Published:Updated:

ஃப்ரீ டேட்டா முதல் அனைவருக்கும் வீடு வரை...எடப்பாடியின் திட்டங்கள் எடுபடுமா?#TNElection2021

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

2021 சட்டமன்றத் தேர்தலில் இதுபோன்ற அறிவிப்புகள் எடப்பாடிக்கு எந்தளவுக்குக் கைகொடுக்கும் என மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்...

``பொங்கல் பரிசாக 2,500 ரூபாய், கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா, வீடில்லாத அனைவருக்கும் இலவச வீடு'' என பல அதிரடியான திட்டங்களை அறிவித்து வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இப்போது மட்டுமல்ல, தமிழ்நாடு நாள் அறிவிப்பு, தைப்பூசத்துக்கு விடுமுறை, காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு என தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் பல அறிவிப்புகளை அள்ளி வீசி வருகிறார் முதல்வர் எடப்பாடி. அவற்றில் ஒரு சில திட்டங்கள் நடைமுறைக்கு வந்தும் சில நடைமுறைக்கு வராமலும் இருக்கின்றன. முக்கியமாக, மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டு அரசாணை அனைவரின் கவனத்தையும் பெற்றது.

இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு
Representational Image

ஒருபுறம், இந்த அரசின் மீதான அடுக்கடுக்கான ஊழல் புகார்கள், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்கள், கூட்டணிக் கட்சிகள் விளைவிக்கும் குழப்பங்கள், சொந்தக் கட்சிச் சச்சரவுகள் இவை எல்லாவற்றையும் தாண்டி, முதல்வர் எடப்பாடி லைம்லைட்டில் அதுவும் மிகவும் ஆக்டிவாக இருப்பதுபோல வைத்துக்கொண்டிருக்க உதவுவது இந்த அறிவிப்புகளே...

இந்தநிலையில், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் இதுபோன்ற அறிவிப்புகள் அவருக்கு எந்தளவுக்குக் கைகொடுக்கும் என மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்...

ப்ரியன் (மூத்த பத்திரிகையாளர்)

''2006-11 ஆட்சிக்காலத்தில் செய்த பல சாதனைகளைச் சொல்லி 2011 தேர்தலைச் சந்தித்தது, தி.மு.க. ஆனால், கூட்டணி அரசியலே அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றது. அ.தி.மு.க, தே.மு.தி.க வலுவான கூட்டணி அமையவே, தி.மு.கவால் ஜெயிக்க முடியவில்லை. கூடவே, 2ஜி, மின்தடை, காங்கிரஸுக்கு அதிக இடங்களை ஒதுக்கியதும் தோல்விக்குக் காரணமாகியது. அதேபோல, 2016 தேர்தலில், மக்கள் நலக்கூட்டணி என தனியாகப் போட்டியிட தி.மு.க தோல்வியைச் சந்தித்தது. இந்தமுறை தி.மு.க கூட்டணி வலுவாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை இந்தக் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. அதனால், வருகின்ற தேர்தலில் எடப்பாடி இன்னும் பல அறிவிப்புகளைச் செய்தாலும் மக்கள் மத்தியில் அது மிகப்பெரிய அளவில் எடுபடுவது சந்தேகமே. காரணம், தேர்தலுக்காகத்தான் கொடுக்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். தேர்தல் நெருங்க, நெருங்க அது மறைந்தும் போகும்.

