Published:Updated:

``அண்ணாமலை காரில் யார் ஏறுகிறார் என நான் கேட்டால்..?” - காயத்ரி ரகுராம் எக்ஸ்க்ளூசிவ்

காயத்ரி ரகுராம்

பா.ஜ.க-விலிருந்து விலகிய, நடிகை காயத்ரி ரகுராம் நேர்காணல்

``அண்ணாமலை காரில் யார் ஏறுகிறார் என நான் கேட்டால்..?” - காயத்ரி ரகுராம் எக்ஸ்க்ளூசிவ்

பா.ஜ.க-விலிருந்து விலகிய, நடிகை காயத்ரி ரகுராம் நேர்காணல்

Published:Updated:
காயத்ரி ரகுராம்

பா.ஜ.க-விலிருந்து திடீரென விலகியிருக்கிறார் நடிகை காயத்ரி ரகுராம். அண்ணாமலை மீது தொடர்ந்து புகார்களை அடுக்கியவர் மீதும் சில புகார்கள் எழுந்தன. அண்ணாமலை குறித்தும், காயத்ரி ரகுராம் மீது வைக்கப்பட்ட புகார்கள் குறித்தும் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். கோபமும் துக்கமும் கலந்து அவரிடமிருந்து வந்தன பதில்கள்...

``எங்கிருந்தோ வந்த அண்ணாமலை திடீரெனத் தலைவராகிவிட்டதால் ஏற்பட்ட பொறாமையா?”

``சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஆள் உயர மாலையைத் தயார்செய்து அண்ணாமலைக்கு அணிவிக்க முயன்றோம். ஆனால், உள்ளே இருந்த அரசியல் காரணங்களால் அதை அணிவிக்க முடியவில்லை. அந்த மாலையைக் கீழே தூக்கிப்போட்டு என்னையும் கீழே தள்ளிவிட்டார்கள். தலைவருக்கு மரியாதை செய்ய முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாகிவிட்டது. அப்போது எனக்கு போன் செய்து விசாரித்தவர் ‘தவறு செய்தால் திருப்பிக் கேளுங்கள், அடியுங்கள்’ எனச் சொன்னார். இப்போது அவரே தவறு செய்கிறார். திருப்பிக் கேட்டால் ‘ஏன் என் மானத்தை வாங்குகிறீர்கள்?’ எனச் சொல்கிறார்.”

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

``அண்ணாமலையுடன் உங்களுக்கு ஈகோவா?”

``எனக்கு எந்த ஈகோவும் இல்லை. ஈகோ இருந்திருந்தால், `ஏன் இப்படிப் பேசினீர்கள்’ என நான் கேட்டிருக்க மாட்டேன். அண்ணாமலையின் சுயரூபத்தைக் காட்ட வேண்டும். அவ்வளவுதான்.”

``அண்ணாமலையை நீங்கள் பெர்ஷனல் அட்டாக் செய்கிறீர்களா?”

“அண்ணாமலை யார் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதால்தான் சொன்னேன். இது பெர்சனல் அட்டாக் இல்லை. நடந்ததைத்தான் சொல்கிறேன். தி.மு.க ஆளுடன் இருந்தேன். வீடியோ இருக்கிறது எனச் சொன்னதையெல்லாம் நிரூபிக்கட்டும். நான் இல்லாதபோது கிசு, கிசு பேசுகிறார். அண்ணாமலை அமெரிக்கா போனாரே, கூட்டத்துக்குப் போகும் அண்ணாமலை வண்டியில் யார் வந்தார்கள் என நான் கேள்வி கேட்கலாமா? அண்ணாமலையின் குடும்பப் பெண்கள் மட்டும் பாதுகாப்பாக, மரியாதையாக இருக்க வேண்டும். ஆனால், மற்றவர்கள் எப்படியும் போகலாம் என்பது என்ன மனநிலை?”

“அண்ணாமலையின் வார் ரூமில் யாரெல்லாம் இருக்கிறார்கள், எங்கிருக்கிறது அது?”

``அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை. கொங்கு, அமெரிக்கா, பெங்களூரு. அண்ணாநகர், புதிதாக அண்ணாசாலையில் ஒரு கூட்டம் எனப் பல இடங்களில் அது இருக்கின்றன.”

அண்ணாமலை | காயத்ரி ரகுராம் | சூர்யா சிவா
அண்ணாமலை | காயத்ரி ரகுராம் | சூர்யா சிவா

``ஹனி ட்ராப்... ஹனி ட்ராப் என்கிறார்களே, என்ன நடக்கிறது உண்மையில்?”

“மதன் ரவிச்சந்திரன்தான் அதைத் தொடங்கிவைத்தார். தன்னிடம் மொத்தம் 15 வீடியோ இருந்ததாகச் சொன்னார். அதில் ஒன்று வெளியானது. அதை வெளியிடச் சொன்னதே அண்ணாமலைதான் என்ற ஆடியோவும் வெளியானது. ஆனால், அந்த ஆடியோ குறித்தும் வீடியோ குறித்துமல்ல எது பற்றியும் அண்ணமலை பேசவில்லை. அதன் பிறகுதான் சில செய்தித்தாள்கள், வார இதழ்களில் ஹனி ட்ராப் குறித்து விரிவாக எழுதியிருந்தார்கள். அது குறித்து அண்ணாமலை பேசவில்லை. அதன் பிறகு கொஞ்சநாள் கழித்து டெய்சி சரண் பிரச்னை வெளியானது. அதற்காக நாம் குரல் கொடுத்தோம். அதன்பிறகு என்னைக் கேலி செய்தார்கள். அது குறித்தும் எந்த விசாரணையும் செய்யவில்லை. என்னை சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. இப்படி இன்னும் பல தலைவர்களின் ஆடியோ, வீடியோ இருக்கிறது என்கிறார்கள். இதில் உண்மையில் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான்.”

``ஏன் காயத்ரி ரகுராம் தொடர்ந்து தாக்கப்படுவதாக நினைக்கிறீர்கள்?”

``என்மீது என்ன வன்மம் என்றே தெரியவில்லை. எட்டு ஆண்டுகள், வலிமையாக, அரசியல் அடையாளத்தோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். அண்ணாமலைக்குச் சீனியர்களைப் பார்த்தால் பிடிக்காது. அதனால் என்னைப் பிடிக்காமலேயே போயிருக்கலாம். அலிஷா, டெய்சி ஆகியோர் வந்து இரண்டு மூன்று ஆண்டுகள்தான் ஆகின்றன. அதனால், அவருக்கு நண்பர்களாக இருந்திருக்கலாம். எனவே, என்னைக் காலிசெய்ய நினைத்தார். காசி தமிழ்ச்சங்கம் பிரச்னையை எழுப்பினார்கள், சூர்யா விவகாரம் என்றார்கள், சபரீசன் என்றார்கள், இப்போது துபாய் என்கிறார்கள். இப்படித் தொடர்ச்சியாக அவதூறுகளைப் பரப்புகிறார்கள். இதெல்லாம் ஏன் என்று அண்ணாமலையிடம்தான் கேட்க வேண்டும்.”

அண்ணாமலை
அண்ணாமலை

``புகார்களை ஏன் நேரடியாகச் சொல்லாமல், சமூக வலைதளங்களில் வைக்கிறீர்கள்?”

``நான் போன் செய்தேன். யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை. டெல்லிக்கு மெயிலில் அப்பாயின்ட்மென்ட் கேட்டேன். ஆனாலும், எனக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை. கேசவ விநாயகம் பொறுமையாக இருக்கச் சொன்னார். ஆனால், என்னைத் திருப்பி திருப்பி ட்ரோல் செய்துகொண்டே இருந்தால் எப்படிப் பொறுக்க முடியும். பா.ஜ.க-வில் இருக்கும் ஒரு பெண் தலைவர்கூட கேள்வி கேட்கவில்லை. எனவே, எனக்கான இடமாக சமூக வலைதளத்தைப் பயன்படுத்திக்கொண்டேன் அதில் என்ன தவறு?”

``உதயநிதிக்கு, சுந்தரவள்ளிக்கு நீங்கள் நன்றி சொன்னதும் சர்ச்சையானதே?”

“ஆம், எதிரியாக இருந்தாலும் வாழ்த்துவதுதான் ஆரோக்கியமானது. அமித் ஷா கனிமொழிக்கு வாழ்த்துச் சொல்லியிருந்தார். அதைத் தவறு என்பார்களா? யாரையும் வெறுக்க நான் அரசியலுக்கு வரவில்லை. ஒருவருடன் போட்டியிட்டு வெற்றி பெறத்தான் வந்தேன். நான் வாழ்த்துச் சொல்லவில்லையென்றால் உதயநிதி அமைச்சராகாமல் இருப்பாரா என்ன? ஆனால், அதைவைத்து தி.மு.க ஸ்லீப்பர் செல் என ட்ரோல் செய்தார்கள். விஜய் வசந்துக்கு வாழ்த்துச் சொன்னால் நான் காங்கிரஸா, தமிழிசை வீட்டில் காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்கள். அப்போது அவரும் காங்கிரஸ் ஆகிவிடுவாரா? மாற்றுக் கருத்துடையவர் என்றாலும் எனக்கு ஆதரவாகப் பேசினார். அதனால், சுந்தரவள்ளிக்கு நன்றி சொன்னேன். உதயநிதிக்கு வாழ்த்துச் சொன்னேன்.”

அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதி

``பிரச்னை எழும்போதே பேசியிருந்தால் இவ்வளவு சிக்கல் எழுந்திருக்காது இல்லையா?”

“பெண்கள் வெளியில் இப்படி வந்து தைரியமாகப் புகார் தருவதற்கு வாய்ப்பே தரப்படுவதில்லை. எனக்கே இப்படியென்றால், அடிமட்டத்திலிருக்கும் பெண்களுக்கு எப்படிப் பேச வாய்ப்பு கொடுக்கப்படும். இதனால் இப்போது புகார் கொடுப்பவர்கள் குறைந்துவிட்டார்கள்.”

``அரசியல் என்றால் விமர்சனங்கள் எல்லாம் இருக்கத்தானே செய்யும்?”

``அது எதிர்க்கட்சியிலிருந்து வந்தால் எடுத்துக்கொள்வேன். என்னைப் பலரும் கேவலமாகவெல்லாம் பேசியிருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. ஆனால், சொந்தக் கட்சியிலிருந்து வன்மத்தைக் கக்கி, பழியைச் சுமத்தி, தி.மு.க ஸ்லீப்பர் செல் எனச் சொல்வதெல்லாம் வலிக்கிறது. சைதை சாதிக் பேசும்போது கோவம் வந்தது. அண்ணாமலை சொன்னபோது அழுகைதான் வந்தது.”

காயத்ரி ரகுராம், அலிஷா அப்துல்லா
காயத்ரி ரகுராம், அலிஷா அப்துல்லா

``கட்சியிலிருந்து விலகி, வேறு கட்சிக்குச் செல்லப் போவதாகச் சொன்னார்களே?”

“கட்சிக்காகத்தான் இதுவரை உழைத்திருக்கிறேன். கடைசிவரை பா.ஜ.க தொண்டராகவே இருப்பேன். இன்னும் முறைப்படி விலகல் கடிதம் கொடுக்கவில்லை. அதை ஏற்றுக்கொள்வார்களா, இல்லை போய்த் தொலையட்டும் என விடுவார்களா எனத் தெரியாது. நான் மாற்றுக்கட்சியில் சேர்வேன் எனச் சொல்லவில்லை. நான் சாகும்வரை பா.ஜ.க-வில்தான் இருப்பேன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.”