Published:Updated:

துரைமுருகன், கே.எஸ்.அழகிரி, ஜெயக்குமார், கருணாஸ்... தீபாவளி `வெடி'ச்சிரிப்புகள்!

தீபாவளியை முன்னிட்டு, தமிழக அரசியல்வாதிகள் சிலரிடம் ஜாலியான கேள்விகளைக் கேட்டுவைத்தோம். கொஞ்சமும் சளைக்காமல், வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த நகைச்சுவையான தருணங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டனர்.

துரைமுருகன்
துரைமுருகன் ( Vikatan )

`என்னோடு ஒரே மேடையில், நேருக்குநேர் வாதம் பண்ணத் தயாரா...' என்று மேடைதோறும் எதிர்க்கட்சிகளுக்கு 'ஒண்டிக்கு ஒண்டி' சவால் விட்டுக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு தீபாவளிக்குக்கூட விடுமுறை அளிக்காவிட்டால் எப்படி....?

சீரியஸ் அரசியல்வாதிகள் சிலரிடம் செம கலாய் கேள்விகளை நாம் முன்வைக்க... குறையாத உற்சாகத்துடன் அவர்கள் அளித்துள்ள ஜாலியான பதில்கள் இங்கே அப்படியே.... (நீங்களும் சீரியஸா எடுத்துக்காதீங்க..!)

துரைமுருகன், தி.மு.க பொருளாளர்

துரைமுருகன்
துரைமுருகன்

``பள்ளிக்காலத்தில், எந்த சப்ஜெக்ட்டில் ரொம்பவும் குறைவான மதிப்பெண் எடுப்பீர்கள்?''

``கணக்கு, வேதியியல் இந்த இரண்டு பாடமும் எனக்கு எப்பவுமே எதிரிங்கதான். இப்போதுகூட, 25-யும் 45-யும் கூட்டினா எவ்வளவுனு கேட்டீங்கன்னா விரல்விட்டுத்தான் எண்ணிக்கொண்டிருப்பேன். இதுதான் நம்ம வரலாறு!''

``இப்போது வீட்டில், உங்களுடைய வாரிசுகளில் யார் கணக்கில் ரொம்பவும் வீக்?''

``4-ம் வகுப்பு படிக்கும் என் பேரனுக்கு கணக்கு வராது. ரொம்பவும் குறைச்சலாத்தான் மார்க் வாங்குவான். `கணக்கெல்லாம் ஒரு கஷ்டமாடா... ஈஸியா மார்க் எடுக்கலாம்'னு நான் பெரிய மனுஷன் தோரணையில் அவனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். தாத்தாவுக்கே கணக்கு கஷ்டம் என்ற உண்மை அவனுக்கு இப்போதுவரை தெரியாது என்ற தைரியம்தான்!''

துரைமுருகன்
துரைமுருகன்

``காலேஜ் வாழ்க்கை எப்படியிருந்தது?''

``பச்சையப்பா காலேஜ்ல நான்தான் ஹீரோ! தி.மு.க மாணவர் அணியில் இருந்ததால், கட்சிக்காரர்கள் என்னைப் பார்க்க அடிக்கடி காலேஜ் வருவார்கள். வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போதே, அவர்களோடு பேசிக்கொண்டிருப்பேன். வாத்தியார்களும் கேட்கமாட்டார்கள். கேட்டால்கூட, `கொஞ்சம் இருங்க சார்... கட்சிக்காரங்க வந்திருக்காங்க. பேசிட்டு வந்துடுறேன்'னு `கெத்தா' சொல்லிடுவோம்!

சொல்லிவெச்ச மாதிரி எல்லாப் பொண்ணுங்களும் இங்கிலீஷ்லதான் பேசுவாங்க. அது நமக்குச் சரியா வராது அப்போ. அதனால, அந்தக் காலத்துல காதல் என்ற வசந்த காலம் மட்டும் நம்ம வாழ்க்கையில வராமலே போச்சு!''

கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

``சமீபத்தில், நீங்கள் அசடு வழிந்த ஒரு சம்பவம்?''

``அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும் என் பேரனுக்கு 9 வயது. கடந்த விடுமுறையின்போது, சென்னை வந்திருந்த அவனை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டிலிருந்து அழைத்து வந்தேன். வழியில், `கூல் ட்ரிங்க்ஸ்' கேட்டான். உடனே ஹோட்டல் ஒன்றில், நானும் அவனும் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிக் குடித்தோம். அப்போது, என் செல்பேசிக்கு அழைப்பு வரவே, பேச்சு சுவாரஸ்யத்தில், கூல் ட்ரிங்க்ஸ் குடித்த பேப்பர் கப்பினை அப்படியே கீழே போட்டுவிட்டேன். இதைப் பார்த்துவிட்ட அவன், 'என்ன தாத்தா, பேப்பர் கப்பை குப்பைத் தொட்டியில் போடாமல், இப்பிடி பப்ளிக் இடத்தில போட்டுட்டீங்களே' என்று குடும்பத்தார் எல்லோர் முன்னிலையிலும் கேட்டுவிட்டான். அசடு வழிந்துகொண்டே, அந்த பேப்பர் கப்பை எடுத்துவந்து மறுபடி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்தேன்!

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

பொதுவாக அரசியல்வாதியாக இருக்கும்போது, வீட்டில் நாம்தான் ஒரு சூப்பர் பவர் மாதிரி காட்சியளிப்போம். `நமக்குத்தான் எல்லாம் தெரியும்' என்று நாமும் நினைப்போம். வீட்டிலுள்ளவர்களும்கூட நமக்கு மரியாதை கொடுப்பார்கள். இந்த மாதிரியான சூழலில், இதுபோல் குழந்தைகளிடம் மாட்டிக்கொள்ளும்போது குடும்பத்தினர் அத்தனைபேர் முன்னிலையிலும் அசடு வழிய நேர்ந்துவிடும்தான்!''

நாஞ்சில் சம்பத், (அரசியல் - இலக்கிய மேடைப் பேச்சாளர்)

``அடிக்கடி மனைவியிடம் திட்டு வாங்குகிற அளவுக்கு நீங்கள் செய்கிற தவறு என்ன?''

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

``காலையில் குளிக்கச் சொல்லி தினமும் திட்டுவாள் என் மனைவி. ஆனால், காலையில் குளிக்கும் பழக்கமே எனக்குக் கிடையாது. தினமும் சாயங்காலம்தான் குளியல். தீபாவளி அன்றும்கூட இதுதான் என் வழக்கம். எனவே, மற்ற நாள்களைவிட தீபாவளியன்று, திட்டுகிற எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும்.''

கருணாஸ், (முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர்)

``தீபாவளியன்று மொக்கை வாங்கிய சம்பவம் ஏதேனும் உண்டா?''

``வழக்கமாக ஒவ்வொரு தீபாவளியின்போதும், என் வீட்டின் முன் 10 ஆயிரம் வாலா பட்டாசைப் பந்தாவாக வெடிப்பேன். தெரு நீளத்துக்கு சரவெடியை விரித்துவைத்து திரியில் நான் பந்தாவாகத் தீ வைக்க, பட் படாரென்று சில நிமிடங்கள் சேர்ந்தாற்போன்று சரம் வெடிக்கும். ஒட்டுமொத்தத் தெருவும் அப்படியே அசையாமல் நின்று வேடிக்கை பார்க்கும். மாடிகளில் இருந்தெல்லாம் மக்கள் பார்ப்பார்கள்.

சிவகாசியில் உள்ள என் நண்பர்கள் குறைந்த விலையில் எனக்காகப் பட்டாசு தந்து உதவுகிறார்கள் என்ற உண்மை மற்றவர்களுக்குத் தெரியாததால், வெடி வெடிக்கிற அந்தச் சில நிமிடங்கள் எனக்கும் உள்ளூர ஒரு கெத்து இருக்கும்.

ஆனால், கடந்த வருடம் என்ன ஆனதென்றே தெரியவில்லை. பட்டாசு திரியில் நான் தீ வைக்க, வைக்க ஒன்றும் இரண்டுமாக டப், டிப் என்று வெடித்ததோடு சரி. வெடிக்கவே இல்லை. 'இப்போது வெடிக்கும், அப்போது வெடிக்கும்' என்று ஒட்டுமொத்தத் தெருவும் நம்பிக்கையோடு வேடிக்கை பார்க்க... எனக்கு ஒரே அசிங்கமாகிவிட்டது. கடைசிவரை அந்தச் சரவெடி வெடிக்காமலேயே கரியைப் பூசிவிட்டது''.

கருணாஸ்
கருணாஸ்

``நடிக்க வருவதற்கு முன்பு இசைக் குழு நடத்தினீர்களே... மேடையில் தப்புத் தப்பாகப் பாடி, கல்லடி வாங்கியிருக்கிறீர்களா?''

``கல்லெறி வாங்காமல் தப்பித்திருக்கிறேன். ஆரம்பத்தில், கிராமியக் கலைக் குழு என்றுதான் ஆரம்பித்தேன். விநாயகர் சதுர்த்திக்காக ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு கோயிலில்தான் முதல் நிகழ்ச்சி. 1,800 ரூபாய் பேமன்ட். நாதஸ்வரம், தவில் வாசிக்க மயிலாப்பூரில் உள்ள இருவரிடம் அட்வான்ஸ் கொடுத்து புக் செய்துவிட்டேன்.

ஆனால், விநாயகர் சதுர்த்தி அன்று நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. தவில், நாதஸ்வரம் வாசிக்கவேண்டிய இருவரும் வந்துசேரவில்லை. உடனே, 'மச்சான் நீ கொஞ்சநேரம் மிமிக்ரி பண்ணி கூட்டத்தைக் கலையாமப் பாத்துக்கோ. நான் போய் அவங்களைக் கூட்டி வருகிறேன்' என்று `லொள்ளு சபா' பாலாஜியிடம் சொல்லிவிட்டு, வித்வான்களைத் தேடி நான் மயிலாப்பூர் போனேன். அங்கே, கபாலீஸ்வரர் கோயில் ஊர்வலத்துக்கு நாதஸ்வரம் வாசித்துக்கொண்டு தெருத்தெருவாக ஊர்வலம் போய்க்கொண்டிருந்தார்கள் அந்த வித்வான்கள்.

எனக்குப் பயங்கர கோபம். அங்கேயே அவர்களை நிறுத்திச் சண்டை போட்டேன். `வேண்டுமானால், உன் அட்வான்ஸை வாங்கிக்கொள். இது எங்களுக்கு ரெகுலர் நிகழ்ச்சி. இதுதான் சாப்பாடு போடுகிறது' என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டனர். ஆனால், என் நண்பர்களோ விடவில்லை. உடனடியாக ஆட்டோவை வரவழைத்து, அடுத்த தெருவுக்குள் ஊர்வலம் நுழைகிறபோதே, வித்வான்கள் இருவரையும் ஆட்டோவில் அள்ளிப்போட்டு, அவர்களை சமாதானப்படுத்தி ஆயிரம்விளக்குக்குக் கொண்டுவந்து கச்சேரி பண்ணி முடித்தோம்!''

``மனைவி அருகில் இருக்கும்போதே, யாரையாவது சைட் அடித்து மாட்டியிருக்கிறீர்களா?''

``மலேசியாவில் உள்ள பெண் ஒருவர் சமீபத்தில் எனக்கு அறிமுகமாகியிருந்தார். அவரைப் பற்றி என் மனைவி க்ரேஸிடமும் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஒருநாள் காலையிலேயே எனக்கு போன் செய்த அந்த மலேசியப் பெண், 'அண்ணா எப்படி இருக்கீங்க...' எனப் பேச்சைத் தொடங்கினார். நான் உடனே, `இந்தா பாரும்மா என்னை அண்ணன் என்றெல்லாம் கூப்பிட்டால் என்னோடு பேசாதே' என்று பட்டென்று சொல்லிவிட்டேன். அருகில் இருந்த என் மனைவிக்குப் பயங்கர ஷாக்! ஏனெனில், இத்தனை வருடத்தில், எந்தப் பெண்ணிடமும் நான் இப்படிச் சொன்னதேயில்லை. எனக்கும்கூட வேறு எந்தத் தவறான எண்ணம் எல்லாம் கிடையாது. ஏதோ தோன்றியது அப்படிச் சொல்லிவிட்டேன். அப்புறம், என் மனைவிதான் அந்தப் பெண்ணிடம், சமாதானம் கூறி போனை கட் செய்தாள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அந்தப் பெண் என்னிடம் பேசவேயில்லை! ஆனாலும், இப்போதுவரை இந்தச் சம்பவத்தைச் சொல்லிச் சொல்லியே என்னை ஓட்டிக்கொண்டிருக்கிறாள் என் மனைவி!''

``இருக்கிற கட்சியில் இருந்துகொண்டே, வேறொரு கட்சிக்குத் தாவிவிடலாம் என்ற அனுமதி கொடுத்தால், எந்தக் கட்சிக்குத் தாவுவீர்கள்?''

``எந்தக் கட்சிக்குப் போனாலும் சிக்கல்தான். நான் காதலித்துத் திருமணம் செய்தவன் என்பதால், காதலர் கட்சிக்குத் தாவிவிடலாம் என்று நினைக்கிறேன். ஆனால், அங்கேயும்கூடக் காதலர்களைச் சேர்த்துவைத்தபிறகு, பொண்ணு, மாப்பிள்ளை என்று இரண்டு வீட்டுக்காரர்களிடமும் அடி வாங்கப்போவது உறுதி!''

ஜெயக்குமார், மீன்வளத்துறை அமைச்சர்

``தீபாவளின்னாலே புத்தாடை, புதுப்படம், பட்டாசு என்று கொண்டாட்டம்தான். நான் கல்லூரியில் படித்த காலத்திலெல்லாம் பெல்பாட்டம் பேன்ட், ஹிப்பி ஹேர் ஸ்டைல், ஹைஹீல்ஸ் செருப்பு என மாடர்ன் லுக்கில் மகாராணி தியேட்டர் வாசலில் சுற்றித் திரிந்திருக்கிறோம். அதுவும் படம் முடிந்துபோகிற கூட்டத்தைப் பார்த்துவிட்டால், லட்சுமி வெடியைக் கையில் பிடித்தவாறே திரியைக் கொளுத்தி, வானத்தை நோக்கி ஸ்டைலாகத் தூக்கி எறிவோம். இதில், டைமிங்தான் ரொம்ப முக்கியம். ஒருமுறை திரியைத் தாண்டியும் தீ கங்கு வந்துவிட்டது தெரியாமல், கொஞ்சம் லேட் ஆகிவிட என் கையிலேயே `லட்சுமி' வெடித்துவிட்டாள். கை உடனே மரத்துப்போய்விட்டது. ஆனாலும் பெரிய காயமில்லாததால், தப்பித்தேன். இதெல்லாம் எவ்வளவு பெரிய தவறு என்று அந்தச் சம்பவத்துக்குப் பிறகு உணர்ந்துகொண்டேன்.''

``எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கிறீர்களே... அந்த ரகசியம் என்ன?''

``எப்போதும் என்னைச் சுற்றி எல்லோரையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள விரும்புபவன் நான். பசங்க கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தால், நானும் அவர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிடுவேன். அதேபோல், ஏரியாவில் ஏதேனும் நிகழ்ச்சி என்றால்கூட, நானே வலிய மேடையேறிப் போய் மைக் பிடித்து தலைவர் பாடல்களைப் பாட ஆரம்பித்துவிடுவேன். இதிலென்ன கூச்சம் வேண்டிக்கிடக்கிறது? நான் மேடையில் மைக் பிடித்துப் பாடுவதை யூ டியூப்பில், 10 லட்சத்துக்கும் அதிகமான பேர் பார்த்திருக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள். வாழ்க்கையில் எல்லோருக்குமே நகைச்சுவை உணர்வு ரொம்ப அவசியம். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கவேண்டும். விலங்குக்கும் நமக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இதுதானே! ஃபாரின்காரன் மாதிரி, எதிரில் யாரைப் பார்த்தாலும் உடனே ஒரு 'ஹாய்' சொல்லிவிட வேண்டும். இதுதான் நல்ல பண்பாடு!''

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

``வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம்?''

``1996-ல் கட்சி நிகழ்ச்சிக்காக பழவேற்காடு போயிருந்தேன். கூட்டத்துக்கு நிறைய நேரமிருந்ததால், கட்டுமரத்தில் கடலுக்குள் போய் நீந்திக் குளித்துவிட்டுச் சோர்ந்துபோய் கரை திரும்பினோம். கரைக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே கட்டுமரத்திலிருந்து கடலுக்குள் குதித்து நீந்தி கரையேறுவதாக ஏற்பாடு. நானும் குதித்துவிட்டேன். ஏற்கெனவே சோர்ந்து போயிருந்ததால், என்னால் நீந்த முடியவில்லை. ஒருகட்டத்தில், `சரி நம்ம வாழ்க்கைக்கு எண்ட் கார்டு இதுதான்' என்று மன உறுதி இழந்துவிட்ட நேரத்தில், மிகப்பெரிய அலை ஒன்று என்னை வாரிச்சுருட்டி, உருட்டிக் கொண்டுவந்து கரையில் வீசியெறிந்துவிட்டுச் சென்றது. மரணத்தைத் தொட்டுவிட்டு வந்த சம்பவம் இது.''

துரைமுருகன்
துரைமுருகன்

இந்தக் கட்டுரையின் சுவாரஸ்யமான தொடர்ச்சியை ஆனந்த விகடனில் படிக்க... இங்கே க்ளிக் செய்யவும்..!