பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. கடந்த மாதம் அந்த மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் பா.ஜ.க-வில் இணைந்தார். பஞ்சாப் அரசியலில் அந்தச் சம்பவம் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து பா.ஜ.க-வில் இணைந்த சுனில் ஜாக்கருடன் நான்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வீடியோ அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியானது. அந்த வீடியோவை பா.ஜ.க தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தனது ட்விட்டரில் பகிர்ந்து, ``பல காங்கிரஸ், சிரோமணி அகாலிதள தலைவர்கள் பா.ஜ.க-வில் சேருவார்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்களான ராஜ் குமார் வெர்கா, பல்பீர் சித்து, குர்பிரீத் கங்கர், சுந்தர் ஷாம் அரோரா உள்ளிட்ட தலைவர்கள், பஞ்சாப் மாநில பா.ஜ.க தலைவர் அஷ்வனி சர்மா, பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க-வில் நேற்றைய தினம் இணைந்தனர். இவர்கள் நான்குபேரும் கடந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க-வில் இணைந்தது தொடர்பாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வார்ரிங் ஊடகங்களிடம், ``பா.ஜ.க தேவையற்றவற்றைத் தனது மடியில் எடுத்துக்கொண்டுள்ளது. அது எத்தகைய பரிசைக் கொடுக்கும் என்பதை அடுத்த தேர்தலில் அந்தக் கட்சி உணரும். இவர்களால் காங்கிரஸ் அரசியல் தோல்வியைத்தான் சந்தித்தது. என்னைப் பொறுத்தவரை இது தேவையற்ற சுமை அவ்வளவுதான்" எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் பா.ஜ.க-வில் இணைந்திருப்பது, அந்தக் கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.