Published:Updated:

காந்தி முதல் ராகுல் வரை... தலைவர்கள் மேற்கொண்ட பாதயாத்திரைகளும் அதன் தாக்கங்களும்!

ராகுல் காந்தி நடைப்பயணம்

வைகோவின் தொடர் நடைப்பயணங்கள்தான், ஆட்சி அதிகாரத்தில் இல்லாத அவர் கட்சியைத் தொண்டர்களிடம் உயிர்ப்பாக வைத்திருக்க உதவியது.

காந்தி முதல் ராகுல் வரை... தலைவர்கள் மேற்கொண்ட பாதயாத்திரைகளும் அதன் தாக்கங்களும்!

வைகோவின் தொடர் நடைப்பயணங்கள்தான், ஆட்சி அதிகாரத்தில் இல்லாத அவர் கட்சியைத் தொண்டர்களிடம் உயிர்ப்பாக வைத்திருக்க உதவியது.

Published:Updated:
ராகுல் காந்தி நடைப்பயணம்

விடுதலைப் போராட்ட காலத்தில், வெள்ளையனைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்கிய காலகட்டத்தில் காந்தி நடத்திய 24 நாள்கள் தண்டி யாத்திரை பிரிட்டிஷ் பேரரசை எதிர்க்கும் மனவலிமையை சாதாரண மக்களிடமும் ஏற்படுத்தியது. சுதந்திரப் போராட்டத்தை வெகுஜன இயக்கமாக மாற்றியதில் உப்பு சத்தியாகிரகத்துக்குப் பெரும் பங்கு உண்டு. இது ஏதோ ஒப்புக்காக நடத்தப்பட்ட நடைப்பயணமும் இல்லை. இதில் கலந்துகொள்பவர்களை காந்தி மிக கவனமாகத் தேர்வுசெய்தார். சர்வபரி தியாகத்துக்கும் தயாராக இருந்தவர்களுக்கே காந்தி அனுமதி கொடுத்தார்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

சுதந்திரத்துக்குப் பிறகு முதன்முதலாக தேசம் தழுவிய அளவில் பாதயாத்திரை செய்தவர் சந்திரசேகர். இவர் ஒரு சோஷலிஸ்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கியவர். பிறகு காங்கிரஸில் சேர்ந்து எமர்ஜென்சியின்போது காங்கிரஸிலிருந்து விலகி மொரார்ஜி தேசாய் போன்றவர்களுடன் இணைந்து ஜனதா கட்சி கண்டார். 1983-ல் சந்திரசேகர் கன்னியாகுமரி தொடங்கி டெல்லி வரை நடத்திய 4,000 கி.மீ பாதயாத்திரை மிகவும் முக்கியத்துவமானது. அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் வலுவாக இருந்தத ஜனதா கட்சி சார்பில் சந்திரசேகருக்குப் பெரிய வரவேற்பும் கிடைத்தது. நாள்தோறும் 25 கி.மீ என ஆறு மாதங்கள் நடந்தார். பல இடங்களில் மக்களிடையே பேசினார். இந்த நடைப்பயணம் அவரை நாடறிந்த ஒரு தேசியத் தலைவராக்கியது. ராமஜென்ம பூமி பிரச்னைக்காக அத்வானி நடத்திய ரத யாத்திரைகளும் நினைவுகூரத்தக்கவை.

சந்திரசேகர்
சந்திரசேகர்

தமிழகத்தைப் பொறுத்த அளவில் சுயமரியாதை இயக்கம், முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகள் இணைந்து தமிழர் பெரும் படை என்ற பெயரில் திருச்சியிலிருந்து சென்னை வரை 1938-ல் நடத்திய பாத யாத்திரை பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்தி எதிர்ப்பையும், தமிழ்ப் பற்றையும் பட்டிதொட்டியங்கும் ஒருசேர உருவாக்கிய வண்ணம் சுமார் 234 ஊர்களைக் கடந்து சென்னை வந்தடைந்தது. தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கு வலுவான அடித்தளமிட்டது இந்தப் பாதயாத்திரை. இந்தப் பாதயாத்திரைக்கு பக்கபலமாக விளங்கியவர்கள் மூவலூர் ராமாமிர்தம், பெரியார், மறைமலை அடிகள் போன்றோர்.

