அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

அக்கா... அக்கா எனச் சொல்லிவிட்டு கொச்சையாகப் பேசுகிறார் அண்ணாமலை!

காயத்ரி ரகுராம்
பிரீமியம் ஸ்டோரி
News
காயத்ரி ரகுராம்

- வன்மத்தோடு நடந்துகொள்கிறார் அண்ணாமலை! - கடுகடுக்கும் காயத்ரி ரகுராம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகும், “என்ன நடந்தாலும் நான் பா.ஜ.க-வில்தான் இருப்பேன்” என்று சொன்ன காயத்ரி ரகுராம், திடீரென அந்தக் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். இடையில், துபாயில் தி.மு.க-வினரையும், சென்னையில் சபரீசனையும் சந்தித்தார் என்பது தொடங்கி கட்சி மாறப்போகிறார் என்பதுவரை பல்வேறு சர்ச்சைகள் கிளப்பப்பட்டன. இந்தப் பின்னணியில் காயத்ரி ரகுராமை பேட்டி கண்டேன். கோபமும் சோகமுமாக வந்த பதில்கள் இங்கே...

“கட்சியிலிருந்து விலகும் முடிவை ஏன் எடுத்தீர்கள்... அதை ஏன் அதிகாலை 2 மணிக்கு அறிவித்தீர்கள்?”

“வருத்தம், அழுத்தம், மனவேதனைதான் காரணம். ‘உனக்கு பா.ஜ.க-வில் எதிர்காலமே இல்லை, வெளியில் வந்துவிடு’ எனப் பலரும் சொன்னபோதுகூட, எதையும் பொருட்படுத்தாமல் பா.ஜ.க-மீது பிடிப்போடுதான் இருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் என்மீது தாக்குதல் நடத்தப்பட்டதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்த காலத்தில்கூட தைரியமாக, சுதந்திரமாகச் செயல்பட்டேன். ஆனால், இப்போது சொந்தக்கட்சிக்காரர்களிடமே பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கிவிட்டார் அண்ணாமலை. வேறு வழியில்லாமல்தான் கட்சியிலிருந்து விலக முடிவெடுத்து, உடனடியாக அதை அறிவித்தும்விட்டேன். நேரமெல்லாம் பார்க்கவில்லை.”

“துபாயில் என்ன நடந்தது?”

“பா.ஜ.க சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவர் என்ற முறையில் நிகழ்ச்சி தொடங்கும் நான்கு நாள்களுக்கு முன்பே துபாய்க்குச் சென்றுவிட்டேன். துபாயில் என் சந்திப்பு உள்ளிட்ட அனைத்துப் படங்களையும் ட்விட்டரில் பதிவிட்டேன். ஆனால், நான் துபாயில் தி.மு.க-வினருடன் இருந்தேன் என அவதூறு பரப்புகிறார் அண்ணாமலை. அதுவும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு அதைச் சொல்கிறார். மேலும், என்னை விசாரிக்கச் சொன்னதாகக் கடிதம் ஒன்றையும் காட்டுகிறார். அது இத்தனை நாளாக எங்கிருந்தது என்றே தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து என்னை அழைத்துப் பேசக்கூட இல்லை. நான் கேட்டதற்கும் பதில் இல்லை. ‘அக்கா... அக்கா...’ என என்னை வாய் நிறைய அழைத்துவிட்டு இப்போது கொச்சையாகப் பேசுகிறார். அவரது சொந்த அக்காவைப் பற்றி இப்படிப் பேசுவாரா?”

“சபரீசனையும் சந்தித்ததாகச் சொல்கிறார்களே?”

“கடந்த ஆண்டு, மே 30-ம் தேதி நடந்த சந்திப்பு அது. சபரீசனை நான் நேரில் சந்தித்ததைவைத்து, அவருடன் நான் தனியாக இருந்தேன் எனக் கேவலமாகப் பேசுகிறார்கள். இது பற்றி அப்போதெல்லாம் கேட்காமல், கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு, வேண்டுமென்றே வன்மத்தோடு நடந்துகொள்கிறார் அண்ணாமலை.”

அக்கா... அக்கா எனச் சொல்லிவிட்டு கொச்சையாகப் பேசுகிறார் அண்ணாமலை!

