Published:Updated:

உக்ரைன் போர்... உளவு பார்க்கப்பட்ட நட்பு நாடுகள்- சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பிய `Pentagon Leak'

தனது நட்பு நாடுகளையும் அமெரிக்கா உளவு பார்த்துவருவது, பென்டகனிலிருந்து அண்மையில் கசிந்த ரகசிய ஆவணங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

Published:Updated:

உக்ரைன் போர்... உளவு பார்க்கப்பட்ட நட்பு நாடுகள்- சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பிய `Pentagon Leak'

தனது நட்பு நாடுகளையும் அமெரிக்கா உளவு பார்த்துவருவது, பென்டகனிலிருந்து அண்மையில் கசிந்த ரகசிய ஆவணங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

உலகில் சக்திவாய்ந்த ராணுவக் கட்டமைப்புகளை வைத்திருக்கும் நாடுகளில், அமெரிக்காவுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகம் பென்டகன். இது வெர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் இருக்கிறது. இது பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கட்டடங்களில் ஒன்றாகும்.

இங்கு ராணுவ உபகரணங்கள் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் ராணுவ ரகசியங்கள், எதிரி நாடுகளைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் உள்ளிட்டவற்றின் தரவுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு எடுக்கப்படும் முடிவுகள் அமெரிக்காவை மட்டும் சார்ந்து அல்லாமல், சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

அமெரிக்கா
அமெரிக்கா

இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட பென்டகனிலிருந்து ரகசிய ஆவணங்கள் கடந்த வாரம் இணையத்தில் கசிந்ததாகக் கூறப்படுகிறது. அதில் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றனவாம். குறிப்பாக உக்ரைனுக்கு உதவி செய்வதற்கான நேட்டோ படையினரின் திட்டங்கள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்திருக்கிறது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், தென் கொரியா போன்ற நட்பு நாடுகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா ஒட்டுக்கேட்டிருப்பது குறித்த தகவலும் அந்த ரகசிய ஆவணங்களின் மூலம் தெரியவந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதில், உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என்று தென்கொரியாவுக்கு வலியுறுத்தலை அமெரிக்கா வழங்கியிருப்பது குறித்த தகவலும் இடம்பெற்றிருக்கிறது. மேலும், போர் நடைபெறும் அந்நிய நாட்டில் யாருக்கும் ஆதரவாக ராணுவ உதவி செய்யக் கூடாது என்ற தனது நிலைப்பாட்டைக் கைவிடவும் தென்கொரியா தயங்கியது, அந்த உரையாடல்களின் மூலம் தெரியவந்திருக்கிறது.

இந்த விவகாரம் அமெரிக்காவுக்கும், தென்கொரியாவுக்குமிடையில் இருக்கும் உறவில் விரிசலை ஏற்படுத்தும் எனப் பேசப்படுகிறது. இதேபோல் இஸ்ரேலும் தனது ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டியது. ஆரம்ப எச்சரிக்கை அமைப்பை உருவாக்க உக்ரைனுக்கு அந்த நாடு உதவினாலும், அது எந்தவிதமான ஆபத்தான ஆயுதங்களையும் வழங்க மறுத்துவிட்டது.

உக்ரைன் பாக்முட் நகரம்
உக்ரைன் பாக்முட் நகரம்

இருப்பினும், கசிந்த ஆவணங்களின்படி, அடுத்த மாதங்களில், இஸ்ரேல் மூன்றாம் தரப்பினர் மூலம் உக்ரைனுக்கு ஆபத்தான பாதுகாப்பு அமைப்புகளை வழங்கக்கூடும் என்ற தகவலும் இடம்பெற்றிருக்கிறது. ரஷ்யா தன்னுடைய வீரர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் மன உறுதியை அதிகரிக்கவும் பணப் பலன்கள் வழங்கும் தந்திரத்தைக் கடைப்பிடித்திருக்கிறது.

அதாவது, `வெளிநாட்டு டாங்கிகளைக் கைப்பற்றுவதற்கும் அழிப்பதற்கும் நிதிச் சலுகைகள் வழங்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், டாங்கிகள் அழிக்கப்படும் வீடியோக்கள் ரஷ்ய துருப்புகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்குப் புதிய ஆயுதங்களை முறியடிக்கும் திறனை வழங்குவதுடன், மேற்கு நாடுகளுக்கு நம்பிக்கையைக் குறைக்கவும் முடியும் என அந்த நாடு நம்புகிறது என்ற தகவலும் அந்த ஆவணங்களில் இடம்பெற்றிருக்கிறது.

உக்ரைனின் ராணுவ உதவிக்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், 38 ஐரோப்பிய அரசுகளின் நிலைப்பாடுகள் குறித்த விவரமும் கசிந்திருக்கிறது. இது குறித்து கட்டுரை வெளியிட்டிருக்கும் அமெரிக்க செய்தித்தாள் ஒன்று, "ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களிலிருந்து தங்களது நாட்டை பாதுகாத்துக்கொள்வதற்காக முன் பகுதியில் ஏராளமான வீரர்களை உக்ரைன் குவித்திருக்கிறது.

இது வரும் மே., 23-ம் தேதிக்குள் முற்றிலும் குறைக்கப்பட்டுவிடும். இதனால் ரஷ்யாவின் போர் முயற்சிக்கு ஊக்கமளிக்கக் கூடும், அது போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்களை வான் பாதுகாப்பு இல்லாத இடங்களில் பயன்படுத்தி, போரின் முடிவை தனக்குச் சாதகமாக மாற்றும். இந்த ஆண்டு பிப்ரவரி பிற்பகுதியில், ரஷ்யப் படைகள் உக்ரேனிய ராணுவத்தை கிட்டத்தட்ட பாக்முட் நகரில் சுற்றிவளைத்தன.

ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன்

பல மாதங்களாக கடுமையான சண்டை நடந்துவருகிறது. உக்ரைனின் ராணுவ உளவுத்துறை இயக்குநரால் நிலைமை `பேரழிவு' என்று விவரிக்கப்பட்டாலும், ஒரு மூத்த உக்ரேனிய ராணுவ அதிகாரி, `சண்டையிட போதுமான வெடிமருந்துகள் இல்லாததால், அந்த நேரத்தில் வீரர்களின் மன உறுதி குறைவாக இருந்தது. இறுதியில், உயரடுக்கு பிரிவுகளின் உதவியுடன் உக்ரேனியப் படைகள் ரஷ்யர்களை விரட்டியடிக்க முடிந்தது’ எனத் தெரிவித்தார். இது உக்ரைனுக்கு, வரவிருக்கும் எதிர் தாக்குதலுக்கு தனது சிறந்த பயிற்சி பெற்ற மற்றும் ஆயுதம் ஏந்திய வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள உதவியது" எனத் தெரிவித்திருக்கிறது.

வெள்ளை மாளிகை, அமெரிக்கா
வெள்ளை மாளிகை, அமெரிக்கா

இத்தகைய முக்கிய ஆவணங்கள் கசிந்ததற்கு ரஷ்ய அதிபர் புதின்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பென்டகன் துணை செய்திச் செயலாளர் சப்ரினா சிங், ``ஆவணங்கள் சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்பட்டதை அறிந்திருக்கிறோம். இது குறித்து ஆய்வுசெய்து வருகிறோம்" என்றார். இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.