Published:Updated:

`குறை சொல்ல முடியாது’ ; `முதலுக்கே மோசம்’... இலவசத் திட்டங்கள் கிளப்பிய விவாதம்!

பிரதமர் மோடி - உச்ச நீதிமன்றம்

"இலவசங்கள் என்றால் என்ன என்பதை யார் சொல்கிறார்கள், எதற்குச் சொல்கிறார்கள், எந்த நேரத்தில் சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் பொருள் மாறும்."- பேராசிரியர் ஜோதி சிவஞானம்

`குறை சொல்ல முடியாது’ ; `முதலுக்கே மோசம்’... இலவசத் திட்டங்கள் கிளப்பிய விவாதம்!

"இலவசங்கள் என்றால் என்ன என்பதை யார் சொல்கிறார்கள், எதற்குச் சொல்கிறார்கள், எந்த நேரத்தில் சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் பொருள் மாறும்."- பேராசிரியர் ஜோதி சிவஞானம்

Published:Updated:
பிரதமர் மோடி - உச்ச நீதிமன்றம்

இலவசங்கள் தேவையா, இல்லையா என்கிற விவாதம் நாடு தழுவிய அளவில் உச்சம் தொட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுவதும், இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசியிருப்பதுமே இந்தப் பிரச்னையின் அடிப்படை. தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கெஜ்ரிவால், அண்ணாமலை, சீமான் போன்றோரும் இந்த விவாதத்தைத் தீவிரப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

விதைபோட்ட தமிழ்நாடு..!

இலவசத் திட்டங்களைப் பொறுத்தவரை இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் வழிகாட்டி. தமிழ்நாட்டில் கடும் அரிசிப் பஞ்சம் நிலவிய காலத்தில், ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி அரிசி நிச்சயம்’ என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார் அண்ணா. அன்று முதல் இன்றுவரை சலுகை அறிவிப்புகள் இல்லாத தேர்தலே இல்லை என்றாலும், 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்தான் நேரடியாக ‘இலவச வாக்குறுதிகள்’ கொடுக்கப்பட்டன. இலவச டி.வி., 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற வாக்குறுதிகளை அளித்தார் கருணாநிதி. ‘தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைதான் இந்தத் தேர்தலின் கதாநாயகன்’ என்று சொன்னார் அன்றைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

கலைஞர் கருணாநிதி- அண்ணா
கலைஞர் கருணாநிதி- அண்ணா

2011 தேர்தல் நேரத்தில் தி.மு.க-வைப்போல, இலவசங்களை வாரி வழங்க முடிவு செய்த ஜெயலலிதா, கருணாநிதியின் அறிவிப்புகளுக்கு டஃப் கொடுத்தார். ‘கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப்’ என்ற கருணாநிதிக்கு பதிலடியாக, `ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மாணவ, மாணவிகளுக்கே இலவச லேப்டாப்’ என அறிவித்தார். அப்போதும் விடாத தி.மு.க., ‘இலவச மிக்ஸி அல்லது கிரைண்டர்’ என்று அறிவித்தது. அ.தி.மு.க-வோ ஒரு படி மேலே போய், ‘அதனோடு மின் விசிறியையும் சேர்த்தே தருகிறோம்’ என அறிவித்து தேர்தலில் வெற்றி கண்டது. 2016 தேர்தலிலும் 100 யூனிட் மின்சாரம் இலவசம், 50% மானியத்தில் பெண்களுக்கு இருசக்கர வாகனம், தாலிக்குத் தங்கம் போன்ற இலவசத் திட்டங்களை அறிவித்து, வாக்குகளை அள்ளிக்கொண்டது அ.தி.மு.க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2021 சட்டமன்றத் தேர்தலில் குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 என்ற இலவச அறிவிப்பை வெளியிட்டது தி.மு.க. வழக்கம்போலவே, ரூ.500 கூடுதலாகச் சேர்த்துப் போட்டு அறிவிப்பை வெளியிட்டது அ.தி.மு.க. இது போன்ற தமிழ்நாட்டின் அறிவிப்புகளைப் பின்பற்றி, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் இப்போது தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

குறை சொல்ல முடியாது!