ப்ரியன்
ப்ரியன்

பொங்கலுக்கு 2,500 ரூபாய் கொடுத்ததையே மக்கள் இந்நேரம் மறந்திருப்பார்கள். கொரோனா நேரத்தில் கஷ்டப்படும்போது கொடுக்காமல் இப்போது கொடுக்கிறீர்கள் என்கிற எண்ணமும் மக்கள் மனதில் இருக்கிறது. கல்லூரி மாணவர்களைவிட, பள்ளி மாணவர்களுக்குத்தான் இலவச டேட்டா தேவைப்படுகிறது. ஆனால், வாக்குகளைக் கணக்கில் வைத்து கல்லூரி மாணவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். பல கிராமங்களில் சரியாக சிக்னல் கிடைக்கவில்லை. அதனால் மொத்தமாக ஒரு ஆதரவு கிடைக்கும் என்று சொல்லமுடியாது. வீடு கட்டும் திட்டம் எல்லாம் தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டம்தான். 7.5 இட ஒதுக்கீட்டைத் தங்களின் சாதனையாக நிச்சயமாக எடப்பாடி சொல்லுவார். பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தாலும், ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் இருக்கிறது. சமீபத்தில் வெளியான புள்ளிவிபரங்கள் அதைக் காட்டுகின்றன. அதனால், தமிழக அரசியல் களம் தற்போதுவரை, தி.மு.க கூட்டணிக்கே சாதகமாக இருக்கிறது. ஆனால் இந்தத் திட்டங்கள் மூலமாக கடுமையான சவாலை உண்டாக்குவார் எடப்பாடி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை''என்கிறார் அவர்.

2021 சட்டமன்றத் தேர்தல்... ஊடக வழி பிரசாரங்கள்... எந்தக் கட்சிக்கு சாதகம்? #2021TNElection

கணபதி (மூத்த பத்திரிகையாளர்)

''தமிழகம் வளர்ந்த மாநிலமாகத் திகழ கல்விக்கும் சுகாதாரத்துக்கும் நாம் கொடுத்த முக்கியத்துவம்தான் காரணம். அந்தவகையில், ஃப்ரீ டேட்டா கொடுக்கும் திட்டத்தை நிச்சயமாக வரவேற்க வேண்டும். ஆனால், அதைத் தேர்தலுக்காகச் செய்கிறார்கள். இதைக், கொரோனா காலத்திலேயே கொடுத்திருக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க அது உதவியாக இருந்திருக்கும். பல மாணவர்கள் திண்டாடிப் போனார்கள். போனமுறை, ரேஷன் கார்டு இருக்கும் ஒவ்வொருவருக்கும் இலவசமாக செல்போன் கொடுப்பதாகச் சொன்னார்கள். வேலை பார்க்கும் பெண்களுக்கு, 50 சதவிகித மானிய விலையில் ஸ்கூட்டர் கொடுப்பதாகச் சொன்னார்கள். அந்த வாக்குறுதிகள் எல்லாம் எந்தளவுக்கு நிறைவேறியுள்ளது.

கணபதி (மூத்த பத்திரிகையாளர்)
கணபதி (மூத்த பத்திரிகையாளர்)

இதுஒருபுறமிருக்க, நடைமுறைக்கு வந்த திட்டங்களால் பயனடைந்தவர்கள்கூட அப்படியே ஆளும்கட்சிக்கான வாக்குகளாக மாறுவார்களா என்பது சந்தேகம்தான். காரணம், கொரோனா காலத்தில் மக்கள் பட்ட துன்பங்களையும் நினைத்துப் பார்ப்பார்கள். தவிர, ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பிரசாரங்களும் கடுமையாக இருக்கும். மக்கள் மறந்த விஷயங்களைக் கூட அவர்கள் திரும்பத் திரும்ப நினைவுபடுத்துவார்கள். தேர்தல் அறிக்கைக்கும் மிகப்பெரிய ரோல் இருக்கும். தொடர்ச்சியாக பத்தாண்டுகளுக்கு மேல் அ.தி.மு.க ஆட்சி நடப்பதால் மக்களுக்கு இயல்பாகவே ஒரு அதிருப்தி இருக்கும். அதனால், இதுபோன்ற கடைசி நேர அறிவிப்புகள், சலுகைகள், விளம்பரங்களால் மக்கள் வாக்களித்து விடமாட்டார்கள். பொதுவாக இந்த ஆட்சி இருக்கலாமா, வேண்டாமா என்கிற உணர்வு இருக்கும். அதன்படிதான் முடிவு எடுப்பார்கள்'' என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு