Published:Updated:

`படேலின் ஆசையை நிறைவேற்றிய மோடி!' - யூனியன் பிரதேசங்களாக மாறிய ஜம்மு காஷ்மீர், லடாக்

ஜம்மு- காஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு இன்று முதல் இரு யூனியன் பிரதேசங்களாகச் செயல்படவுள்ளன.

ஜம்மு- காஷ்மீர்
ஜம்மு- காஷ்மீர்

ஆகஸ்ட் - 5, இந்திய மக்களால் மறக்க முடியாத ஒரு நாள். குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு. ஆம், ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சில நாள்கள் முன்பு ஜம்மு - காஷ்மீர் முழுவதும் ஆயிரக்கணக்கான ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். பொதுமக்கள் வெளியில் வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டது.

ஜம்மு- காஷ்மீர்
ஜம்மு- காஷ்மீர்

4-ம் தேதி மாலை முதல் அந்த மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. செல்போன், இணையம் போன்ற அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. அங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். மறுநாள் என்ன நடக்கப்போகிறதோ என்று மொத்த மாநில மக்களும் பயந்துகொண்டிருந்தனர்.

அப்போதுதான் ஆகஸ்ட் 5-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்த அறிவிப்பை வெளியிட்டார். “இதுவரை ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டப்பிரிவு 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி ஜம்மு - காஷ்மீர் மாநிலமாக இல்லாமல் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகச் செயல்படும்” எனக் கூறினார்.

அமித் ஷா
அமித் ஷா

மத்திய அரசின் இந்த அறிவிப்பை ஒரு தரப்பு மக்கள் ஆதரித்தனர், மற்றொரு தரப்பு மக்கள் இன்னும் எதிர்த்து வருகின்றனர். இதன் பின் காஷ்மீர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அங்கிருந்த மக்கள் அவதிப்படுகிறார்கள், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மக்களால் வீட்டை விட்டு வெளியில்கூட வரமுடியாத நிலை உள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி, தாங்கள் காஷ்மீருக்கு செல்ல அனுமதி கேட்டனர்.

இரும்புத்திரை காஷ்மீர்! - “மயானம்போல மாறிப்போச்சு சாப், எங்க மண்ணு!”

ஆனால், மத்திய அரசு எவரையும் அனுமதிக்கவில்லை. அதையும் மீறிச் சென்ற ராகுல் காந்தி போன்ற பல தலைவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையம் வரை சென்று திருப்பி அனுப்பப்பட்டனர். இப்படிக் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக காஷ்மீர் பிரச்னை தொடர்ந்து வந்த நிலையில், தற்போதுதான் அங்கு மெது மெதுவாக இயல்பு வாழ்க்கை திரும்பி அனைத்து பிரச்னைகளும் சற்று ஓய்ந்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர்
ஜம்மு- காஷ்மீர்

இந்நிலையில், இன்று முதல் ஜம்மு - காஷ்மீர் மாநிலமாக இல்லாமல் இரண்டு யூனியன் பிரதேசங்களாகச் செயல்படவுள்ளது. காஷ்மீருக்கு கிரீஷ் சந்திரா மர்முவும் லடாக்குக்கு ஆர்.கே.மாத்தூர் ஆகிய இருவரும் துணை நிலை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மித்தல் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பிறகு அங்கு நடக்கும் முதல் அரசு நிகழ்வு ஆளுநர்களின் பதவியேற்புதான்.

`காஷ்மீர் - லடாக் துணைநிலை ஆளுநர்கள் நியமனம்' - மோடி வியூகத்தின் பின்னணி!

இந்திய வரலாற்றில் ஒரு முழு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களா பிரிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. ஆனால், தங்களுக்குத் தனி பிரதேசம் வேண்டும் என்பது லடாக் மக்களின் நீண்டநாள் கோரிக்கை. அது தற்போது நிறைவேறியுள்ளது. இனி காஷ்மீர் யூனியன் பிரதேசம், முதல்வர், சட்டமன்றத்துடன் கூடிய தனி அரசாகச் செயல்படவுள்ளது. லடாக் துணை நிலை ஆளுநருக்குக் கீழ் செயல்படவுள்ளது.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபபாய் படேல்தான் காஷ்மீரின் சிறப்புச் சட்டத்தை நீக்கி அதை முழுவதுமாக இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என விரும்பினார். அதை நிறைவேற்றும் வகையில் காஷ்மீரின் சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டு, படேலின் பிறந்த நாளில் ஜம்மு - காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக மாறும் என அறிவித்தது மோடி தலைமையிலான மத்திய அரசு.