எனவே, இலவச திட்டங்களைக் குறைசொல்வோரெல்லாம் தமிழகத்தை ஆட்சி செய்தவர்களையும் மறைமுகமாக விமர்சிக்கிறார்கள். இது பற்றி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டோம். “தமிழ்நாடு சமூகநீதிக்கான மாநிலம். எனவே, எல்லோரையும் சமமாகக் கைதூக்கிவிடுவது அரசின் கடமை. அதனால்தான் அண்ணா, புரட்சித்தலைவர் காலத்திலிருந்து அம்மா காலம் வரை பல இலவச திட்டங்கள் மூலம் தமிழ்நாடு பொருளாதார ஏற்றம், சமூக முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இலவசம் என்பதைக்கூட ‘விலையில்லா’ என்றுதான் அம்மா கூறினார்கள்” என்கிறார்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

தி.மு.க-வின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனோ, “நலத் திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே இலவசங்கள் கொடுக்கப்படுகின்றன. வளர்கின்ற மூன்றாம் கட்ட நாடான நம் நாட்டில் மற்ற துறைகளில் கொடுக்கவில்லை என்றாலும், கல்வி, விவசாயம், பொதுசுகாதாரம் இந்த மூன்றையும் இலவசமாகக் கொடுப்பதை யாரும் குறை சொல்ல முடியாது” என்கிறார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

முதலுக்கே மோசம்..!

பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “ஓட்டு வாங்குவதற்காக இலவசங்கள் அறிவிக்கக் கூடாது. ‘டி.வி கொடுப்போம், தங்கம் கொடுப்போம், கடன்களை ரத்து செய்வோம்’ என்கிறார்கள். மக்கள் சேமிப்பிலிருந்துதான் வங்கிகள் நடத்தப்படுகின்றன. அதேபோலத்தான் அரசுக் கருவூலமும். இலவசம் என்ற பெயரில் முதலுக்கே மோசம் செய்துவிடக் கூடாது. இலவசங்கள் அதிகரிக்க அதிகரிக்க அரசின் வரிகள், செலவினங்கள் அதிகரிப்பதோடு, பணவீக்கமும் பெருகும்” என்றார்.

பொருளாதார ஆலோசகர் பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம். “இலவசங்கள் என்றால் என்ன என்பதை யார் சொல்கிறார்கள், எதற்குச் சொல்கிறார்கள், எந்த நேரத்தில் சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் பொருள் மாறும். கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடிகள் வரிச்சலுகை கொடுப்பதும் இலவசம்தான். அதைத்தான் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடைமுறைப்படுத்திவருகிறது. அடுத்து யாருடைய பாக்கெட்டிலிருந்தும் இலவசங்கள் கொடுக்கப்படுவதில்லை. மக்களிடமிருந்து வாங்கும் வரியிலிருந்து மக்களுக்கே கொடுப்பதை எப்படி இலவசம் என்று சொல்ல முடியும்... இந்த இலவசத் திட்டங்கள் எல்லாமே மாநில அரசுகள் சட்டமன்றத்தில் முடிவு செய்வது. மத்திய அரசு கார்ப்பரேட் வரிகளைக் குறைத்துவிட்டு, மாநில அரசின் பட்ஜெட்டில் தீர்மானிக்கக்கூடிய விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட்டு அழுத்தம் கொடுக்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” என்றார்.

ஜோதி சிவஞானம்
ஜோதி சிவஞானம்

இதற்கிடையே இலவச அறிவிப்புகள் தொடர்பான வழக்கின் வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா, நீதிபதி கிருஷ்ணா முராரி ஆகியோர், “இந்தியா போன்ற நாட்டில் இலவசங்களைக் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது. இலவசங்களுக்குச் செலவிடும் பணத்தைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிக்குப் பயன்படுத்தலாம். மக்கள் நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. அரசு வழங்கும் இலவசங்கள் பல நேரத்தில் உயிர்காக்கும் அம்சங்களாக உள்ளன. இலவசங்களை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுதான் சட்டம் இயற்ற வேண்டும்” எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விவாதம் ஆரோக்கியமான விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே சாமானியனின் கோரிக்கை!