேர்ந்த இரண்டாம்கட்டத் தலைவர்கள் பலருடனும் அவருக்கு நல்ல பழக்கமிருந்தது. இந்தத் தொடர்பை தற்போது புதுப்பித்திருக்கும் அய்யர், சசிகலாவின் சார்பில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். சமீபத்தில் அய்யருடன் பேசிய மாவட்டச் செயலாளர்கள் சிலர், சசிகலா விவகாரத்தில் பன்னீர் தரப்பு மாறி மாறிப் பேசுவதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களிடம், 'தை பிறந்தால் வழி பிறக்கும். அதுவரை அமைதியாக இருங்கள். பொங்கலுக்குப் பிறகு பல மாற்றங்களைப் பார்க்கப் போகிறீர்கள். அதற்குப் பிறகு நல்ல முடிவெடுங்கள்' என்றிருக்கிறார் அய்யர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டிசம்பர் 1-ம் தேதி கட்சியின் செயற்குழு கூடவிருக்கும் நிலையில், வழிகாட்டுதல்குழுவின் எண்ணிக்கையை 11-லிருந்து 18-ஆக உயர்த்த கோரிக்கை வலுத்திருக்கிறது. 'கட்சிக்கு இரட்டைத் தலைமை முறை வேலைக்கு ஆகாது' என்கிற முடிவில் சில நிர்வாகிகள் உறுதியாக இருந்துவருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலர் ஒன்று சேர்ந்து விரைவில் கூட்டம் ஒன்றைச் சென்னையில் நடத்தவிருக்கிறார்கள். அதில், 'கட்சியை வழிநடத்த ஒற்றைத் தலைமைதான் வேண்டும். இப்போதிருக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சிஸ்டத்தை நீக்க வேண்டும்' என்று தீர்மானமும் இயற்றவிருக்கிறார்கள். இது போன்ற செய்திகள் கட்சிக்குள் அனலைக் கிளப்பியிருக்கும் நிலையில், 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று அய்யர் புதிர் போட்டிருப்பது வெப்பத்தைக் கூட்டியிருக்கிறது" என்றனர்.

சசிகலா
சசிகலா

இது குறித்து விளக்கம் கேட்க சோ.அய்யர் தரப்பிடம் பேசினோம். ``பணியிலிருந்து ஓய்வுபெற்றதிலிருந்து அமைதியாகப் பொழுதைக் கழிக்கிறார் அய்யர். ஜெயலலிதா மீது அவருக்கு நல்ல அபிமானம் உண்டு என்றாலும், அரசியல்ரீதியாக தற்போது எந்த நகர்வையும் அவர் செய்யவில்லை. சசிகலாவுக்குச் சாதகமாக அவர் சிலருடன் பேசுகிறார் என்பது வெறும் கட்டுக்கதைதான்" என்றனர்.

அய்யர் தரப்பு இப்படி மறுப்பு தெரிவித்தாலும், அ.தி.மு.க வட்டாரங்களில் அவர் பற்றிய பேச்சு பரவலாக இருக்கிறது. சமீபத்தில் சசிகலாவுக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபரிடம் பேசிய 'பெருமாள்' பெயர்கொண்ட முன்னாள் அமைச்சர் ஒருவர், ``100 சி ரெடி பண்ணிக் கொடுங்க. நானே 25 எம்.எல்.ஏ-க்கள், 15 மாவட்டச் செயலாளர்களைப் புடிச்சுக் கொண்டு வந்துடுறேன். இதுல அய்யர் பேசுனாலும், சின்னம்மாவே பேசுனாலும் காசை இறக்காம ஒருத்தரையும் நம்மால புடிச்சு இழுக்க முடியாது" என்றிருக்கிறார்.

இந்த நிதர்சனம் சசிகலாவுக்கும் புரிகிறது என்கிறார்கள். `தை பிறந்தால் வழி பிறக்குமா?!' அல்லது இதுவும் புஸ்வாணம் ஆகுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.