உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதலால் அந்த நாடு மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவித்தும், பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன.
இந்த நிலையில், ஐ.நா. சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவின் குரல் முக்கியமானது என இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``உக்ரைனில் மக்கள் இறப்பதும், அகதிகளாக வெளியேறுவதும் வழக்கமாக நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் மோதல் அல்ல.

இந்த தாக்குதல் ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை. தாக்குதலைப் பார்க்கவே வருத்தமாக உள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான நிறைய நடவடிக்கைகளை பிரான்ஸ் எடுத்துள்ளது. அதன் காரணமாக ரஷ்யாவின் நாணய மதிப்பும் குறைந்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக இந்தியா இரு நாடுகளிடமும் பேசுகிறது. மேலும், இரண்டு நாள்களுக்கு முன்பு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி பேசினார், பிரான்சின் வெளியுறவு அமைச்சரிடமும் பேசினார் என்பதை நாங்கள் அறிவோம். இந்த விவகாரத்தில், ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் குரல் மிக முக்கியமானது" என்றார்.
