Published:Updated:

2016, செப்டம்பர் 22 : `அப்போலோ-வில் ஆரம்பித்த அதிகார மையம்’ - அ.தி.மு.க-வை அசைத்துப்பார்க்குமா?

ஜெயலலிதா: அப்போலோ மருத்துவமனையில்!
ஜெயலலிதா: அப்போலோ மருத்துவமனையில்! ( Representational Image )

பன்னீரைவைத்து தமிழக அரசியலிலும் ஆட்சியிலும் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டதோ, அதை எடப்பாடியைவைத்து செய்துகொண்டது பி.ஜே.பி. இப்போது ஆட்சியின் இறுதிக்கட்டம் வந்துவிட்டது.

2016, செப்டம்பர் 22. அதாவது, இன்றைய தேதியில்தான் தமிழகத்தின் அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். தமிழக அரசியலில் நெடிய திருப்பத்துக்குக் காரணமாக அமைந்த அந்த நிகழ்வு நடந்தேறி, இன்றோடு நான்கு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன.

அப்போலோ மருத்துவமனை
அப்போலோ மருத்துவமனை
விகடன்

அ.தி.மு.க -வின் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 21-ம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் சில திட்டங்களைத் தொடங்கிவைத்தார். அப்போதே அவரது உடல்நிலை மிகவும் நலிவடைந்திருந்தது. அன்று தலைமைச் செயலகத்திலிருந்து காரில் ஏறும்போது அவரது தடுமாற்றமான நடையைக் கண்டு பாதுகாப்பு அதிகாரிகளே அப்போது அச்சப்பட்டனர். அதுதான் தலைமைச் செயலகத்துக்கான அவரது கடைசிப் பயணம் என்பதை அப்போது யாரும் அறியவில்லை. அதன் பிறகு, அப்போலோவில் அவசரமாக அனுமதிக்கப்பட்டார். முதலில் நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல், அதற்கடுத்து சுவாசிப்பதில் சிக்கல், எக்மோ சிகிச்சை, இறுதியாக கார்டியாக் அரெஸ்ட் என்று ஜெயலலிதாவின் அப்போலா மருத்துவக் குறிப்புகள் எழுப்பிய பல்வேறு சர்ச்சைகளுக்கு இப்போதுவரை விடை இல்லை.

ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட பிறகு மத்திய பி.ஜே.பி அரசின் ஆதிக்கம் தமிழக அரசியலில் ஆரம்பமானது. அந்த ஆதிக்கம் அடுத்தடுத்து அ.தி.மு.க-வுக்குள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். நான்காம் தேதியே அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த வெங்கய்ய நாயுடு உடனடியாக சென்னைக்கு வந்தார். அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை நேரடியாகக் கேட்டறிந்தார். குறிப்பாக, ஜெயலலிதாவின் மரணம் குறித்த அறிவிப்பை அப்போலோ மருத்துவமனை அறிவிப்பதற்கு முன்பாக அந்தத் தகவல் டெல்லி தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து சில உத்தரவுகள் உடனடியாகப் பிறப்பிக்கப்பட்டன.

ஜெயலலிதா மரணம்
ஜெயலலிதா மரணம்

அதன்படி அடுத்த முதல்வர் யார், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சென்னையிலுள்ள சில அதிகார மையங்கள் சத்தமில்லாமல் ஆலோசனை செய்தன. அந்த அதிகார மையங்களுக்கும் அ.தி.மு.க-வுக்கும் அப்போது பெரிய அளவில் எந்தத் தொடர்பும் இல்லை. அன்றைக்கு அ.தி.மு.க-வின் அதிகார மையம் என்றால் அது சசிகலா குடும்பம் மட்டுமே. அப்போலோவில் ஜெயலலிதா மரணம் குறித்த அறிவிப்பு வரும்வரை அந்த அதிகார அச்சைச் சுற்றியே அ.தி.மு.க-வின் செயல்பாடுகள் இருந்துவந்தன. ஆனால், ஜெயலலிதாவின் மரண அறிவிப்புக்குப் பிறகு அதிகார மையத்தின் மாற்றங்களும் ஆரம்பித்தன.

ஒதுக்கிவைத்த ஜெயலலிதா... அல்வா கொடுத்த கருணாநிதி... எஸ்.வி.சேகரின் அரசியல் வரலாறு!

அதன் வெளிப்பாடு பட்டவர்த்தனமாக அரங்கேறியது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி 7-ம் தேதி. ஆம், அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து அ.தி.மு.க-வின் அதிகார மையமாக விளங்கிய சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தத்தைத் தொடங்கினார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு எப்படி அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்ததோ, அதேபோல ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் மறைந்தபோது, காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க பிளவைப் பயன்படுத்திக்கொண்டு ஆட்சிக்கு வரத் துடித்தது. அதற்கு வாய்ப்பும் இருந்தது. தமிழக சட்டமன்றத்தில் கணிசமான உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தார்கள். அவர்கள் அ.தி.மு.க பிளவால் பலனடைய கணக்கு போட்டார்கள். ஆனால், ஜெயலலிதா மறைவின்போது தமிழக சட்டமன்றத்தில் ஓர் இடம்கூட இல்லாமலிருந்த பி.ஜே.பி-க்குத் தெரியும், `தமிழத்தில் ஆட்சியை நாம் பிடிக்க முடியாது’ என்பது. ஆனால், நாம் சொல்வதைச் செயல்படுத்தும் ஓர் ஆட்சியைத் தமிழகத்தில் கட்டமைக்க முடியும் என்று கணக்கு போட்டது. அந்தக் கணக்குக்கு கிடைத்த விடைதான் எடப்பாடி.

சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி
சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி

பன்னீர் படை திரட்டியபோதுதான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் புரிந்தது, அ.தி்.மு.க-வை இயக்க மற்றோர் அதிகார சக்தி சத்தமில்லாமல் களம் இறங்கிவிட்டது என்கிற உண்மை. தமிழக அரசியல் களம் நீண்டகாலத்துக்குப் பிறகு தேசியக் கட்சி்களோடு இணைந்து பயணிக்க வேண்டிய நிர்பந்தத்தை அந்த அதிகார மையம் ஏற்படுத்தியது. அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறின. அ.தி.மு.க-வின் அதிகாரம்மிக்க நபராக இருந்த சசிகலாவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டார். அதிகாரத்தோடு ஆட்சியில் ஏறிய எடப்பாடியின் குடுமி மத்திய அரசின் கையில் இருந்தது. அங்கி்ருந்து என்ன உத்தரவு வருகிறதோ, அதைச் செயல்படுத்தும் சேவகனாகவே அப்போது எடப்பாடியைத் தேர்ந்தெடுத்தது பி.ஜே.பி. அவர்கள் கட்டளைப்படியே அ.தி.மு.க-வின் இணைப்பும் நடந்தேறியது.

Vikatan

ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் விசாரணை ஆரம்பத்தில் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. குறிப்பாக, `ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்’ என்று சொன்னவர்களெல்லாம், `நாங்கள் சொல்லவே இல்லை’ என பல்டியடித்த காட்சிகளைத் தமிழகமே பார்த்தது. இப்படி ஆணையத்தி்ன் விசாரணை வீரியமாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில், அப்போலோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆணையத்துக்குத் தடை ஆணை வாங்கியது. இதுவரை எட்டு முறைக்கு மேல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக் காலத்தை நீடித்துக்கொண்டே வருகிறது எடப்பாடி அரசு.

மோடி- எடப்பாடி பழனிசாமி
மோடி- எடப்பாடி பழனிசாமி

மற்றொருபுறம் பன்னீரைவைத்து, தமிழக அரசியலிலும் ஆட்சியிலும் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டதோ, அதை எடப்பாடியைவைத்து செய்துகொண்டது பி.ஜே.பி. இப்போது ஆட்சியின் இறுதிக்கட்டம் வந்துவிட்டது. பி.ஜே.பி- அ.தி.மு.க இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டத்துக்கும் முடிவு நெருங்கிவருகிறது. யாரைச் சிறைக்கு அனுப்பி, தங்களுக்கு அதிகாரத்தை கட்டமைக்க பி.ஜே.பி நினைத்ததோ, அந்த சசிகலாவே இப்போது பி.ஜே.பி-க்கு மீண்டும் தேவைப்படுகிறார். அன்று அ.தி.மு.க-வைப் பிரிக்க ஒர் அதிகார மையம் தேவைப்பட்டது. இன்று மற்றோர் அதிகார மையம் அ.தி.மு.க-வை ஒன்றிணைக்கக் களம் இறங்கியிருக்கிறது. அன்று அப்போலோவில் ஆரம்பித்த அதிகார மையத்தின் ஆதிக்கம், நான்கு ஆணடுகளாக அ.தி.மு.க-வுக்குள் நிலவி வருகிறது. அசுர சக்தியாக இருந்த ஜெயலலிதா இல்லாமல் முதல் சட்டமன்ற பொதுத்தேர்தலை அ.தி.மு.க சந்திக்கவிருக்கிறது. அந்தத் தேர்தல் முடிவுகளே அ.தி.மு.க-வின் எதிர்கால அதிகார மையமாக யார் இருக்கப்போகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டப்போகிறது.

அடுத்த கட்டுரைக்கு