பெரியார்
பெரியார்

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை, 1980-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி, தாம் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், திருச்செந்தூர் கோயிலில் நடந்த உண்டியல் முறைகேடு குறித்து, அரசிடம் புகார் செய்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரம் தொடர்பாக திருச்செந்தூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய எம்.ஜி.ஆர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி சி.ஜே.ஆர்.பால் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார். ஆணையமும் 288 பக்கங்கள்கொண்ட அறிக்கையைச் சமர்ப்பித்தது. இது குறித்து 1982, பிப்ரவரி 2-ம் தேதி சட்டப்பேரவையில் விவாதித்தபோது, ‘இந்த அறிக்கையை சட்டப்பேரவையில் வெளியிட வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அரசு வெளியிடவில்லை.

கருணாநிதி திருச்செந்தூர் நடைப்பயணம்
கருணாநிதி திருச்செந்தூர் நடைப்பயணம்

பேரவைக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த தி.மு.க தலைவர் கருணாநிதியிடம், “திட்டமிட்டப்படி நீதி கேட்டு, நெடிய பயணம் உண்டா” எனச் செய்தியாளரகள் கேள்வியெழுப்பினர். “இந்த ஆட்சியில் நீதியே இல்லை... அதனால் நெடிய பயணம் உண்டு. இந்த நெடிய பயணம் காரிலோ, வேறு வாகனத்திலோ அல்ல. அவ்வளவு தூரமும் கழகத் தோழர்களுடன் நடந்தே செல்வேன்” என்றார் கருணாநிதி. சொன்னப்படியே 1982, பிப்ரவரி 15-ம் தேதி மதுரையில் தொடங்கி, எட்டு நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டு பிப்ரவரி 22-ம் தேதி திருச்செந்தூரை அடைந்தார். கருணாநிதியின் இந்த நடைப்பயணம் ‘நீதி கேட்டு நெடும்பயணம்’ என்று சொல்லப்பட்டது.

திருச்செந்தூர் சென்றடைந்த கருணாநிதி, அங்கு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில், “திருச்செந்தூரில் ஆண்டுதோறும் ‘சூரனை சுப்பிரமணியன் வதம் செய்வார். ஆனால், தற்போது சுப்பிரமணியனை சூரன்கள் வதம் செய்துள்ளனர்’ என்று சாடினார். இந்த நடைப்பயணம் கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதாக அமைந்ததுடன், ஆளுங்கட்சிக்கும், முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் பெரும் நெருக்கடி ஏற்படக் காரணமாக அமைந்தது.

வைகோ
வைகோ

தமிழக அரசியலில் நடைப்பயணம் என்றால், அனைவருக்கும் நினைவுக்கு வரும் முதல் பெயர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோதான். காவிரி பிரச்னை தொடங்கி மது ஒழிப்பு வரை ஏகப்பட்ட நடைப்பயணங்களை நடத்தியவர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி 2012-ம் ஆண்டு 1,200 இளைஞர்களோடு தன்னுடைய முதற்கட்ட நடைப்பயணத்தை நெல்லையில் தொடங்கி மதுரையில் நிறைவு செய்தார். 14 நாள்கள் நடைபெற்ற இந்த முதற்கட்ட நடைப்பயணத்தில் 450 கி.மீ நடந்த வைகோ 510 கிராம மக்களிடம் மதுவின் தீமை குறித்தும், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கினார்.

இதற்கடுத்து காஞ்சிபுரத்தில் தொடங்கிய தனது இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தார். அடுத்து பொள்ளாச்சியில் மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை ஆரம்பித்து ஈரோட்டில் முடித்து வைத்தார்.

அதிமுக அரசின் ஊழலுக்கு எதிராக, 1994, ஜூலை 27-ம் நாள் கன்னியாகுமரியிலிருந்து, சென்னை அண்ணாநகர் வரை 1,600 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார் வைகோ. அதில், ‘ஒரு நாளைக்கு சராசரியாக 32 கி.மீ நடந்ததாகவும், இதில் ஒன்பது நாள்கள் மழையில் நடந்து சென்றதாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.

காவிரி நதி நீரில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து, பூம்புகாரிலிருந்து கல்லணை வரை சுமார் 180 கி.மீ தூரம் ஏழு நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

1997-ம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஸ்ரீவைகுண்டத்தில் நடைப்பயணம் தொடங்கி, தூத்துக்குடியில் நிறைவு செய்தார்.

தென்னக நதிகள் இணைப்பின் தேவை கருதி, 2004, ஆகஸ்ட் 5-ம் நாள் திருநெல்வேலி தாமிரபரணியில் தொடங்கி 1,200 கி.மீ வரை நடந்து சென்று சென்னையில் முடித்திருக்கிறார். 42 நாள் நடந்த இதற்கு மறுமலர்ச்சி நடைப்பயணம் எனப் பெயர் வைத்தனர்.

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக 2008, டிசம்பர் 18-ம் தேதி மதுரையில் ஆரம்பித்த நடைப்பயணம் ஆறு நாள்களில் 150 கி.மீ கடந்து கூடலூரில் நிறைவு செய்தார்.

தேனி மாவட்ட நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைப்பதற்கு திட்டமிட்ட மத்திய அரசை எதிர்த்து 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி தொடங்கினார். மதுரை பழங்காநத்தத்தில் தொடங்கிய இந்த 10 நாள் நடைப்பயணம் தேனி கம்பத்தில் நிறைவுற்றது.

இதுபோல் வைகோவின் தொடர் நடைப்பயணங்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத அவர் கட்சியை தொண்டர்களிடம் உயிர்ப்பாக வைத்திருக்க உதவியது.

நமக்கு நாமே பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின்
நமக்கு நாமே பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின்

2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்க களத்தில் இறங்கினார் ஸ்டாலின். இதற்காக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டார். 2015-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையருகே தொடங்கிய இந்த ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணம், 2016 பிப்ரவரி 12-ம் தேதி சென்னை தியாகராய நகரில் நிறைவடைந்தது. இந்தப் பயணத்தில் விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், சுயஉதவிக் குழுக்கள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழில்முனைவோர், தொழில்துறை வல்லுநர்கள், தொழிலாளர்கள் எனச் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் சந்தித்து அவர்கள் விருப்பங்கள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார் ஸ்டாலின். இது தொடர்பாக, “நான் நீதிகேட்டு திருச்செந்தூருக்கு நெடும்பயணம் மேற்கொண்டதுதான் என் நினைவுக்கு வருகிறது. ‘நமக்கு நாமே’ என்ற பெயரே எல்லோருடைய இல்லங்களிலும் இரண்டறக் கலந்துவிட்ட சொல்லாகியிருக்கிறது. இந்தப் பயணம் தம்பி ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமானதொரு மைல் கல்” எனப் பாராட்டியிருந்தார் கருணாநிதி.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

பாதயாத்திரைகளால் அதிகார மாற்றங்களை நிகழ்த்திக் காட்டிய மாநிலம் என்றால், அது ஆந்திராதான். 2003-ல் அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜசேகர ரெட்டி நடத்திய 1,500 கி.மீ பாதயாத்திரை ஆந்திராவில் காங்கிரஸுக்குப் புத்துயிர் ஊட்டியதோடு, அவரை மாபெரும் மக்கள் தலைவராக்கி அரியணையில் அமர்த்தியது. அதே யுக்தியை 2013-ல் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி, 17,00 கி.மீ பாத யாத்திரை செய்து அடுத்த ஆண்டே இழந்த அதிகாரத்தைப் பிடித்தார். அப்பா வெற்றி கண்ட அதே பாதயாத்திரை யுக்தியை அவருடைய மகன் ஜெகன் மோகன் ரெட்டி 2017-ம் ஆண்டு கடைப்பிடித்து ‘பிரஜா சங்கல்ப யாத்திரா’ என்ற பெயரில் சுமார் 15 மாதங்கள் 3,700 கி.மீ தூரம் நடையாக நடந்து 2018-ல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். இதே காலகட்டத்தில்தான் மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் பாதயாத்திரை செய்ய 2018 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது.

இவ்வாறாக சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் பல பாதயாத்திரைகள் மிகப்பெரும் சரித்திர நிகழ்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அதுபோல் ஒரு சரித்திர நிகழ்வாக இருக்குமா ராகுல் காந்தியின், ‘பாரத் ஜோடா யாத்ரா’ என்பதற்கான விடை வரும் 2024-ம் தேர்தலில் தெரிந்துவிடும்!