Published:Updated:

காஷ்மீர் ஃபைல்ஸ் முதல் சாவர்க்கர் பயோபிக் வரை... அன்றைய திராவிட யுக்தியை பின்பற்றுகிறதா இன்றைய பாஜக?

திராவிட மாடலைப் பின்பற்றுகிறதா பாஜக?

தமிழகத்தில் அன்றைய திராவிட அரசியல்வாதிகள், திரைப்படங்கள் மூலம் மக்களிடையே கருத்து பிரசாரம் செய்த உத்தியை, இன்றைய பாஜக உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் ஒட்டுமொத்த இந்திய மக்களிடையே பிரசாரம் மேற்கொள்ள திரைத்துறையைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனவா?

காஷ்மீர் ஃபைல்ஸ் முதல் சாவர்க்கர் பயோபிக் வரை... அன்றைய திராவிட யுக்தியை பின்பற்றுகிறதா இன்றைய பாஜக?

தமிழகத்தில் அன்றைய திராவிட அரசியல்வாதிகள், திரைப்படங்கள் மூலம் மக்களிடையே கருத்து பிரசாரம் செய்த உத்தியை, இன்றைய பாஜக உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் ஒட்டுமொத்த இந்திய மக்களிடையே பிரசாரம் மேற்கொள்ள திரைத்துறையைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனவா?

Published:Updated:
திராவிட மாடலைப் பின்பற்றுகிறதா பாஜக?

தமிழகத்தில் அன்றைய திராவிட அரசியல்வாதிகள் ஆட்சியைப் பிடிப்பதற்காக, திரைப்படங்கள் மூலம் மக்களிடையே கருத்து பிரசாரம் செய்த உத்தியை, இன்றைய இந்துத்துவ சக்திகள் ஒட்டுமொத்த இந்திய மக்களிடையே தங்களுடை சிந்தாந்தங்களை கொண்டுசேர்க்க திரைத்துறையைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாக பேச்சுகள் எழுந்திருக்கின்றன. தற்போது `காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, பழம்பெரும் இந்துத்துவத் தலைவர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை இந்துத்துவ, பா.ஜ.க ஆதரவு தயாரிப்பாளர்கள் திரைப்படமாக எடுக்கவிருக்கின்றனர்.

The Kashmir Files | தி காஷ்மீர் ஃபைல்ஸ்
The Kashmir Files | தி காஷ்மீர் ஃபைல்ஸ்

திராவிட அரசியலும், தமிழக திரைத்துறையும்:

திரைப்படங்கள் மூலம் தங்களது இயக்கத்தின் கொள்கைகளையும், கருத்தியல் சித்தாங்களையும் மக்கள் மனதில் ஆழ வேறூன்ற விதைத்தன திராவிட இயக்கங்கள். அன்றைய காலகட்டத்தில் மேடை நாடகங்களும், திரைப்படங்களும்தான் தென்னிந்தியாவில் திராவிட அரசியலுக்கு வலுவான களம் அமைத்துக்கொடுத்தன. குறிப்பாக, இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தில் காங்கிரஸுக்கு மாற்றாக திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர, திரைத்துறை முக்கியப் பங்காற்றியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திராவிட இயக்க தலைவர்கள்
திராவிட இயக்க தலைவர்கள்

