Published:Updated:

`கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது; இங்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது!’ - ஜி.ராமகிருஷ்ணன்

ஜி.ராமகிருஷ்ணன்
ஜி.ராமகிருஷ்ணன்

``கடந்த ஓராண்டில் மட்டும் 285 ரூபாய் வரை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது” - ஜி.ராமகிருஷ்ணன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்திருக்கும் நிலையிலும்கூட, நம் நாட்டில் மத்திய அரசு, பெட்ரோல் விலையை உயர்த்திக்கொண்டேயிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் செயலாளரும், தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய ஜி.ராமகிருஷ்ணன், மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்துப் பேசினார். ஏழை, எளிய, நடுத்தர மக்களின், விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய வகையில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஜி.ராமகிருஷ்ணன்
ஜி.ராமகிருஷ்ணன்

தொடர்ந்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ``சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதனால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நமது நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. இன்னும்கூட விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசு, தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டேயிருப்பது மக்கள் விரோதச் செயல். மத்திய அரசு, ஏழை எளிய மக்களின் நலனைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே செயல்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 900 ரூபாயைத் தொட்டுவிட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் 285 ரூபாய் வரை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது.

பெட்ரோல் ரூ.100, காஸ் சிலிண்டர் ரூ.1000-ஐ நோக்கி -சாமானியர்கள்மீது மத்திய அரசுக்குக் கவலையே இல்லையா?

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துவருகிறது’’ எனத் தெரிவித்த ஜி.ராமகிருஷ்ணன், மேலும் பேசும்போது, ``விவசாயிகளைப் பல வகைகளிலும் பாதிக்கக்கூடிய வகையில் மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் 10 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு மறுத்துவருகிறது. மத்திய ஆட்சியாளர்களுக்குக் கொஞ்சம்கூட ஈவு, இரக்கம் இல்லை. விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த இப்போதாவது முன்வர வேண்டும். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு