Published:Updated:

அண்ணாமலைக்கு எதிராக களத்தில் காயத்ரி ரகுராம்... பின்னணி என்ன?!

அண்ணாமலை - காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம் ஏகத்துக்கு சவால் விட்டாலும் பா.ஜ.க தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. இதேபோல, காயத்ரி ரகுராமுக்குப் பின்னால் தி.மு.கவின் நிர்வாகிகள் இருப்பதாகவும் பா.ஜ.க சந்தேகம் தெரிவித்துள்ளது.

அண்ணாமலைக்கு எதிராக களத்தில் காயத்ரி ரகுராம்... பின்னணி என்ன?!

காயத்ரி ரகுராம் ஏகத்துக்கு சவால் விட்டாலும் பா.ஜ.க தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. இதேபோல, காயத்ரி ரகுராமுக்குப் பின்னால் தி.மு.கவின் நிர்வாகிகள் இருப்பதாகவும் பா.ஜ.க சந்தேகம் தெரிவித்துள்ளது.

Published:Updated:
அண்ணாமலை - காயத்ரி ரகுராம்

தமிழக பா.ஜ.க-வில் சூர்யா சிவா - டெய்சி இடையிலான ஆடியோ விவகாரம் பூதாகரமாகிய போது ட்விட்டரில் கொதித்தெழுந்தவர் காயத்ரி ரகுராம். அக்கட்சியின் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம், மாநிலத் தலைமைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதனால், அவரை 6 மாத காலத்திற்குக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து வைப்பதாக அண்ணாமலை அறிவித்தார்.

காயத்ரி ரகுராம், டெய்சி, சூர்யா சிவா
காயத்ரி ரகுராம், டெய்சி, சூர்யா சிவா

இதனால், அதிருப்தியின் உச்சிக்கே சென்ற காயத்ரி, "அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.கவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை விரட்டுவது தான் அண்ணாமலையின் குறிக்கோள். பெண்களுக்குச் சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுகிறேன். பா.ஜ.க-வின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களைக் கட்சியிலிருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம் " என்று தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

அவர் கட்சியிலிருந்து விலகிய பின்னர் தி.மு.கவில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால், அவர் அதை உறுதிபடத் தெரிவிக்கவில்லை. மாறாக அண்ணாமலைக்கு எதிராகத் தொடர்ந்து ட்விட்டரில் அரசியல் செய்து வருகிறார்.

இந்தச்சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, "கட்சியை விட்டுச் சென்றவர்கள் எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்" என்ற ஒற்றை வார்த்தையுடன் அண்ணாமலை முடித்துக்கொண்டார். ஆனால், காயத்ரி ரகுராம், தொடர்ச்சியாக அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து வருகிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

சமீபத்தில் காயத்ரி ரகுராம் வெளியிட்ட காட்டமான அறிக்கையில், ``என் 8 வருட சேவை, கடின உழைப்பை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி. என்னால் திரும்ப கொண்டுவர முடியாத இளமைக் காலத்தைப் பறித்ததற்கு நன்றி. என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பறித்ததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பா.ஜ.கவுக்கு நன்றி. நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களைப் பார்த்துக்கொள்வார். விரைவில் களத்தில் சந்திப்போம்" என்றார்.

இதைத்தொடர்ந்து கடந்த 15ம் தேதி அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். நான் உங்களை எதிர்த்து நிற்பேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? இப்போது அண்ணாமலையின் வார்ரூம் என்னை திமுக ஸ்லீப்பர் செல் என்று அழைக்க முடியவில்லை.

டிவிட்டரில் சவால்
டிவிட்டரில் சவால்

அதனால் இப்போது அவர்கள் என்னைக் கெட்ட வார்த்தைகள் சொல்லியும், என்னைப் பைத்தியம் என்றும், என் பெண்மையை அவமானப்படுத்துகிறார்கள். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம்" என்று ஏகத்துக்கும் சவால் விடுத்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்தார். இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், காயத்ரி ரகுராம் போட்டியிட இருப்பதாக தகவல்கள் பறக்கிறது. அவர் போட்டியிடும் பட்சத்தில் அண்ணாமலையை அதே தொகுதியில் போட்டியிடவும் சவால் விடுத்துள்ளார். காயத்ரி ரகுராம் என்னதான் ஏகத்துக்கும் சவால் விட்டாலும் பா.ஜ.க தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. இதேபோல, காயத்ரி ரகுராமுக்குப் பின்னால் தி.மு.கவின் நிர்வாகிகள் இருப்பதாகவும் பா.ஜ.க சந்தேகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

இதுகுறித்து பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், "பா.ஜ.கவை பொறுத்தவரை எங்கள் கட்சியிலிருந்து சென்றவர்கள் குறித்து விமர்சனம் செய்ய மாட்டோம். காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து வெளியே சென்றவர். அண்ணாமலையை விமர்சிக்கும் நபர்களில் பத்தோடு பதினொறாவது ஆளாகத் தான் அவர் இருக்கிறாரே தவிர. இதில் வேறொன்றுமில்லை. அதுபோக அவர் தி.மு.கவில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. அதனாலேயே அவர் இதுபோல பேசலாம். யாராவது பின்னணியில் இருந்தால் தானே இப்படிப் பேச முடியும். அதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்" என்றனர்.

சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் காயத்ரி ரகுராம் தி.மு.க-வில் இணைய இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பொன்முடி, "திராவிட கொள்கை, பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் எங்கள் கட்சியில் தலைவர் ஸ்டாலின் சேர்த்துக்கொள்வார்" எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.