Published:Updated:

ரூ.457 கோடி சொத்துகள் முடக்கம் - லாட்டரி மார்ட்டினின் பின்னணி!

லாட்டரி மார்ட்டின்

ஹோமியோபதி மருத்துவமனை, மில்கள், டி.வி சேனல், சினிமா என்று மார்ட்டின் பாதம் பதிக்காத தொழில் இல்லை. இதனாலேயே அரசியல் தொடர்புகளும் அதிகம்.

Published:Updated:

ரூ.457 கோடி சொத்துகள் முடக்கம் - லாட்டரி மார்ட்டினின் பின்னணி!

ஹோமியோபதி மருத்துவமனை, மில்கள், டி.வி சேனல், சினிமா என்று மார்ட்டின் பாதம் பதிக்காத தொழில் இல்லை. இதனாலேயே அரசியல் தொடர்புகளும் அதிகம்.

லாட்டரி மார்ட்டின்

லாட்டரி விற்பனையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கியப் பங்கு வகித்துவருகிறார். 2019-ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 2009 - 2010-ம் ஆண்டு காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கொச்சி அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக மார்ட்டின், அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்தனர். மேலும் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் பல்வேறு கட்டங்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி, 457 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை முடக்கியது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

கொச்சி அமலாக்கத்துறை, லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 11, 12-ம் தேதிகளில் சோதனை மேற்கொண்டனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதன் முடிவில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குத் தொடர்புடைய 457 கோடி மதிப்பிலான இருப்பு, முதலீட்டுத்தொகை, அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது. இதுவரை மார்ட்டினுக்குச் சொந்தமான 908 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த லாட்டரி மார்டின்...?

சான்டியானோ மார்ட்டின் என்பதுதான் அவரின் முழுப் பெயர்... ஆனாலும் ‘லாட்டரி மார்ட்டின்’ என்றால்தான் அவரை எல்லோருக்கும் தெரியும். கோவையைச் சேர்ந்த மார்ட்டின், லாட்டரி தொழிலில் இந்தியா முழுவதும் கால் பதித்தவர். பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி. தமிழகத்தில் லாட்டரியைத் தடை செய்தாலும், இந்தியாவின் பல மாநிலங்களில் லாட்டரியில் கல்லா கட்டி, வி.வி.ஐ.பி-யாக வலம் வருபவர். ஹோமியோபதி மருத்துவமனை, மில்கள், டி.வி சேனல், சினிமா என்று மார்ட்டின் அண்ட் கோ பாதம் பதிக்காத தொழில் இல்லை. இதனாலேயே அரசியல் தொடர்புகளும் அதிகம்.

லாட்டரி மார்டின்
லாட்டரி மார்டின்

எல்லாக் கட்சிகளுக்கும் நிதி வழங்கி, பொது மனிதராக இருந்த மார்ட்டின் 2006–2011 தி.மு.க ஆட்சியின்போது, கருணாநிதி குடும்பத்துடன் கூடுதல் நெருக்கம் காட்டினார். விளைவு, 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் கோபம் மார்ட்டின் மீது பாய்ந்தது. ரெய்டுகள், வழக்குகள், கைது எனத் திண்டாடினார் மார்ட்டின்.

பாரிவேந்தரின் ஐ.ஜே.கே கட்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ். மார்ட்டினின் ஒரு மகன் சார்லஸ், பி.ஜே.பி-யிலும் மற்றொரு மகன் டைசன், தமிழர் விடியல் கட்சியிலும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.