Published:Updated:

இலவச விவகாரம்: பி.டி.ஆர் பேச்சும்... உச்ச நீதிமன்றக் கருத்தும் - நடந்தது என்ன?

பி.டி.ஆர் - உச்ச நீதிமன்றம்

``உங்கள் கட்சி குறித்துப் பேச நிறைய இருக்கின்றன. தலைமை நீதிபதியாக இருப்பதால் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்கிறேன். நீங்கள் மட்டும்தான் அறிவார்ந்த கட்சி என்று நினைக்க வேண்டாம்.” - உச்ச நீதிமன்றம்

இலவச விவகாரம்: பி.டி.ஆர் பேச்சும்... உச்ச நீதிமன்றக் கருத்தும் - நடந்தது என்ன?

``உங்கள் கட்சி குறித்துப் பேச நிறைய இருக்கின்றன. தலைமை நீதிபதியாக இருப்பதால் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்கிறேன். நீங்கள் மட்டும்தான் அறிவார்ந்த கட்சி என்று நினைக்க வேண்டாம்.” - உச்ச நீதிமன்றம்

Published:Updated:
பி.டி.ஆர் - உச்ச நீதிமன்றம்

சமீபத்தில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பாஜக தலைமை வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை வழங்கும் உரிமையை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது லஞ்சம் வழங்குவதுபோலத்தான் என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அப்போது பேசிய நீதிபதி, ``நாட்டின் பொருளாதாரத்தோடு தொடர்புடைய இந்த விவகாரம் மிகவும் முக்கியமான பிரச்னை" என்று சொல்லியிருந்தார். அப்போது அஸ்வினி உபாத்யாய தரப்பில், ``அரசியல் கட்சிகள் தேர்தல் வெற்றிக்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து இலவசப் பொருள்களை வழங்குவதாக அறிவிக்கின்றன. இலவச அறிவிப்புகளை வெளியிடும் முன்பாக அவற்றால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கம் குறித்து ஆய்வு நடத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும். இந்தச் சுமை மக்கள்மீதுதான் திணிக்கப்படுகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்கு விசாரணையில், ``அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதைத் தடுக்க முடியாது. இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்துசெய்வது ஜனநாயக விரோதச் செயல் என்பதால் அதைப் பரிசீலனை செய்ய மாட்டோம். இலவசம் என்றால் என்ன என்பதை வரையறை செய்வது முக்கியம்" என்று நீதிபதி தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் வழங்கப்படும் இலவசங்கள் குறித்தும் இந்த வழக்கு விசாரணையில் பேசப்பட்டதாகக் கூறப்பட்டது.

அண்ணா அறிவாலயம் - திமுக
அண்ணா அறிவாலயம் - திமுக

இந்நிலையில், திமுக இந்த வழக்கில் தங்களை இணைக்கக் கோரிக்கை வைத்திருக்கிறது. அந்த மனுவில், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான திட்டம் பொருந்தாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப அந்த மாநில அரசுகள் திட்டங்களை அறிவிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசம் குறித்து விமர்சனம் செய்திருந்ததும் பெரும் பேசுபொருளானது.

இந்த. சூழலில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்தியா டுடே செய்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவரிடம் மத்திய அரசு இலவசங்களைத் தரக் கூடாது என்று சொல்வது குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது பேசிய பி.டி.ஆர்., ``இலவசம் வழங்கக் கூடாது என்று சட்டத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா... அப்படி எதுவும் இல்லை. உங்கள் திறன் அடிப்படையில் சாதனைகள், செயல்பாடுகள் எங்களைவிடச் சிறப்பாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு அறிவுரை வழங்கலாம். பொருளாதாரத்தைச் சரிசெய்துவிட்டீர்கள், தனிநபரின் வருமானத்தை உயர்த்திவிட்டீர்கள் என்றால் உங்களின் பேச்சைத் தமிழ்நாடு கேட்கலாம்.

இப்படி எதுவுமே இல்லாத நிலையில் உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்... மக்களுக்கு எதைச் செய்ய வேண்டும் என்பதைத் தேர்தல் முடிவு செய்யும். மத்திய அரசைவிட, தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. அடுத்த மூன்று வருடங்களுக்கும் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். மத்திய அரசுக்கு அதிகமாக நிதி தரும் மாநிலங்களில் நாங்கள்தான் மேலே இருக்கிறோம். நாங்கள் மத்திய அரசுக்குக் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு எங்களுக்கு 35 பைசா மட்டுமே திரும்பி வருகிறது. எந்த அடிப்படையில் நாங்கள் உங்களுக்காக எங்கள் கொள்கைகளை மாற்ற வேண்டும்?" என்று பேசியிருந்தார்.

பிரதமர் மோடி, அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்கள் குறித்துக் கடுமையான விமர்சனத்தை முன்வந்திருந்த நிலையில் அது இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளானது. இந்நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இலவசங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் விசாரணையில், திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பேசும்போது குறுக்கிட்டுப் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, `` உங்கள் கட்சி குறித்துப் பேச நிறைய இருக்கின்றன. தலைமை நீதிபதியாக இருப்பதால் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்கிறேன். நீங்கள் மட்டும்தான் அறிவார்ந்த கட்சி என்று நினைக்க வேண்டாம்" என்று கூறியிருந்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும், ``இந்த விவகாரத்தில் அனைவருக்குமே பொறுப்பு இருக்கிறது. உங்கள் கட்சி நடந்துகொள்ளும்விதம், உங்கள் அமைச்சர் பேசும்விதத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். உங்கள் தரப்பு பேசும் கருத்துகள், அறிக்கைகளையெல்லாம் நாங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்காதீர்கள். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது அதன் உரிமை. தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்ட இலவசங்கள் குறித்து விவாதிக்க நிபுணர்குழு அமைக்க வேண்டும்" என்று நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்

இது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``உண்மையில் பி.டி.ஆருக்கு பொருளாதாரமும் தெரிவதில்லை, மக்கள்நலனும் தெரிவதில்லை. அவருக்கு, தான் என்ற ஆணவம் தலைக்கேறி எல்லாம் தெரிந்ததுபோலப் பேசிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் இலவச விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கியிருக்கிறார்கள். முதல்வர் அவரை அடக்கிவைப்பது நல்லது. இலவசம் என்பது வேறு, ஊக்கத்தொகை வழங்குவது வேறு என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை என்பது வருத்தம்தான். சூரியஒளி திட்டத்துக்கு 15 சதவிகிதம் மானியம் வழங்குவது ஊக்கத்தொகை. விவசாயிகளுக்கு கௌரவத் தொகையாக 2,000 வழங்குவது வேறு. இருசக்கர வாகனம் இலவசமாக வழங்கப்படவில்லை. உழைக்கும் பெண்களின் முன்னேற்றத்துக்காக, இருசக்கர வாகனம் வாங்க மாநில அரசு மானியம் வழங்கியது. அந்த நிகழ்ச்சியில்தான் பிரதமர் கலந்துகொண்டார்" என்றார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

தொடர்ந்து பேசியவர், ``தேர்தல் வாக்குறுதியில் திமுக தருவதாகச் சொன்ன இலவசங்களையாவது மக்களுக்குக் கொடுத்தார்களா... இல்லை. செய்வதாகச் சொன்ன நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி என்று எதையாவது செய்தார்களா... அதுவும் கிடையாது. மக்களுக்குச் செய்வதாகச் சொன்ன எதையும் செய்ய முடியாதவர்கள் எல்லாம் தெரிந்த அறிவுஜீவிபோலப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாஜக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, வீடு கட்ட மானியம்தான் வழங்கிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இங்கு மாணவர்களுக்கு இலவசமாகத் தரும் சைக்கிள், மடிக்கணினி போன்ற திட்டங்களை எதிர்க்கவில்லை... மக்களைச் சோம்பேறிகளாக்கும் இலவசங்கள் வேண்டாம் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இவர்கள் இலவசம் என்ற பெயரில் அந்த பாரத்தையெல்லாம் நாளை மக்களின் தலையில்தான் இறங்குவார்கள்" என்று கூறினார்.

இது தொடர்பாக, திமுக செய்தித் தொடர்பாளர், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். `` நீதிபதி கூறியது, திமுக மட்டும்தான் புத்திசாலியான கட்சி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். `நீங்கள் தீட்டும் திட்டங்கள் மட்டும்தான் புத்திசாலித்தனமானது, மற்றவர்கள் போடும் திட்டமெல்லாம் முட்டாள்தனமானது என நினைக்க வேண்டாம்’ என்று பேசியிருக்கிறார். `நாளையே ஒன்றிய அரசு, `மாநில அரசுகள் இலவசங்களை வழங்கக் கூடாது’ என்று சொன்னால், நீங்கள் நீதிமன்றங்களுக்கு வருவீர்கள்தானே?’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

பி.டி.ஆர் மாநில அரசின் பட்ஜெட்டில் நீதிமன்றங்களுக்கு உரிமையில்லை என்று பேசியது தொடர்பாக அவர்கள் தங்களின் கருத்தைத் தெரிவித்திருந்தார்கள். பி.டி.ஆர் தெரிவித்த கருத்தில் உண்மை இருந்தாலும், அதை ஒத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகிறார்கள். ஒருவகையில் திமுக-வின் திட்டங்கள் புத்திசாலித்தனமானவை என்று அவர் அரசைப் பாராட்டித்தானே பேசியிருக்கிறார்... நீதிபதிகள், தமிழ்நாடு அரசு மீதோ, அரசின் நிதிநிலை மீதோ எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் அரசைக் குறித்து தவறாக ஏதும் சொல்லவில்லையே... இது தெரியாமல், ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.