திராவிடக் கொள்கைகளான பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, சாதி, மத, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு போன்றவற்றை கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, பாடல்கள் என திரைத்துறையின் அனைத்துத் தளங்களிலும் நின்று, அன்றைய திராவிட அரசியல் பிரபலங்களான எம்.ஆர்.ராதா, கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் உள்ளிட்டோர் மக்களிடையே கொண்டுசேர்த்தனர். கருணாநிதியின் `பராசக்தி’, எம்.ஜி.ஆரின் `நாடோடி மன்னன்’, எம்.ஆர்.ராதாவின் `ரத்தக்கண்ணீர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து தி.மு.க சந்தித்த தேர்தல்களெல்லாம் ஏறுமுகமாகவே அமைந்தன. 1967-ல் தி.மு.க முதன்முதலில் ஆட்சியைப் பிடித்ததன் பின்னணியில் திரைத்துறையின் பங்கு அளப்பரியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அண்ணாத்துரை மறைவுக்குப் பின்னர், கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தி.மு.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரும், `உரிமைக்குரல்’, `இதயக்கனி’, `நேற்று இன்று நாளை’ உள்ளிட்ட படங்களில் அரசியல் கருத்துகளைப் பேசி மக்களைத் தன்பக்கம் ஈர்த்தார். 1977-ல் ஆட்சியைப்பிடித்து தொடர்ந்து 12 ஆண்டுகள் தான் மரணிக்கும்வரை தமிழக முதல்வராக அந்தப் பதவியை அலங்கரித்தார். அதே வரிசையில் ஜெயலலிதாவும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என அரசியலில் கோலோச்சிய இவர்களுக்கு அரசியல் கருத்துகளைத் தாண்டி, திரைப்பிரபலம் என்பதைத் தாண்டி, தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு இருந்ததையும் மறுப்பதற்கில்லை. இப்படி, தமிழகத்தில் திராவிட வழித்தோன்றல்கள் மக்களை எளிதில் சென்றடையவும், தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்கவும் மிக முக்கியப் பாத்திரமாக அமைந்தது திரைத்துறை.

அண்ணா, கருணாநிதி, பெரியார்
அண்ணா, கருணாநிதி, பெரியார்

இந்துத்துவ அரசியலும், இந்திய திரைத்துறையும்:

`காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, பழம்பெரும் இந்துத்துவத் தலைவர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை இந்துத்துவ, பா.ஜ.க ஆதரவு தயாரிப்பாளர்கள் திரைப்படமாக எடுக்கவிருக்கின்றனர். அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளில் வெளியான சில `ப்ரோ பி.ஜே.பி' திரைப்படங்களைக் காண்போம்.

உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
ஜீ5

உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் (ஜனவரி -2019):

2016-ம் ஆண்,டு செப்டம்பர் மாதம், ஜைஸ்-இ-முகமது எனும் தீவிரவாத அமைப்பு ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி நகரிலிருக்கும் இந்திய ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதத் தாக்குதல்களில் மிகப்பெரிய தாக்குதலாகப் பார்க்கப்பட்ட உரி தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் புகுந்து துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) நடத்தியது. இந்தத் தாக்குதலில் 38 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இந்த வெற்றியை மிகப்பெரிய சாதனையாக இந்திய ராணுவம் கொண்டாடியது. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய ராணுவத்தின் ஸ்பெஷல் பாரா கமாண்டோ நடத்திய துல்லியத் தாக்குதலை மையப்படுத்தி, உருவாக்கப்பட்ட படம் `உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்.’ பாலிவுட் அறிமுக இயக்குநர் ஆதித்யா தரின் இயக்கத்தில், விக்கி கௌஷல், பரேஷ் ராவல், மொஹித் ரெய்னா, யாமி கௌதம் உள்ளிட்டோர் நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படத்தில், இந்தியப் பிரதமர் மோடி போன்ற பிரதமர் கதாபாத்திரம், ``நல்ல மகன் தனது தாயை பத்திரமாகப் பாதுகாப்பான். அதேபோல், இந்தத் தாய் நாட்டையும் தன் தாயைப்போல் அவன் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்" என ராணுவ வீரர்களுக்கு ஆலோசனை கூறுவதுபோலவும், அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் போன்ற கதாபாத்திரம் துல்லியத் தாக்குலுக்கு திட்டமிடுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், படத்தில் இந்தியராணுவத்தினரின் பதிலடித் தாக்குதலுக்கு உதவிபுரிவதாக வரும் இயந்திரக் கழுகு, ராமாயணத்தில் வரும் கருடன் பாத்திரத்தை குறிப்பிடுவதாகவும், மறைமுகமாக ராமர் அரசியலைப் பேசுவதாகவும் திரை விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டது.

`உரி' படம்
`உரி' படம்

பா.ஜ.க ஆட்சியில் நடத்தப்பட்ட மிகப்பெரிய சாதனையாக இந்தத் தாக்குதலை பிரதமர் மோடி தான் செல்லும் இடங்களிலெல்லாம் கூறிவர, ஏப்ரலில் (2019) நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்க, அதற்கு முன்னதாக வெளியான `உரி: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' திரைப்படம் பா.ஜ.க தேர்தல் பிரசாரத்தின் ஒரு வடிவமாகவே அப்போது பார்க்கப்பட்டது.

பிஎம் நரேந்திர மோடி
பிஎம் நரேந்திர மோடி

பிஎம் நரேந்திரமோடி (மே-2019):

`பிஎம் நரேந்திர மோடி' - ஓமங் குமார் இயக்கத்தில், விவேக் ஓபராய் நடிப்பில், சந்தீப் சிங் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பயோபிக் திரைப்படம். 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 11-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, ஏப்ரல் 5-ம் தேதி திட்டமிட்டு இந்தத் திரைப்படத்தை வெளியிட நினைத்தது பா.ஜ.க. ஆனால், இந்தப் படம் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தே எடுக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தல் ஆதாயத்துக்காகவே காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மோடியின் சுயசரிதைப் படத்தை வெளியிட்டால் அது பா.ஜ.க-வுக்கே சாதகமாக அமையும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், தேர்தல் நேரத்தில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது.

இதையடுத்து, தேர்தல் முடியும் வரை `பிஎம் நரேந்திர மோடி' படத்தை வெளியிட, படக்குழுவினருக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. இதனால், மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், மே 24-ம் தேதி திரைப்படம் வெளியிடப்பட்டது.

தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்
தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்

தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் (2019):

1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, 1966-ம் ஆண்டு ஜனவரியில் அப்போதைய சோவியத் ரஷ்யாவிலுள்ள தாஷ்கண்ட் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அதற்கடுத்த சில மணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று முதல் லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் இயற்கையாக நிகழ்ந்ததா இல்லை கொலையா என்ற சந்தேகம் இன்றுவரை தொடர்கிறது.

தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்
தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்

அந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு `சாஸ்திரியைக் கொன்றது யார்?' என்ற கேள்வியோடு, `தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் ' எனும் திரைப்படத்தை பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கினார். இந்தத் திரைப்படத்தில் உண்மையை மீறிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. மேலும், காங்கிரஸ் ஆட்சியைத் தாக்கியும், காங்கிரஸ் கட்சியின் மீது அவதூறு பரப்பும்விதமாகவும் இந்தத் திரைப்படம் வேண்டுமென்றே எடுக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சரியாக நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், 2019 ஏப்ரல் 12-ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், லால் பகதூர் சாஸ்திரியின் குடும்பத்தினர், `சாஸ்திரியின் மரணத்தைத் தேவையில்லாமல் இந்தத் திரைப்படம் சர்ச்சைக்குள்ளாக்குகிறது' எனக் கூறி, படக்குழுவினருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பவும், `தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’ வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

விவேக் அக்னிஹோத்ரி
விவேக் அக்னிஹோத்ரி

கொதித்துப்போன படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, `காங்கிரஸ் கட்சியின் உயர்ந்த குடும்பத்தினரின் வற்புறுத்தலால்தான், சாஸ்திரி குடும்பத்தினர் படத்தை எதிர்க்கின்றனர்' எனக் குற்றம்சாட்டினார். அதன் பின்னர் பல எதிர்மறையான கருத்துகளோடு வெளியான இந்தத் திரைப்படத்கு, பா.ஜ.க அரசாங்கம் சிறந்த வசனத்துக்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரிக்கும், சிறந்த நடிப்புக்காக அவர் மனைவி பல்லவி ஜோஷிக்கும் தேசிய விருது கொடுத்து கௌரவித்தது.

மேற்கண்ட மூன்று படங்களும், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்தே, ஒரே ஆண்டில் திட்டமிட்டு வெளியிடப்பட்டதாகப் பரவலாக குற்றம்சாட்டப்பட்டன. அந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து, தனக்கு ஆதரவான மேலும் சில திரைப்படங்களை இயக்கி வெளியிட ஆயத்தமாகியிருக்கிறது பா.ஜ.க. அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் பா.ஜ.க-வின் சினிமா வழி பிரசாரத்துக்கான இரண்டாவது இன்னிங்ஸ் ஆக பார்க்கப்படுகிறது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்
தி காஷ்மீர் ஃபைல்ஸ்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் (2022):

1990-களில் காஷ்மீரில் இந்து பண்டிட்டுகளுக்கு எதிராக, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள், அதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறிய பண்டிட்டுகளின் கதையை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டதுதான் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம். `தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்' திரைப்படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரிதான் இந்தத் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். அதேபோல, இந்தத் திரைப்படத்திலும் அவரது மனைவி பல்லவி ஜோஷி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2022, மார்ச் 11-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், பாதிக்கப்பட்ட இந்து பண்டிட்டுகளின் வலியைக் காட்சிப்படுத்துவதாகக் கூறி, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தை விதைப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்
தி காஷ்மீர் ஃபைல்ஸ்

ஆனால், பா.ஜ.க ஆளும் அனைத்து மாநிலங்களிலும் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு 100 சதவிகித வரிச்சலுகை கொடுக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்றத்திலேயே வைத்து பிரதமர் மோடி (பாஜக எம்.பி-க்கள் கூட்டம்), அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் திரைப்படத்தை ஆதரித்தும், எம்.பி-க்கள், பொதுமக்கள் கட்டாயம் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர். காங்கிரஸ் தலைவர்கள் `இந்தத் திரைப்படத்தை பின்னிருந்து இயக்கியது பா.ஜ.க-தான்; அதனால்தான் `ஃப்ரீ புரொமோட்' செய்து தனது மதவாத அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது' என பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர். இந்தச் சர்ச்சை முடிவதற்குள் அடுத்த திரைப்படத்துக்கு அடிபோட்டிருக்கிறது பா.ஜ.க.

ஸ்வதந்தர வீர் சாவர்க்கர்:

இந்துத்வாவின் காட் ஃபாதரும், இந்து மகாசபையை உருவாக்கியவருமான சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக, அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. `பிஎம் நரேந்திர மோடி' திரைப்படத்தைத் தயாரித்த, சந்தீப் சிங்தான் இந்தத் திரைப்படத்தையும் தயாரிக்கிறார். இந்தி நடிகரும், இயக்குநருமான மகேஷ் மஞ்ச்ரேக்கர் இந்தப் படத்தை இயக்குகிறார். மேலும், சாவர்க்கர் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா நடிக்கவிருக்கிறார்.

ஸ்வதந்தர வீர் சாவர்க்கர்
ஸ்வதந்தர வீர் சாவர்க்கர்

இந்தப் படம் குறித்துப் பேசிய தயாரிப்பாளர் சந்தீப் சிங், `இந்திய வரலாற்றில் வீர் சாவர்க்கரின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது. ஏன் நமது வரலாற்றுப் புத்தகங்கள் வீர் சாவர்க்கரைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது" என கூறியிருக்கிறார்.

தயாரிப்பாளர் சந்தீப் சிங்
தயாரிப்பாளர் சந்தீப் சிங்
wikipedia

தயாரிப்பாளர் சந்தீப் சிங், மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் நெருங்கிய நண்பர். `2020-ம் ஆண்டு சுஷாந்த்தின் மர்ம மரணத்தில் தயாரிப்பாளர் சந்தீப் சிங்குக்குத் தொடர்பிருப்பதாகவும், அவர் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகவும், அந்தக் காலகட்டத்தில் சுமார் 53 முறை பா.ஜ.க அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசியிருப்பதாகவும், இது குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

`ஸ்வதந்தர வீர் சாவர்க்கர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 2022 முதல் தொடங்கவிருப்பதாகப் படக்குழு அறிவித்திருக்கிறது. தற்போது தொடர்ச்சியாக இது போன்ற படங்கள் அணிவகுப்பதால், அன்றைய திராவிட மாடல் பிரசார யுக்தியை தற்போது பாஜக கையில் எடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதற்கு எதிர்க்கட்சிகள் எந்த வகையில் எதிர்வினையாற்றப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism