Published:Updated:

`துரைமுருகனின் பேச்சால் சிரிப்பலை முதல் நிதியமைச்சரின் அச்சம் வரை’ -இன்றைய பேரவை நிகழ்வின் ஹைலைட்ஸ்

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

இன்று(19-08-2021) சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகளைப் பின்வருமாறு காணலாம்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தது. தமிழக அரசின் நிதிநிலை கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் -13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து 14-ம் தேதி முதல் முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

நிதிநிலைக் கூட்டத்தொடரின் ஆறாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று கூட்டத்தொடரில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பின்வருமாறு காணலாம்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் பேசுகையில், ``தொட்டால் விடும் கட்டடத்தை அதிமுக அரசு கட்டியுள்ளது. இந்தக் கட்டடம் முறைகேடாகக் கட்டப்பட்டுள்ளது. கட்டட ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கடந்த ஆட்சியில் கட்டப்பட்டுள்ள ஒட்டுமொத்த கட்டடத்தையும் ஆய்வு செய்து தரத்தை உறுதிசெய்யவேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து கே.பி. பூங்கா குடியிருப்பு விவகாரம் தொடர்பாகச் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அப்போது பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன். ``ஊடகங்களில் வெளியான செய்தியின் உண்மைத் தன்மையைத் தெரிந்துகொள்ள நானும், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துறையின் அதிகாரிகளுடன் நேரடியாக அந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தோம். அந்த கட்டடத்தின் உறுதித்தன்மையைத் தெரிந்துகொள்ள ஐ.ஐ.டி க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து அந்த கட்டுமானப் பணியில் தவறு உள்ளது என்று அறிக்கையில் சுட்டிக்காட்டினார்கள் என்றால், அந்த குடியிருப்பைக் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப் பட்ட அதிகாரிகளின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சட்டப்பேரவையில் தா.மோ. அன்பரசன்
சட்டப்பேரவையில் தா.மோ. அன்பரசன்

தொடர்ந்து பேசியவர், `இது ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட திட்டம். 1970-ம் ஆண்டு குடிசைகள் இல்லாத தமிழகம் அமையவேண்டும் என்று கலைஞர் இந்தியாவிலேயே முதன் முதலாகக் குடிசை மாற்று வாரியத்தைக் கொண்டுவந்து ஆயிரக்கணக்காகக் குடிசைகளை அகற்றி அடுக்குமாடி வீடு கட்டித்தந்த பெருமை திமுகவுக்கு உண்டு. ஏழைகளுக்கான இந்த அரசு, ஏழைகளுக்காகக் கட்டப்படும் அந்த வீடுகள் தரமுள்ளதாக இருக்கும். தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஐ.ஐ.டி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாகத் தரக்கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பணியும் நடைபெற்றுவருகிறது. இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் இந்த அரசு வேடிக்கை பார்க்காது. அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெட்ரோல் விலை தொடர்பாகச் சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ``சட்டமன்றத்தில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி அன்று இரவு 12 மணிக்கே அந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தகவல்கள் திரட்ட ஆரம்பிக்கும் போது, தகவல்கள் எல்லாம் ஒன்றிய அரசிடம் அல்லது ஒன்றிய அரசின் நிறுவனங்களிடம் உள்ளது. அந்த தகவலைத் தேடி எடுக்கவேண்டிய கடினமான சூழ்நிலை உள்ளது. ஆனாலும், 17-ம் தேதி இரவுவரை தினப்படி விற்பனையான பெட்ரோல் தகவலை எடுத்துப்பார்த்தால், சில தெளிவான முடிவுகள் தெரியவருகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தினசரி சராசரி 9,188 கிலோ லிட்டர் பெட்ரோல் விற்பனை ஆகிறது" என்றார்

சட்டப்பேரவையில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
சட்டப்பேரவையில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

மேலும், ``வரியைக் குறைத்தபிறகு, இந்த நான்கு நாட்களில் 10,317 கிலோ லிட்டர் ஆகி உள்ளது. விலை குறைத்ததினால் மக்கள் பயனடைந்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. இந்த 13 நாட்களையும் நான்கு நாட்களையும் வைத்து நிரந்தர தீர்வை கூறமுடியாது என்று சிலர் சொல்லலாம். உண்மை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இதை ஏன் நான் சுட்டிக்காட்டுகிறேன் என்றால், இதுபோன்று தகவல்களை ஒரு அமைச்சருக்குத் தினசரி வரவேண்டும். இந்த அளவுக்குத் தகவல் இருந்தால், அரசாங்கத்தைச் சிறப்பாக நடத்தலாம். தகவல் இல்லையென்றால், தடவித் தடவி, யோசித்து யோசித்து, தேடித் தேடி தான் அரசாங்கத்தை நடத்தவேண்டியிருக்கும்" என்று கூறினார்.

