Published:Updated:

`பட்டுச் சட்டை, கழுத்தில் பெரிய சங்கிலி' - எம்.ஜி.ஆர் பிறந்தநாளும் நினைவுகூரத்தக்க திட்டங்களும்!

எம்.ஜி.ஆர்

தமிழக அரசியலில் புதிதாகக் காலடி எடுத்துவைப்பவர்களும், புதிய பாய்ச்சலுக்குத் தயாராகிறவர்களும் எம்.ஜி.ஆரையே தங்களுக்குத் துணையாக அழைத்துக்கொள்கின்றனர். காரணம், எம்.ஜி.ஆர் என்கிற பெயருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு.

`பட்டுச் சட்டை, கழுத்தில் பெரிய சங்கிலி' - எம்.ஜி.ஆர் பிறந்தநாளும் நினைவுகூரத்தக்க திட்டங்களும்!

தமிழக அரசியலில் புதிதாகக் காலடி எடுத்துவைப்பவர்களும், புதிய பாய்ச்சலுக்குத் தயாராகிறவர்களும் எம்.ஜி.ஆரையே தங்களுக்குத் துணையாக அழைத்துக்கொள்கின்றனர். காரணம், எம்.ஜி.ஆர் என்கிற பெயருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு.

Published:Updated:
எம்.ஜி.ஆர்

அரசியலுக்கு வரும்போதே `கறுப்பு எம்.ஜி.ஆர்' என்கிற அடைமொழியோடுதான் வந்தார் நடிகர் விஜயகாந்த். மதுரையில், கட்சி ஆரம்பித்த நாளன்று, ஜானகியிடம் பரிசாகப்பெற்ற எம்.ஜி.ஆரின் பிரசார வாகனத்தில்தான் மேடைக்கும் வந்தார். அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன நடிகர் ரஜினிகாந்த், ``எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்'' என்றார். அரசியல் அறிவிப்பை வெளியிட்ட கொஞ்ச நாளில், சென்னை வேலப்பன் சாவடியிலுள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்துவைத்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் பிரசாரத்தைத் தொடங்கிய, நடிகர் கமல்ஹாசன், `எம்.ஜி.ஆரின் நீட்சி நான்' என்று சொல்லித்தான் பிரசாரத்தையே தொடங்கினார். அ.தி.மு.க-வினர் அதற்கு எதிர்க்குரல் எழுப்ப, ``எம்.ஜி.ஆர் அனைவருக்கும் சொந்தம், நான் அவர் மடியில் வளர்ந்தவன்'' என விளக்கமளித்தார்.

விஜயகாந்த், கமல், ரஜினி
விஜயகாந்த், கமல், ரஜினி

இப்படி திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் மட்டுமல்ல, கடந்த ஆண்டில் பா.ஜ.க-வின், வேல் யாத்திரைக்காகத் தயார்செய்யப்பட்ட பாடலில், எம்.ஜி.ஆரின் படத்தையும், `பொன்மனச்செம்மலின் அம்சமாக மோடியைக் கண்டோமடா...’ எனப் பாடல்வரியையும் சேர்த்து அ.தி.மு.க-வினருக்கே அதிர்ச்சி கொடுத்தனர், தமிழக பா.ஜ.க-வினர். ஏன், தமிழக முதல்வர் ஸ்டாலின்கூட, கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, ``எம்.ஜி.ஆர் எனக்குப் பெரியப்பா'' என்று சொல்லி கடந்த நினைவுகளில் மூழ்கினார். அரசியலில் எதிர்க்கட்சியாக இருந்தாலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை அரசு நிகழ்ச்சியாக அறிவித்திருக்கிறது. இப்படி அரசியலில் புதிதாகக் காலடி எடுத்துவைப்பவர்களும் புதிய பாய்ச்சலுக்குத் தயாராகிறவர்களும் எம்.ஜி.ஆரையே தங்களுக்குத் துணையாக அழைத்துக்கொள்கின்றனர். காரணம், எம்.ஜி.ஆர் என்கிற பெயருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எம்.ஜி.ஆரின் அரசியல்மீது அறிவுசார் வட்டத்தில் உள்ளவர்களுக்குக் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், பெருவாரியான எளிய மக்களுக்கு அவர் இன்றும் ஆதர்சமாகவே இருக்கிறார். அவருக்காக, அவர் கைகாட்டிய சின்னம் என்பதற்காகவே இரட்டை இலைக்கு வாக்களிப்பவர்கள் இன்றளவும் தமிழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில், எம்.ஜி.ஆர் அளவுக்கு மற்ற தலைவர்களின் பிறந்தநாளோ, இறந்தநாளோ நினைவுகூரப்படுவதில்லை. இன்று அவரின் 105-வது பிறந்தநாள். இப்போதும்கூட, தெருக்களில் அவரின் புகைப்படங்களைவைத்து அவரின் ரசிகர்கள் பிறந்தநாளைக் கொண்டாடிவருகின்றனர். இந்த நிலையில், எம்.ஜி.ஆர்., தன் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுவார் என்றும் அவர் கொண்டுவந்த திட்டங்களில் முக்கியமானவை பற்றியும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் கேட்டோம்,

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் புகைப்படம்
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் புகைப்படம்

``பிறந்தநாளன்று பட்டுச் சட்டை வேட்டியுடன், அவர் அம்மா உருவம் பொறித்த டாலருடன் இருக்கும் பெரிய சங்கிலி ஒன்றை அணிந்து, ஜானகி அம்மாவுடன் வீட்டில் அமர்ந்திருப்பார் எம்.ஜி.ஆர். அவரைச் சந்திக்கச் செல்பவர்களுக்கெல்லாம் ஐம்பது ரூபாய் அப்போதே கொடுப்பார். இப்படித்தான் தன் பிறந்தநாளை அவர் கொண்டாடுவார். எம்.ஜி.ஆரின் சாதனைகள் என்று சொன்னால், பிறப்பால் ஒருவர் ஒரு பதவிக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில், பாரம்பர்யப் பதவிகளை ஒழித்த நடவடிக்கைகளை நிச்சயமாக நாம் பாராட்டியே ஆக வேண்டும். கிராம முன்சீப், கிராம கர்ணம் ஆகிய பதவிகளுக்கு வாரிசு அடிப்படையில்தான் வந்துகொண்டிருந்தனர். கிராம நிலங்கள், கிராம நிர்வாகம் குறிப்பிட்ட சாதியினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. அதைத் தடுத்து, `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை நிரூபிக்கும் வகையில், கிராம நிர்வாக அலுவலர் என்கிற பதவியை உருவாக்கி யாரும் அந்தப் பொறுப்புக்கு வர முடியும் என்கிற நிலையை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல, பெரியார் நூற்றாண்டு விழா, பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் இரண்டையும் அரசாணை போட்டு நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர். அதேபோல, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்தவர் அவர்தான். இன்று பலர் வெளிநாடுகளில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்க அவர்தான் காரணம். வேலைவாய்ப்பையும் தாண்டி அதிகமான கல்லூரிகள் இப்போது இருந்தாலும், 84-85 காலகட்டத்தில் அப்படியொரு சிந்தனை நிச்சயம் பாராட்டத்தக்கதுதான். அதேபோல, அனைவரும் அறிந்த சத்துணவுத் திட்டம். காமராஜர் கொண்டு வந்த திட்டத்தை மேம்படுத்தியவர் எம்.ஜி.ஆர். இன்றுவரை, அவருக்குப் பிறகு வந்தவர்கள், அந்தத் திட்டத்தை செறிவுபடுத்தியிருக்கிறார்களே தவிர குறைக்கவில்லை. அதேபோல, யூனிஃபார்ம், செருப்பு உள்ளிட்ட பலவற்றை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி பள்ளியில் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் முயற்சிகளை எடுத்தார். இந்த விஷயங்களையெல்லாம் முக்கியமான விஷயங்களாக நான் எப்போதும் பார்க்கிறேன்'' என்றார்.

முனைவர் ரவிக்குமார் எம்.பி
முனைவர் ரவிக்குமார் எம்.பி

எம்.ஜி.ஆரின் நினைவுநாளான, டிசம்பர் 24-ம் தேதி, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார் 'வாத்தியாரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்' என்கிற தலைப்பில் சில விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அதில்,

``திரையுலகில் `புரட்சி நடிகர்’ என்று அவருக்கிருந்த பட்டப் பெயர் அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு ‘புரட்சித்தலைவர்’ என உருமாறியது. `அவர் என்ன புரட்சியை செய்தார்?’ என்று எதிர்க்கட்சிகளின் மேடைப் பேச்சாளர்களில் கேலி பேசாதவர்களே இருந்திருக்க மாட்டார்கள். அவர் புரட்சித்தலைவரோ, இல்லையோ அவர் எடுத்த இரண்டு நடவடிக்கைகள் புரட்சி என்று சொல்லத் தக்கவைதான். ஒன்று, தந்தை பெரியார் நூற்றாண்டின்போது அவர் பிறப்பித்த அரசாணை. தமிழ்நாட்டுத் தெருக்களின் பெயர்களில் இருந்த சாதிப் பின்னொட்டை நீக்கி அவர் பிறப்பித்த அந்த அரசாணை சாதியவாதிகளை சமூகநீதிக் காவலர்கள் எனக் கொண்டாடும் தமிழ்நாட்டுச் சூழலில் மிகவும் புரட்சிகரமானது. இரண்டாவது பாரம்பர்யப் பதவிகளை ஒழித்தது'' எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், ``எம்.ஜி.ஆரை பட்டியலின மக்கள் ஆதரித்ததற்குக் காரணம் வெறும் சினிமா கவர்ச்சி அல்ல. அவரின் அரசியல் பிரவேசம்தான் கிராமப்புற சாதி இறுக்கத்தைச் சற்றே தளர்த்தியது. பொருளாதாரப் பலன்களைவிட அது முக்கியமானது. எம்.ஜி.ஆரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான அம்சம் இது'' எனப் பதிவிட்டிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism