Published:Updated:

தூத்துக்குடி: ரிஸ்க் எடுக்க விரும்பாத தலைமை! வெற்றியால் பதில் சொன்ன கீதா ஜீவன்!#TNelections2021

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

தந்தையைப் போன்று அதிரடி அரசியலுக்குப் பெயர்போனவர் என்பதாலும், தற்போதைய சூழலில் புதிதாக வேறு ஒருவரை நிறுத்தி ரிஸ்க் எடுக்க விரும்பாததாலும் கீதா ஜீவனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி திமுக-வில் மாவட்டச் செயலாளராகக் கோலோச்சிய பெரியசாமியின் மகள்தான் கீதா ஜீவன். தந்தை பெரியசாமியைப்போல் மாவட்ட திமுக-விலும் பொறுப்பிலுள்ள கீதா ஜீவனுக்கு, வழக்கம்போல் இந்த முறையும் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது திமுக கட்சித் தலைமை. 2006-11 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் பணியாற்றியவர். 2016-ல் நடந்த தேர்தலில் போட்டியிட்ட கீதா ஜீவன் 88,045 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்லப்பாண்டியன் 67,137 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் இதுவரை 17 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அவற்றில் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் தலா ஆறு முறையும், காங்கிரஸ் ஐந்து முறையும் வெற்றிபெற்றுள்ளது. இந்த முறை தி.மு.க வேட்பாளர் கீதா ஜீவன், த.மா.கா கட்சியின் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், தே.மு.தி.க வேட்பாளர் சந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேல்ராஜ், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் சுந்தர் உள்ளிட்ட 26 பேரை எதிர்கொண்டார்.

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

'தூத்துக்குடி திமுக-வின் வடக்கு மாவட்டச் செயலாளரான கீதா ஜீவன், கட்சியின் சீனியர் நிர்வாகிகளைக் கண்டுகொள்வதில்லை. தலைமைக்குப் பலமுறை சொல்லியும் எந்தப் பலனும் இல்லை. அவரது தொகுதிக்கு மட்டும்தான் முக்கியத்துவம் தருகிறார். மற்ற இடங்களில் அவரது நடவடிக்கைகள் சிறப்பாக இல்லை' என்ற புகார்கள் கட்சித் தலைமை வரை சென்றன. ஆனாலும், தந்தையைப் போன்று அதிரடி அரசியலுக்குப் பெயர்போனவர் என்பதாலும், தற்போதைய சூழலில் புதிதாக வேறு ஒருவரை நிறுத்தி ரிஸ்க் எடுக்க விரும்பாததாலும், கீதா ஜீவனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு பக்கபலமாக நின்றது, எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் வலுவாக இல்லாதது போன்றவை, இந்த முறை கீதா ஜீவனுக்கு சாதகமான விஷயங்களாக முன்வைக்கப்பட்டிருந்தன.

துணிச்சலான வேட்பாளராக கருதப்பட்ட கீதா ஜீவன் நேற்று காலை தபால் வாக்குகள் எண்ணப்பட்டபோதே முன்னிலை வகித்தார். தபால் வாக்குகளும், அதன் பிறகு எண்ணப்பட்ட வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் கீதா ஜீவனுக்கே முன்னிலையைக் கொடுத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் வேட்பாளரான தமாக-வின் எஸ்டிஆர் விஜயசீலன் தொடர்ந்து பின்னடைவிலேயே இருந்தார்.அனைத்துச் சுற்று வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், கீதா ஜீவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஜய சீலனைவிட 50,310 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்று சட்ட மன்றம் செல்லவிருப்பதால், கீதா ஜீவன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு