Published:Updated:

`வீடியோ ஷூட்டிங்... டெஸ்ட்வைத்த ஸ்டாலின்!’ -ஈரோடு தி.மு.க கிராமசபைக் கூட்ட லைவ் ரிப்போர்ட்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

வாசுமதி என்ற பெண் பேசி முடித்ததும், `சார் நான் கத்துக்கிட்ட ஒரு விஷயத்தை உங்க முன்னாடி செஞ்சு காமிக்கணும்னு நினைக்கிறேன்’ எனக் கேட்க, ஸ்டாலின் ஓகே சொன்னார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் தொகுதிக்கு உட்பட்ட சிறுவலூரில் தி.மு.க சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. வழக்கம்போல ஜமக்காளம் செட்டப்போடு, கிட்டத்தட்ட ஆயிரம் பெண்களை கூட்டத்துக்குத் திரட்டியிருந்தனர். கூட்ட அரங்கில் அழைத்துவரப்பட்டு அமரவைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் பெண்களும், யூனிஃபார்மாக ஸ்டாலினின் உருவம் பதித்த தி.மு.க தொப்பியை அணிந்திருந்தனர். இவர்களுக்கு மட்டுமல்ல... மேளம், நாகஸ்வரம் வாசிப்பவர்கள், ஏன் வேட்டு வெடிப்பவர்கள் என அனைவருக்குமே தி.மு.க தொப்பிதான்.

மேளம், நாகஸ்வரம் வாசித்தவர்கள் தி.மு.க தொப்பி, துண்டுடன்
மேளம், நாகஸ்வரம் வாசித்தவர்கள் தி.மு.க தொப்பி, துண்டுடன்

இடையிடையே, `வீடியோ எடுக்கப்போறாங்க. எல்லாரும் கையில கொடுக்கப்பட்டிருக்குற தலைவரோட (ஸ்டாலின்) படம் போட்ட அட்டையைத் தலைக்கு மேல தூக்கிக் காட்டுங்க; எல்லாம் கோரஸா `அ.தி.மு.க-வை நிராகரிக்கிறோம்’னு சொல்லுங்க’ என கூட்டத்துக்கு அழைத்து வந்திருந்த பெண்களைவைத்து வீடியோ ஷூட்டிங் வேறு நடத்திக்கொண்டிருந்தனர். `மக்கள் கிராமசபைக் கூட்டம்னு சொல்லி எல்லாருக்கும் தி.மு.க தொப்பி போட்டதோட, இதைச் சொல்லு அதைச் சொல்லுன்னு சென்னையிலிருந்து வந்தவங்க செஞ்ச வேலைக்கான வீடியோ ஆதாரத்தைத்தான் திரட்டுறாங்க. இதெல்லாம் எங்க போய் முடியுமோ!’ எனக் கூட்டத்தில் உடன்பிறப்புகளின் பொருமல் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின்
மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

காலையில் கோவையில் நடந்த சம்பவத்தின் கொதிப்பு, ஈரோட்டில் எதிரொலித்தது. முதல்வர், ஆளும் அரசின் செயல்பாடுகளைவிட, அமைச்சர் வேலுமணியை அட்டாக் செய்தே ஸ்டாலினின் பேச்சு இருந்தது. அவர் பேசுகையில், ``நான் இன்னிக்குக் காலையில தொண்டாமுத்தூர் தொகுதிக்குப் போயிருந்தேன். அங்கே நம்ம கூட்டத்தைக் கெடுக்கணும்னு திட்டம் போட்டது, நேற்றிரவே எங்களுக்குத் தெரிஞ்சிடுச்சு. நல்ல போலீஸ்காரர் சிலர் மூலம் அந்தத் தகவல் நமக்குத் தெரிஞ்சிடுச்சு. ஒரு பொண்ணைப் புடிச்சு, அவங்களுக்கு நம்மளோட தி.மு.க படம் போட்ட தொப்பியைப் போட்டு, கூட்டத்தோட கூட்டமா உட்காரவெச்சிருந்தாங்க. கூட்டம் நடக்குறப்ப பேசணும்னா ஒண்ணு கையை உயர்த்தணும், இல்லைன்னா நாங்க பேர் படிச்சு அனுமதிக்கிறவங்கதான் பேசணும்.

ஆனா, அந்தப் பெண் `ஏன் இந்த கிராமசபைக் கூட்டத்தை நடத்துறீங்க’ன்னு சத்தம் போட்டு கலவரத்தில் ஈடுபட்டாங்க. மரியாதையா வெளிய போயிடுங்கன்னு சொல்லிப் பார்த்தோம். நம்ம ஆளுங்க அடிச்சா, அதைவெச்சு ஏதாவது டிராமா செய்யலாம்னு பார்த்தாங்க. ஆனா, நம்ம ஆட்கள் அந்தப் பெண்ணை போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சு புகார் கொடுத்தாங்க. ஸ்டேஷன் வாசல்ல நின்னுக்கிட்டு அந்தச் சகோதரி, வேலுமணிகிட்ட போன்ல பேசுது. அ.தி.மு.க-வுல ஏதோ அந்தப் பொண்ணு பொறுப்பாளராக இருக்காங்களாம். வேலுமணிக்குப் பக்கத்து வீடாம். எப்படியாவது திட்டமிட்டு நம்ம கூட்டத்துல பிரச்னை செய்யணும்னு நினைக்கிறாங்க” என்றார்.

மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின்
மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

தொடர்ந்து பேசியவர், ``ஏற்கெனவே கிராமசபைக் கூட்டங்களை நடத்தி மக்கள்கிட்ட மனுக்களை வாங்கிவெச்சிருக்கோம். இதெல்லாம் இந்த ஆட்சியில இருக்கறவங்க நடவடிக்கை எடுப்பாங்கன்னு இல்லை; நாம ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கணும்னு. உள்ளாட்சித் தேர்தல்ல பல முறைகேடுகள், அக்கிரமங்கள் செஞ்சாங்க. இவ்வளவு நடந்தும் 75 சதவிகித இடத்துல வெற்றி பெற்றிருக்கோம். நியாயமா நடந்திருந்தா 90 சதவிகித வெற்றி பெற்றிருப்போம். உள்ளாட்சித்துறையில் பிளீச்சிங் பவுடர், துடைப்பம் வாங்குனதுல எல்லாம் வேலுமணி ஊழல் செஞ்சிருக்காரு. இதையெல்லாம் பாக்குறப்ப, வேலுமணி இருக்குற கேடுகட்ட பொறுப்புல நான் கடந்த காலத்துல இருந்துருக்கேனே ன்னு இப்ப ஃபீல் பண்றேன்.

ஜெயலலிதா நமக்கு எதிரிதான். அது அரசியல். ஆனா, செத்தது சுப்பனோ, குப்பனோ இல்ல. தமிழ்நாட்டோட முதலமைச்சர். நாம பதவிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்துல இருக்குற மர்மத்தை விசாரணை செஞ்சு நிச்சயமா நடவடிக்கை எடுப்போம். சம்பிரதாயத்துக்கு என்னைப் பார்த்து சிரிச்சதால, எப்படி சிரிக்கலாம்னு ஓ.பி.எஸ்ஸோட முதலமைச்சர் பதவியை பிடுங்கிட்டாங்க. அப்புறம் யார் எப்படி முதலமைச்சர் ஆனாங்கன்னு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளிவைக்க இன்னும் நாலு மாசம்தான் இருக்கு.’

மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின்
மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

கோபி தொகுதியில் எட்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கும் செங்கோட்டையன், மூத்த அமைச்சராகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் இருக்காரு. ஆனா, பள்ளிக்கல்வித்துறையில் என்ன மாற்றம் நடக்குது, என்ன அறிவிப்பு வருதுன்னே அவருக்குத் தெரியாது. செங்கோட்டையன் முன்னாடி முதல்வர் பழனிசாமி கைகட்டி நின்ற காலம் இருந்தது. இப்போது பழனிசாமி முன்பாக செங்கொட்டையன் கைகட்டி நிக்கிறார். செங்கோட்டையன் ஒரு அப்பிராணி. அவரைப் பற்றி நான் விமர்சனம் செய்யத் தயாராக இல்லை” என முடித்தார்.

கூட்டத்தில் ஸ்டாலின் பெயர் படித்த 10 பேர் எழுந்து பேசினர். அதில் வாசுமதி என்ற பெண் பேசி முடித்ததும், `சார் நான் கத்துக்கிட்ட ஒரு விஷயத்தை உங்க முன்னாடி செஞ்சு காமிக்கணும்னு நினைக்கிறேன்’ எனக் கேட்க, ஸ்டாலின் ஓகே சொன்னார். கண்களைத் துணியால் கட்டிக்கொண்ட அந்தப் பெண், `என் கண்ணைக் கட்டிக்கிட்டு என் கண்ணு முன்னாடி எதைக் கொண்டு வந்தாலும், எதிர்ல என்ன இருக்குன்னு சொல்லிடுவேன் சார்’ எனச் சொல்ல, ஸ்டாலினோடு சேர்ந்து கூட்டமும் பரபரப்பானது. அருகிலிருந்த பெண் ஒருவர் செய்தித்தாளை எடுத்து நீட்ட, `தலைவர் அவர்களே வருக வருகன்னு எழுதியிருக்கு... பக்கத்துல உங்க படம் போட்டிருக்கு’ என்று சொல்ல கூட்டம் ஆர்ப்பரித்தது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அந்தப் பெண்ணை அருகே அழைத்து அ.தி.மு.க-வின் குற்றப்பத்திரிகை என்னும் நோட்டீஸை நீட்டி `இதுல என்ன போடிட்ருக்குன்னு சொல்லுங்க’ என ஸ்டாலின் சோதித்தார். `அ.தி.மு.க குற்றப்பத்திரிகைன்னு எழுதியிருக்கு. வலது பக்கம் முதல்வர் எடப்பாடி படம் போட்டிருக்கு. துப்பாக்கியில சுடுற மாதிரி போட்டோ இருக்கு. ஓ.பி.எஸ் படம் இருக்கு’ என அந்தப் பெண் சொல்லச் சொல்ல கூட்டம் அதிர்ந்தது. இதையெல்லாம் பார்த்து நம்பாத ஸ்டாலின் ஒரு வெள்ளைப் பேப்பரில் ஏதோ எழுதி `இது என்னன்னு படிங்க பார்க்கலாம்’ என டெஸ்ட் செய்தார். `அடுத்து உதிக்கப்போவது உதயசூரியனின் ஆட்சிதான்’ என அந்தப் பெண் சொல்ல, ஒட்டுமொத்தக் கூட்டமும் ஆராவாரத்தில் கத்தியது. `எப்படிம்மா இது... ஏதாவது பயிற்சி எடுக்குறீங்களா’ என ஸ்டாலினே அந்தப் பெண்ணின் செயலைப் பார்த்து ஷாக்காகிப்போனார்.

அடுத்த கட்டுரைக்கு