Published:Updated:

`காசு வாங்கிட்ட!' -அமைச்சர் முன்னிலையில் அதிகாரியை ஒருமையில் திட்டிய கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ

புதுக்கோட்டை அரசு விழா
புதுக்கோட்டை அரசு விழா

புதுக்கோட்டை அரசு விழாவில் அதிகாரி ஒருவரை கந்தவர்கோட்டை எம்.எல்.ஏ ஆறுமுகம் வசைபாடியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரம் கூட்டுறவு பண்டக சாலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி, வீட்டுவசதி வாரியத்தலைவர் வைரமுத்து, கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ ஆறுமுகம் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

குன்றாண்டார் கோயில் ஒன்றியக்குழு 3-வது வார்டில் தி.மு.க வெற்றி பெற்றும் வெற்றியை அறிவிக்கக் கூடாது என்று கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ ஆறுமுகம் தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்த குடிமைப்பொருள் அதிகாரி அக்பர் அலியிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரியோ தி.மு.க-வுக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கிவிட்டார். இந்த நிலையில்தான், பொங்கல் விழாவில் எம்.எல்.ஏ உட்பட அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

`யாருக்காகவும் என் புரோகிராமை மாத்த முடியாது!'- எம்.எல்.ஏ பேச்சால் சீறிய அமைச்சர் விஜயபாஸ்கர்

பொங்கல் விழா மேடையில் இருந்த கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ ஆறுமுகம், அங்கு இருந்த மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரி அக்பர் அலியை, ஒருமையில் பேசியதுடன், `தி.மு.க-வினரிடம் 5 லட்ச ரூபாய் காசு வாங்கிக்கிட்டு வெற்றியை அறிவிச்சிருக்க' என்று கூறி துரத்தி அடித்துள்ளார். அங்கிருந்த நகரச்செயலாளர் பாஸ்கரும் அதிகாரியை வசைபாடியுள்ளார். இதனால், மன உளைச்சல் அடைந்த அக்பர் அலி மேடையில் இருந்து இறங்கிச் சென்றார்.

விழா மேடையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இருந்தும் எதையும் கண்டுகொள்ளவில்லை. எம்.எல்.ஏ அரசு அதிகாரியைக் கண்டபடி வசைபாடிய செயல் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது.

குன்றாண்டார் கோயில் ஒன்றியக்குழு 3-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட செல்வம் சுமார் 1,300 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, அங்கு தி.மு.க-வின் வெற்றியை அறிவிக்கக் கூடாது என்று கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ ஆறுமுகம் தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்த புதுக்கோட்டை குடிமைப்பொருள் அதிகாரி அக்பர் அலியை நிர்பந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை அரசு விழா
புதுக்கோட்டை அரசு விழா

வெற்றியை தாமதப்படுத்தி உள்ளார். ஆனாலும் வெற்றியை மாற்றி அறிவிக்க முடியவில்லை. இரவு 10 மணிக்கு வெற்றி பெற்ற நிலையில் தி.மு.க வேட்பாளருக்கு மறுநாள் காலையில்தான் சான்றிதழ் வழங்கியுள்ளனர். அரசு அதிகாரி தங்கள் பேச்சைக் கேட்காமல் செயல்பட்டதால்தான் வசவு வாங்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.

இதுபற்றி அக்பர் அலி, ``தேர்தல் தொடர்பான கருத்து வேறுபாடு தான். அமைச்சரிடம் இதுபற்றிய விளக்கம் கொடுத்துவிட்டேன்" என்பதோடு முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு