Published:Updated:

கான்ட்ராக்டை இழந்த தோனி... பின்னணியில் பா.ஜ.க? - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

தோனி கான்ட்ராக்ட் ரத்து செய்யப்பட ஜெய் ஷா காரணமா?
தோனி கான்ட்ராக்ட் ரத்து செய்யப்பட ஜெய் ஷா காரணமா?

இந்திய அணியின் `ஏ' கிரேடு கான்ட்ராக்ட்டை தோனி இழந்ததற்கு பாரதிய ஜனதா கட்சியே காரணமென்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். அதற்குப் பிறகு, சர்வதேச போட்டிகளில், இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வேண்டுமென்பது அவரின் விருப்பமாக இருந்தது. இந்திய அணியில் தோனி 'ஏ' கிரேடு வீரர் ஆவார். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ. 5 கோடி வரை அவர் ஊதியமாகப் பெற்றுவந்தார்.

தோனி
தோனி

இந்த நிலையில், சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்திய அணியின் 27 ஒப்பந்த வீரர்களின் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால், அவரின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தோனியின் சாதனைகளைப் பட்டியலிட்டு, ட்விட்டரில் அவர்கள் கொந்தளித்துவருகின்றனர். தோனியின் `ஏ' கிரேடு கான்ட்ராக்ட் ரத்து செய்யப்பட்டிருப்பதால், அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ள டி-20 உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணியில் அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது.

தங்களுக்கு ஒத்துழைக்க மறுத்த தோனிக்கு பா.ஜ.க தந்த பரிசுதான் பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து.
கௌரவ் பாந்தி

தோனியின் கான்ட்ராக்ட் ரத்துசெய்யப்பட பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், காங்கிரஸ் கட்சி வேறு ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. தோனியின் ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட பாரதிய ஜனதா கட்சியே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் சோஷியல் மீடியா பிரிவின் ஒருங்கிணைப்பாளர் கௌரவ் பாந்தி குற்றம் சாட்டியுள்ளார். இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் , ``சமீபத்தில் நடந்த ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து போட்டியிட தோனி கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால், தான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடப்போவதாகக் கூறி, பாரதிய ஜனதா கட்சிக்கு ஒத்துழைக்க அவர் மறுத்தார்.

கௌரவ் பாந்தி
கௌரவ் பாந்தி

இல்லையென்றால், தேர்தல் பிரசாரத்தில் தங்கள் கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்ய வேண்டுமென்று பாரதிய ஜனதா சார்பில் தோனிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையும் ஏற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். இதன் விளைவாக, தற்போது தோனியின் ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. தற்போது பிசிசிஐ தலைமைப் பதவியில் இருப்பது யார்? சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி எப்போது ஓய்வுபெற்றார்... எதனால் ஓய்வுபெற்றார் என்பதை யோசித்துப்பாருங்கள். பாரதிய ஜனதா கிரிக்கெட் விளையாட்டுக்குள் அரசியலை புகுத்துவதை அறிந்துகொள்ள முடியும். இந்தியாவுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத்தந்த கேப்டனுக்குக் கொடுக்கும் மரியாதை இதுவா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

``தி.மு.க-வை இயக்குகிறதா பி.ஜே.பி?” - காங்கிரஸ் கணிப்பு... கண்டுகொள்ளாத தி.மு.க!

சமீபத்தில், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்து, அங்கு ஆட்சியை இழந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஹேமந்த் சோரன், தற்போது அந்த மாநில முதல்வராக உள்ளார். பிசிசிஐ தலைவராக கங்குலி இருந்தாலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா-வின் மகன் ஜெய் ஷாதான் செயலாளர். ஜெய் ஷாவை மீறி கங்குலியால் நிச்சயம் செயல்பட முடியாது. இதனால், கௌரவ் பாந்தியின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமோ என்கிற கேள்வி தோனி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஜெய் ஷா
ஜெய் ஷா

முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியில் தோனி சேரப்போவதாகவும் அவருக்கு ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவி தரப்போவதாகவும் வதந்தி பரவியது. ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிதான் தோனியின் சொந்த ஊர். தற்போது 38 வயதான தோனி தலைமையிலான இந்திய அணிதான் 2011- ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் கோப்பையை வென்றது. 2007 -ம் ஆண்டு நடந்த முதல் டி-20 உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணி கோப்பையை வென்றதும் தோனி தலைமையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு