Published:Updated:

புதுச்சேரி: `தனித்தனியே போராட்டம்...' - காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுகிறதா தி.மு.க?

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் காங்கிரஸ் - தி.மு.க கட்சிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டிருப்பது, விவசாயிகளுக்கு ஆதரவான உண்ணாவிரதப் போராட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

புதுச்சேரியில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தாலும், சமீபகாலமாக ஆளும் காங்கிரஸ் அரசை வெளிப்படையாக விமர்சித்துவருகின்றனர் தி.மு.க நிர்வாகிகள். ஆனாலும், தி.மு.க-வின் ஆதரவில் ஆட்சி செய்துவரும் முதல்வர் நாராயணசாமி, முக்கியச் சாலைகள் மற்றும் சிற்றுண்டித் திட்டத்துக்கு கலைஞரின் பெயரைச் சூட்டியது, கலைஞருக்கு சிலை அறிவிப்பு என ஸ்டாலின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்கிறார்.

காங்கிரஸ் போராட்டம்
காங்கிரஸ் போராட்டம்

தமிழத்தில் சில இடங்களில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தி.மு.க தரப்பில் குரல்கள் ஒலித்துவரும் நிலையில், புதுச்சேரியில் அது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று கடந்த 21 நாள்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள் போராட்டத்தை நடத்திவருகின்றன. அதன் அடிப்படையில் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, புதுச்சேரி அண்ணா சிலை அருகில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்திவருகிறது காங்கிரஸ் கட்சி.

தி.மு.க ஆர்ப்பாட்டம்
தி.மு.க ஆர்ப்பாட்டம்

மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்த அந்தப் போராட்டத்தில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலாளர் ராஜாங்கம், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Vikatan

அதேசமயம் கூட்டணிக் கட்சியான தி.மு.க இந்தப் போராட்டத்தை புறக்கணித்ததுடன், தனியாக திருக்கனூரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அந்தப் போராட்டத்தில் புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க அமைப்பாளர் சிவா, வடக்கு மாநில அமைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க-வின் இந்தப் புறக்கணிப்பு, காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு