Published:Updated:

மோடியை விட அதிகம் வாங்கும் தமிழிசை! நம் தலைவர்களில் யாருக்கு எவ்வளவு சம்பளம்?

மோடி- தமிழிசை
மோடி- தமிழிசை

2019ம் ஆண்டு வெளியான தரவுகளின்படி இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அதிகபட்சமாக ₹3,65,000 மாதாந்திர சம்பளம் பெறுகிறார். குறைந்தபட்சமாக தெலுங்கானா, மேற்கு வங்காளம், நாகாலாந்து மாநில முதல்வர்கள் மாதம் ₹1,10,000 சம்பளமாக பெறுகிறார்கள்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் சொந்த கிராமத்துக்குப் போனபோது, தன் சம்பளத்தைப் பற்றி கூறியிருந்தார். "எனக்கு அரசாங்க சம்பளம் ஐந்து லட்ச ரூபாய் கிடைக்கிறது. அதில் இரண்டே முக்கால் லட்சத்தை வருமான வரியாக செலுத்துகிறேன்" என்றார். அரசாங்க ஆசிரியர்களின் வாழ்நாள் சேமிப்பை விட தன்னுடைய சேமிப்பு குறைவு எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்திய அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு, அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், மானியங்கள் என்னென்ன என ஆர்வம் தொற்றிக்கொண்டது. அந்த ஆர்வத்தில் தேட ஆரம்பித்தேன்.
சம்பளம்
சம்பளம்

இந்தியாவின் முதல் குடிமகன் ஜனாதிபதி, அரச பதவியில் உயர்பீடமும், முதல் மரியாதையும் அவருக்குத்தான், சம்பளமும் அப்படியே. இந்திய அரசுப் பணிகளில் அதிகபட்ச சம்பளம் மாதம் ஐந்து லட்சம் ரூபாய். அதை வாங்குவது ஜனாதிபதி ஒருவர் மட்டுமே. சம்பளம் தவிர்த்து வாழ்நாள் முழுவதற்குமான இலவச மருத்துவ வசதி உள்ளிட்ட மற்ற சலுகைகளும் உண்டு. ஜனாதிபதி மாளிகையின் பராமரிப்புக்காக மட்டும் ஆண்டுதோறும் 22 கோடி செலவிடப்படுகிறது.

2018ம் ஆண்டுதான் ஜனாதிபதியின் சம்பளம் ஒன்றரை லட்சத்திலிருந்து ஐந்து லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதேபோல மற்ற உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கான சம்பளமும் உயர்த்தப்பட்டது.

ஜனாதிபதி - ₹5,00,000, துணை ஜனாதிபதி - ₹4,00,000, மாநில ஆளுநர்கள் - ₹3,50,000, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - ₹2,80,000, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் - ₹2,50,000, தலைமைத் தேர்தல் ஆணையர் - ₹2,50,000, ரிசர்வ் வங்கி கவர்னர் - ₹2,50,000, பிரதமர் - ₹2,00,000, நாடாளுமன்ற உறுப்பினர்கள் - ₹1,00,000.

இதுவே தற்போதைய சம்பள விபரம். இவை தவிர மருத்துவ வசதிகள், இருப்பிடம், போக்குவரத்து, செயலக செலவுகளுக்கு தனியாக மாதாந்திர படி என எல்லாம் உண்டு.

ஜனாதிபதி குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்குவது போல, பிரதமருக்கும் அதிகாரபூர்வ இல்லம் உண்டு. மேலும் அவருக்கு தனிப்பட்ட உதவியாளர்கள், பாதுகாப்புப் படை போன்றவையும் உண்டு. பிரதமர் பயன்பாட்டிற்காக தனி கார், ஏர் இந்தியா ஒன் எனப்படும் தனி விமானம் ஆகியவையும் உண்டு.

குடியரசுத் தலைவர் இல்லம்
குடியரசுத் தலைவர் இல்லம்

பதவி போன பிறகும் முன்னாள் பிரதமர்களுக்கு வாழ்நாள் முழுவதற்குமான வாடகை இல்லாத தங்குமிடம், மருத்துவச் செலவுகள், 14 அலுவலகப் பணியாளர்கள் உண்டு. அலுவலக செலவுக்கான தொகையையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. மேலும் கூடுதலாக 6 எக்சிக்யுட்டிவ் வகுப்பு விமான டிக்கெட்டுகள், முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச ரயில் டிக்கெட்டுகள் ஆகியவையும் கொடுக்கப்படுகின்றன.

சமீபத்திய சட்டத்திருத்தத்தின்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாதம் ஒரு லட்சம் சம்பளம் மட்டுமின்றி மாதம் ₹70,000 தொகுதி நிதியாகவும், மாதம் ₹60,000 அலுவலக செலவுகளுக்காகவும் கொடுக்கப்படுகிறது. இதில் ₹20,000 அலுவலகப் பொருட்களுக்கான செலவு; ₹40,000 உதவியாளர் சம்பளத்திற்காகக் கொடுக்கப்படுகிறது. இவை தவிர பென்ஷன் சலுகைகளும் உண்டு.

விருந்தினர்களை உபசரிப்பதற்காகவும் தனி நிதி (sumptuary allowance) வழங்கப்படுகிறது. பிரதமர் ₹3000 ரூபாயும், மத்திய கேபினட் அமைச்சர்கள் ₹2000 ரூபாயும், துணை அமைச்சர்கள் ₹1000 ரூபாயும், இணை அமைச்சர்கள் ₹600 ரூபாயும் ஒவ்வொரு மாதமும் விருந்தினர் உபசரிப்பு நிதியாகப் பெறுகிறார்கள்.

விருந்தினர்களை உபசரிப்பதற்காகவும் தனி நிதி
விருந்தினர்களை உபசரிப்பதற்காகவும் தனி நிதி

மத்திய அரசின் மத்திய தொகுப்பு நிதியில் இருந்து தான் இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்திய வருமான வரிச் சட்டத்தின் படி, சட்டரீதியாக வரிவிலக்கு செய்யப்பட்டிருப்பவர்கள் தவிர மற்ற அனைவரும் வரி செலுத்தியே ஆகவேண்டும். ஜனாதிபதி உட்பட எந்த அரசுப் பதவியில் உள்ளவர்களுக்கும் வரிவிலக்கு இருப்பதாக எந்தக் குறிப்பிட்ட சட்டமும் இல்லை. எனவே இவர்கள் அனைவரின் வருமானமும் வரிக்கு உட்பட்டதே.

டிரோன் தாக்குதல்: எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தின் நவீன முகம்! இதை ஏன் தடுக்க முடிவதில்லை?

கொரோனா சூழலில், ஜனாதிபதி, பிரதமர், மாநில ஆளுநர்கள் மற்றும் நாடளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் வருமானத்தில் 30 சதவிகித அளவை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க ஒப்புதல் அளித்தனர். அதன்படி 2020 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஓராண்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் 30% ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டது. இதுதவிர நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதி (Constituency allowance) மற்றும் அலுவலகச் செலவுகளுக்கான நிதி (office expenses allowance) ஆகியவையும் பிடித்தம் செய்யப்பட்டது. இப்படி பிடித்தம் செய்து சுமார் 55 கோடி ரூபாய் கொரோனா நிதிக்காகத் தரப்பட்டதாகத் தரவுகள் சொல்கின்றன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
ANI

2018ம் ஆண்டு நிதி சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியது. முன்னர் குறிப்பிட்டது போல, சம்பள உயர்வு மட்டுமின்றி, தினசரி செலவுத் தொகை, பென்ஷன் ஆகியவற்றையும் அதிகரித்தது. அதுமட்டுமின்றி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு வெளியிடும் விலைவாசி ஏற்ற அட்டவணைக்கு (cost inflation index) ஏற்ப அவர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் புதிய சட்டம் சொல்கிறது.

ரகுராம் ராஜன் முதல் நாராயண் வரை; ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் யார்? ஓர் அறிமுகம்

உலக நாடுகள் பலவும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்பதவியில் இருக்கும் தலைவர்களுக்கான சம்பளங்களை தீர்மானிக்க தனி கமிட்டி வைத்துள்ளது. இந்தியாவில் மட்டும்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களே அவர்களின் சம்பளத்தையும் தீர்மானிக்கிறார்கள். வெளிநாடுகளை விட இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு சலுகைகள் அதிகம். இதில் திருத்தத்தை கொண்டுவர வேண்டும் எனப் பல ஆண்டுகளாகக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

இது மத்திய அரசு சம்பளம் வாங்குபவர்களின் விபரப் பட்டியல் மட்டுமே, இதேபோல மாநில முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாநில அரசு நிதியிலிருந்து சம்பளம் பெறுகிறார்கள். 2019ம் ஆண்டு வெளியான தரவுகளின்படி இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அதிகபட்சமாக ₹3,65,000 மாதாந்திர சம்பளம் பெறுகிறார். குறைந்தபட்சமாக தெலுங்கானா, மேற்கு வங்காளம், நாகாலாந்து மாநில முதல்வர்கள் மாதம் ₹1,10,000 சம்பளமாக பெறுகிறார்கள். தமிழக முதல்வரின் மாதாந்திர சம்பளம் ₹2,20,000.

சட்டரீதியாக நம் தலைவர்களின் சம்பளப் பட்டியல் இது. எவ்வித கேள்விகளையும், நியாயமான சந்தேகங்களையும் எழுப்பாமல் இது மட்டுமே அவர்களின் மாத வருமானம் என நல்லதொரு இந்தியக் குடிமகனாக/மகளாக நம்புவோமாக!
அடுத்த கட்டுரைக்கு