Published:Updated:

`அட்டாக்’ தி.மு.க., காங்கிரஸ்! - குஷ்புவுக்கு கொடுக்கப்பட்ட 5 அசைன்மென்ட்கள்

குஷ்பு
குஷ்பு

நான்கு டிமாண்ட்களைத்தான் குஷ்பு, இறுதி நேரத்தில் முன்வெச்சாங்க. `இவை எல்லாவற்றையும் பரிசீலித்து, எதிர்காலத்தில் நிறைவேற்றுவோம்’ எனத் தலைமை கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதாகத் தகவல்.

அது காங்கிரஸ் ஆட்சியிலிருந்த 2014-ம் ஆண்டுக் காலம். தி.மு.க-விலிருந்து தடாலடியாக காங்கிரஸில் இணைகிறார் அந்தப் பிரபலம். இணைந்த பிறகு அவர் கொடுத்த ஒரு பேட்டியில் , `தமிழ்நாட்டில், தாம்பரத்தைத் தாண்டினால் பா.ஜ.க-வை யாரென்றே, யாருக்கும் தெரியாது' என்றார்.

காலங்கள் உருண்டோடின... இதோ நிகழ்காலம்...

`தமிழ்நாடு முழுக்க தாமரை மலர்ந்தே தீரும். 2021-ல் அதைச் செய்துகாட்டுவேன்' என அடித்துப் பேசுகிறார் அதே பிரபலம்.

காங்கிரஸிலிருந்து இப்போது பா.ஜ.க-வில் ஐக்கியமாகியிருக்கும் அந்தப் பிரபலத்தின் பெயரை நாம் பதிவு செய்வதற்குள் வாசகர்கள் நீங்களே `குஷ்பு' என்று மனதுக்குள் சொல்லிப் பார்த்திருப்பீர்கள்.

ஆம், அவரேதான். பா.ஜ.க-வில் இணைந்த கையோடு பார்ட்டி ஆபீஸ் விஜயம், பத்திரிகையாளர்களுடன் காரசாரப் பேட்டி, கட்சி நிர்வாகிகள் சந்திப்பு... என டாப் கியரில் தனது பயணத்தைத் தொடங்கிவிட்டார்.

குஷ்பு
குஷ்பு

கடந்த 10 ஆண்டுகளில் குஷ்பு மாறிய மூன்றாவது கட்சி பா.ஜ.க. இதை குஷ்புவிடம் கேள்வியாகவே பத்திரிகையாளர்கள் முன்வைக்க, 'சோ, வாட்.... நான் கொள்கை மாறவில்லையே...' என்கிறார் கூலாக.

`அப்படியென்றால் உங்கள் கொள்கைதான் என்ன?' என்று பத்திரிகையாளர்கள் மடக்கினால் `மக்களுக்கு சேவை செய்வதுதான்' என்கிறார் சிம்பிளாக.

நீங்களோ, உங்களை `பெரியாரிஸ்ட்' என்பவர். ஆனால் பா.ஜ.க-வில் இணைத்திருக்கிறீர்களே... இது முரண்பாடாக இல்லையா?' என்றால் , `இதிலென்னங்க முரண்பாடு... இப்போவும் நான் பெரியாரிஸ்ட்தான். பெண் விடுதலை, தலித் மக்களுக்காகக் குரல் கொடுப்பது என்ற வகையில் அவர் கொள்கைகள் எனக்குப் பிடிக்கும். பா.ஜ.க-வும் அதைத்தானே செய்கிறார்கள்...' என அதற்கும் சளைக்காமல் கவுன்ட்டர் கொடுக்கிறார் குஷ்பு.

குஷ்புவின் 4 டிமாண்ட்கள்:

`பத்து ஆண்டுகளில் நல்லாவே அரசியல்வாதியா ஃபார்ம் ஆகியிருக்காங்கப்பா...' என குஷ்புவை, தாமரைத் தொண்டர்களே ஜாலியாக கமென்ட் செய்ய , `எப்படி இந்த அளவுக்கு இறங்கி அடிக்கிறாங்க... என்ன காரணம்?’ என்ற கேள்வியை, பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகிகளிடம் முன்வைத்தோம்..