கொடநாடு விவகாரத்தில் அதிமுக வெளிநடப்பு செய்தது தொடர்பாக, சபாநாயகர் அப்பாவு பேசுகையில், `` எதிர்க்கட்சி தலைவர் என்னிடத்தில் அனுமதியே பெறாமல் ஒரு பிரச்னையைப் பேரவையில் எழுப்ப முயன்றார்கள். அப்போதே சொன்னேன், என்னுடைய அனுமதி பெறவில்லை. தவறான நடைமுறை, கடந்த காலங்களில் நடைபெற்ற நடைமுறைகளையும் பார்த்தேன். அதுபோன்று நடைபெறவில்லை. இருப்பினும், எதிர்க்கட்சி தலைவர், இந்த அவையில் முதல்வராக, அமைச்சராக இருந்தவர். நல்ல அனுபவம் வாய்ந்தவர், பேரவையில் விதிகள், நடைமுறைகள் தெரிந்தவர். இப்படிச் செய்கிறாரே என்று எண்ணி எதிர்க்கட்சி தலைவர் என்பதினால் வாய்ப்பினை வழங்கினேன்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

முதல்வர் இந்த அவை ஜனநாயக முறையில் நடைபெறவேண்டும் என்ற கொள்கை கொண்டவர். என்னுடைய அரசு அல்ல. எனது அரசு அல்ல நமது அரசு. எல்லோரும் சேர்ந்து மக்களுக்கான திட்டங்களை வகுக்கவேண்டும். இந்த பேரவை ஆக்கப்பூர்வமாக இழந்த பெருமையை மீட்க வேண்டும். என்ற நல்ல எண்ணத்தோடு செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

மக்களுக்கான பிரச்னைகளைப் பேசுவார் என்று நினைத்து நான் அனுமதித்தேன். ஆனால், அவர் சம்பந்தப்பட்ட பிரச்னையை இந்த அவையில் எழுப்ப முற்பட்டார். தனிப்பட்ட பிரச்னையை இந்த அவையில் எழுப்பக்கூடாது. இருப்பினும் அதையும் நான் அனுமதித்தேன். எழுந்து பேச முற்பட்ட சில மணித்துளிகளில் பின்னால் இருந்த அனைத்து உறுப்பினர்களும் என்னுடைய அனுமதியைப் பெறாமல், ஏதோ ஒன்றை எழுதி கொண்டுவந்த பதாகைகளை அவையில் காண்பித்தனர்.

நேற்று நான் அவையில் குறிப்பிட்டதை மீண்டும் அப்படியே சொல்கிறேன். என்னுடைய அனுமதி இல்லாமல் நீங்கள் எதையும் காண்பிக்கக்கூடாது. இந்த அவைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் முறைகேடாகப் பதாகைகளை உள்ளே கொண்டுவந்திருக்கிறீர்கள். நீங்கள் எந்த அனுமதியும் என்னிடம் பெறவில்லை. அனுமதி பெறாமல் இதையெல்லாம் பேசுவது தவறு. நீங்கள் அமைதியாக உட்காருங்கள். முதல்வர் பதில் சொல்கிறார்கள். நீங்கள் பேசியது எதுவும் அவைக் குறிப்பில் ஏறாது. சட்டப்பேரவை தலைவர் நான் நிற்கும்போது நீங்கள் எல்லாரும் உட்காரவேண்டும். முதலில் நீங்கள் எல்லாரும் உட்காருங்கள். பின்னர் முதல்வர் விளக்கமளித்துள்ளார்கள். அப்போது இந்த அவையிலிருந்து அவர்களாகத்தான் வெளியேறினார்கள் நான் வெளியேற்றவில்லை" என்று கூறினார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

நேற்று கூட்டுத்தொடரின் விவாதத்தின் போது, பாமகவைச் சிறந்த ஜி.கே மணி பேசும்போது, `நானும் ஒரு ஆசிரியர். நீங்கள் ஒரு ஆசிரியர் எனவே பேசும்போது கூடுதலாக நேரம் ஒதுக்கித் தரவேண்டும்’ என்று சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை விடுத்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது நாம் எல்லாம் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றவர்கள் என்று குறி கூடுதல் நேரம் வழங்கவேண்டும் என்று கேட்கிறார்கள். பாமக உறுப்பினர் ஜி.கே மணியிடம் நாமெல்லாம் ஆசிரியர்கள் என்று பேசக் கூடுதல் நேரம் வழங்குவதாகக் கூறுகிறீர்கள். நெல்லைகாரர்கள் வந்தால் அவர்களிடம் உறவு கொண்டாடுகிறீர்கள். இதனை எப்படிப் பார்ப்பது" என்று சபாநாயகரைப் பார்த்துச் சொல்லி முடிக்கும்போது சட்டசபை முழுவதும் சிரிப்பொலி எழுந்தது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, ``பழைய ஓய்வூதியத் திட்டம் கடந்த 18 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. நான்கு அரசுகள் மாறியும் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. விலைவாசிகளுக்கு ஏற்ப அகவிலைப்படியை உயர்த்தவேண்டும். ஆனால், நிதிநிலை மந்தமாக இருப்பதினால் நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது. தமிழகத்தின் நிதிநிலையை நினைத்தால் மிகவும் அச்சமாக உள்ளது. பல நேரங்களில் முடிவெடுக்க முடியாத சூழல் இருக்கிறது." என்றார்

சட்டப்பேரவையில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
சட்டப்பேரவையில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
சட்டப்பேரவை சர்ச்சை:  துரைமுருகன் விளக்கம்... எடப்பாடி தரப்பு சொல்லும் காரணம்! - திமுக Vs அதிமுக!

தொடர்ந்து பேசியவர், ``கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில், திடீர் என்று மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது அவர்களுக்குக் கற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படும். குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த போக்கைத் திருத்தம் செய்ய இந்த நிதியாண்டில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர்களுக்கு மாலை நேரச் சிறப்பு வகுப்புகள் நடைபெறும்” என்றவர் ``நந்தனத்தில் உள்ள நிதித்துறைக்குச் சொந்தமான கட்டடம் முன்னாள் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் பெயரால் அழைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo
அடுத்த கட்டுரைக்கு