“நீங்களும் கட்சிக்குள் இருக்கும்வரை எதுவும் பேசாமல், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகுதானே குற்றச்சாட்டுகளை வைக்கிறீர்கள்?”

“அண்ணாமலை புதிதாகப் பொறுப்பேற்றிருக்கிறார். அவரிடம் கொண்டு செல்லப்படும் புகார்களை விசாரிக்க, குழுவெல்லாம் அமைக்கிறார். எனவே, சரியான பாதையில் கொண்டு செல்வார் என அப்போது நினைத்தேன். ஆனால், அவரது நிஜ குணத்தை சமீபத்தில்தான் புரிந்துகொண்டேன். நடப்பதையெல்லாம் நேரில் சொல்லலாம் என்றால், அவர் என்னைச் சந்திக்கவே இல்லை. சந்திக்கவும் பயப்படுகிறார்.”

“அண்ணாமலை கேட்கவில்லையென்றால் இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் புகார் தெரிவித்திருக்கலாமே?”

“இங்கே யாரிடமும் பேசவில்லை. பேசப் பிடிக்கவும் இல்லை. கேசவ விநாயகம் மட்டும் பொறுமையாக இருக்கச் சொன்னார். ஆனால், என்மீதான தாக்குதல் நிற்கவில்லை.”

“தமிழிசை, எல்.முருகன், வானதி சீனிவாசன் போன்றவர்கள்கூட எதுவும் கேட்கவில்லையா?”

“இல்லை. வருத்தப்பட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். வானதிக்குச் செய்தியாக அனுப்பினேன். ஆனால், எந்த பதிலும் வரவில்லை. என்னிடம் பேசினால் ஏதும் பிரச்னை வந்துவிடும் என நினைத்திருப்பார்கள். கலா மாஸ்டரும், குஷ்புவும் பேசினார்கள்.”

“அண்ணாமலை வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ந்திருக்கிறது என்கிறார்களே?”

“மோடியின் சிறப்பான செயல்பாடுகள்தான் பா.ஜ.க-வின் அடையாளம். ‘தாமரை மலர்ந்தே தீரும்’ என்று தமிழிசையும், வேல் யாத்திரை என எல்.முருகனும் உழைத்த பலனை இன்று அண்ணாமலை அனுபவித்துக்கொண்டு, எல்லா வளர்ச்சியும் தன்னால்தான் என வாய் கூசாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்.”

“தமிழ்நாடு பா.ஜ.க-வில் இருக்கும் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

“பாதுகாப்பாக இருங்கள், பயப்படாதீர்கள். தனிப்பட்ட முறையில் தாக்குதல் இருந்தால் திருப்பி அடியுங்கள். அப்போதுதான் பயப்படுவார்கள்.”

“அண்ணாமலையின் ‘வார் ரூம்’ நிர்வாகிகளுக்குச் சொல்ல விரும்புவது?”

“சொந்தக்கட்சி நிர்வாகிகளையே ட்ரோல் செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது... என்னை ஏன் தனிப்பட்ட முறையில் டார்கெட் செய்கிறீர்கள் எனத் தெரியவில்லை. அண்ணாமலைக்காக மட்டும் களமாடாதீர்கள். பா.ஜ.க-வை வளர்ப்பது, மோடியின் கொள்கை, திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே உங்களின் வேலையாக இருக்க வேண்டும். இதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.”

அண்ணாமலைக்கு?”

“(கேள்வியை முடிக்கும் முன்பே) மன்னிப்புக் கேளுங்கள். என்னிடம் மட்டுமல்ல, உங்களால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேளுங்கள். மன்னிப்புக் கேட்பதால் குறைந்துவிட மாட்டீர்கள். மன்னிப்புக் கேட்டு எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள்.”

“அடுத்து என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?”

“(மேலே பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி) தி.மு.க அல்லது வி.சி.க-வில் சேரப்போவதாகச் சொல்கிறார்கள். அப்படி எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணமில்லை. என்னுடைய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறேன். ஏற்றுக்கொண்டாலும், இல்லையென்றாலும் நான் பா.ஜ.க தொண்டராகத்தான் தொடர்வேன். எப்போதும் பா.ஜ.க-வுக்குத்தான் ஓட்டுப் போடுவேன்.”