`அது ஒண்ணுமில்லைங்க... குஷ்பு வைத்த நான்கு டிமாண்ட்களுக்கு டிக் அடித்திருக்கிறது தலைமை. அந்த உற்சாகம்தான் குஷ்புவை முதல் நாளிலிருந்தே களப்பணியில் கலக்கவைத்திருக்கிறது' என்றவர்கள், அதை விவரிக்கத் தொடங்கினார்கள்.

குஷ்பு
குஷ்பு

1) தனக்கு தேசிய அளவில் முக்கியமான பொறுப்புகள் வழங்க வேண்டும். அதோடு தமிழ்நாட்டுக்குள்ளும் ஒரு வலிமையான பொறுப்பு வழங்க வேண்டும்.

2) தி.மு.க-வில் இருந்தபோதும், காங்கிரஸில் இருந்தபோதும் மயிலாப்பூர் தொகுதியை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் குஷ்பு. அது `கை' நழுவிப்போனது. குஷ்பு, `கை'-யில் இருந்து `தாமரை'-க்கு தாவியதற்கு இதுவும் ஒரு காரணம். எனவே, தற்போது ராஜ்ய சபா எம்.பி போன்ற வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால், வரும் சட்டமன்றத் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியைத் தனக்கு ஒதுக்க வேண்டும்.

3) கட்சிக்குள் கருத்து சுதந்திரம் வேண்டும். கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் கருத்துகளைப் பதிவு செய்வேன். இருந்தாலும். தன் கருத்துக்குத் தடைபோடக் கூடாது. அது நிச்சயமாக கட்சிக் கொள்கைகளைக் கூடுதலாகவே பறைசாற்றுவதாகத்தான் இருக்கும். அனுமதிக்க வேண்டும்


4) திரைத்துறையிலிருந்து வந்திருந்தாலும் தன்னை ஒரு நடிகையாக மட்டுமே சுருக்கிப் பார்க்கக் கூடாது. தன்னை, சுயசிந்தனையுள்ள அரசியல் முன்னணி சக்தியாக பார்க்க வேண்டும். அகில இந்திய அளவில் பிரசாரம் செய்யவும் தனக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

இப்படி, மேற்கண்ட நான்கு டிமாண்ட்களைத்தான் குஷ்பு, இறுதி நேரத்தில் முன்வெச்சாங்க .`இவை எல்லாவற்றையும் பரிசீலித்து, எதிர்காலத்தில் நிறைவேற்றுவோம்’ எனத் தலைமை கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதாகத் தகவல். அதன் பிறகுதான் குஷ்புவும் இப்போ பம்பரமாகச் சுற்றத் தொடங்கிட்டாங்க" என்கிறார்கள் உற்சாகமான குரலில்.

குஷ்பு
குஷ்பு

`குஷ்புவுக்கு நிறைய கடன் சிக்கல் ஏற்பட்டது, குறிப்பாக, அவருடைய கணவர் சுந்தர் சி -க்கு தயாரிப்புத்துறையில் கடுமையான கடன் நெருக்கடி ஏற்பட்டிருக்கு. மத்தியில் ஆளும் கட்சியின் அனுசரனை இருந்தால், இந்தப் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என்று பா.ஜ.க-விலுள்ள திரைத்துறை சார்ந்த மீடியேட்டர் ஒருவர் கன்வின்ஸ் செய்தார். அதையெல்லாம் பரிசீலித்துத்தான் குஷ்பு பா.ஜ.க-வில் இணைந்தார் என்று தகவல்கள் வலம்வருகின்றனவே?' என்ற கேள்வியை, அதே மூத்த நிர்வாகிகளிடம் முன்வைத்தோம்.

மெள்ளப் புன்னகைத்தவர்கள், ` `என் அரசியலில், எந்த இடத்திலும் என் கணவர் தலையிடுவதில்லை’ என்று குஷ்புவே தெரிவிச்சிருக்காங்களே... அதனால அதைவிடுவோம் பாஸ். எங்க தலைமை குஷ்புவுக்குக் கொடுத்த ஐந்து முக்கிய அசைன்மென்ட்-களைப் பார்ப்போமே...' என்றபடியே அதை விவரிக்கத் தொடங்கினார்கள் கூலாக.

குஷ்புவின் `கதர் டு காவி' அரசியல் வரலாறு!

பா.ஜ.க கொடுத்த ஐந்துஅசைன்மென்ட்கள்!

1) பெண்களிடம், அதிலும் குறிப்பாக விளிம்புநிலைப் பெண்களை குறிவைத்து அரசியல் பணிகளைத் தொடங்க வேண்டும். அவர்களிடம் ஒரு விழிப்புணர்வு தூதர்போலச் செயல்பட்டு அவர்களை அணிதிரட்ட வேண்டும். முத்தலாக் சட்டம் போன்ற பா.ஜ.க கொண்டு வந்த திட்டங்களை நல்ல திட்டங்களாக, பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும். பெண்களை அணிதிரட்டிவிட்டால் பாதி வெற்றி அடைந்ததற்குச் சமம் என்பது பா.ஜ.க கணக்கு

2) சிறுபான்மையினரை அதிக அளவில் கட்சியில் இணைப்பதன் மூலம், `பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி’ என்ற குற்றச்சாட்டுகளை முறியடிக்க முடியும். இதை மனதில்வைத்துதான் குஷ்பு போன்ற பிரபலங்களைக் கட்சிக்குள் அழைத்து வந்தார்கள். அதே அசைன்மென்ட்டைத்தான் தற்போது குஷ்புவுக்கும் கொடுக்கிறார்கள். சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர் பகுதிகளில் களமிறங்கி அரசியல் பணியாற்ற வேண்டும். அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, சிறுபான்மையினரை அதிக அளவில் கட்சிக்குள் ஐக்கியப்படுத்த வேண்டும். `பா.ஜ.க., அந்த மக்களுக்கு எதிரான கட்சியில்லை’ என்பதை உணரவைக்க வேண்டும்.

 குஷ்பு
குஷ்பு

3) தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அட்டாக் தி.மு.க. மத்தியில் அட்டாக் காங்கிரஸ். அவர்களின் செயல்பாடுகளைக் கடுமையாக அட்டாக் செய்தும், கவுன்ட்டர் கொடுத்தும் செயல்பட வேண்டும்.

4) கலைத்துறை சார்ந்த பல பிரபலங்களையும் கட்சிக்குள் ஐக்கியப்படுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும். பிரபலங்கள் மூலம் கட்சியைக் கடைகோடியிலிருக்கும் மக்கள் வரை எளிதில் கொண்டு சேர்க்க முடியும்.

5) தமிழ்நாட்டில், `கோ பேக் மோடி’யை முறியடித்து, `வெல்கம் மோடி’ என்கிற அளவுக்கு அவரின் இமேஜை உயர்த்த வேண்டும்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் பா.ஜ .க-வை பட்டிதொட்டியெங்கும் பரப்ப வேண்டும். இதுதான் குஷ்புவுக்கு இப்போதைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மென்ட்கள். தேர்தல் நெருங்க, நெருங்க மேலும் பல கூடவும் வாய்ப்புண்டு' என விரிவாக விளக்கியவர்கள், `தமிழ்நாட்டு அரசியலை பா.ஜ.க தீர்மானிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை' என்கிறார்கள் உற்சாகம் குறையாமல்.

`நமீதா முதல் குஷ்பு வரை'- பா.ஜ.க-வின் பளபளக்கும் நட்சத்திர அரசியல் வியூகம் இதுதான்!
அடுத்த கட்டுரைக்கு