Published:Updated:

`கட்சிகளின் இலவசத் திட்டங்களில் தலையிட முடியாது’ - தேர்தல் ஆணையம் கைவிரிப்பது சரியா?

தேர்தல் ஆணையம்

``அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதும், கொடுப்பதும் கட்சிகளின் கொள்கை முடிவு. அதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது."

`கட்சிகளின் இலவசத் திட்டங்களில் தலையிட முடியாது’ - தேர்தல் ஆணையம் கைவிரிப்பது சரியா?

``அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதும், கொடுப்பதும் கட்சிகளின் கொள்கை முடிவு. அதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது."

Published:Updated:
தேர்தல் ஆணையம்

வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் நேரங்களில் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் தொடர்பாக ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ``தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் நிறைவேற்ற முடியாத இலவசங்களை அறிவிப்பது லஞ்சம் வழங்குவதற்குச் சமம். நேர்மையான தேர்தல் முறைக்கு எதிரான இந்தச் செயலுக்குத் தடைவிதிக்க வேண்டும். இலவசத் திட்டங்களால் பின்னாளில் மக்கள்தான் சிரமத்தைச் சந்திக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிவிப்புகள், வாக்குறுதிகளை நெறிப்படுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையத்தை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில், ``அரசியல் கட்சிகள் தேர்தல் சமயத்தில் இலவசங்களை அறிவிக்கின்றன. அந்த வாக்குறுதிகள் சாத்தியமா, இல்லையா என்பதையும், அவை அந்த மாநிலங்களின் பொருளாதாரத்தைப் பாதிக்குமா என்பதையும் வாக்காளர்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்" என்று கூறியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், ``ஒரு கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகு எடுக்கும் கொள்கை முடிவுகளில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. அதேபோல, தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அவர்களைத் தகுதிநீக்கமும் செய்ய முடியாது. தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம், பொருள், சலுகைகளை வழங்கக் கூடாது. அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தியே தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது" என்று சொல்லப்பட்டது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

அதோடு, ``இந்த வழக்கைத் தொடர்ந்தவர் கூறுவதுபோல, தேர்தல் வாக்குறுதியில் இலவசங்களை அறிவிக்கும் கட்சியின் சின்னத்தை முடக்குவதும் அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்புடையது கிடையாது. ஊழல் நடந்திருந்தால் மட்டுமே கட்சிகளை ரத்துசெய்யும் அதிகாரம் உள்ளது. அரசியல் சாசனத்தின்படி, இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு கிடையாது. அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதும், வழங்குவதும் அந்தந்தக் கட்சிகளின் கொள்கை முடிவு. கொள்கை முடிவுகளில் தேர்தல் ஆணையத்தால் தலையிட முடியாது" என்று தெரிவித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பது குறித்து, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமியிடம் பேசினோம். ``கட்சிகளின் கொள்கை முடிவுகளில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. அந்த அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்குக் கிடையாது. கட்சிகளின் அறிவிப்பால் பயனடையப்போவதும், பாதிப்படையப்போவதும் பொதுமக்கள்தான். அறிவிக்கப்படும் இலவசங்கள் குறித்து அந்த மக்கள்தான் கேட்க வேண்டும். அனைத்தையும் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறு" என்று கூறினார்.

கோபாலசாமி
கோபாலசாமி

தொடர்ந்து பேசியவர், ``கடந்த 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களின் மீதுள்ள குற்ற வழக்குகள் தொடர்பாகவும், சொத்து விவரங்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அப்படிக் குற்ற வழக்குகளைத் தெரிவிக்கும் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்காமல் இருக்கிறார்கள...? கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் சொத்து அதிகரித்திருக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் இருக்கிறார்களா... கொலை, கொள்ளை வழக்குகளில் உள்ள எத்தனை உறுப்பினர்கள் வெற்றி பெற்று பதவியில் இருக்கிறார்கள்... இதையெல்லாம் சிந்திக்கவேண்டியது பொதுமக்கள்தான்" என்று கூறினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சமீபத்தில் பிரதமர் மோடி பல்வேறு துறை சார்ந்த செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில், ``இலவசத் திட்டங்களால் மாநிலங்களில் பொருளாதார நிலை பாதாளத்தை நோக்கிச் செல்கிறது. மத்திய அரசு உதவவில்லையென்றால் அந்த மாநிலங்கள் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். மாநிலத்தின் நிதிநிலையைச் சரிசெய்யாமல் இலவசத் திட்டங்களைத் தொடர்ந்தால் கிரீஸ், இலங்கைபோல அந்த மாநிலங்களிலும் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்" என்று அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism