Published:Updated:

`CAA-வுக்கு எதிராக சென்னை ஐஐடி-யின் ஜெர்மன் மாணவர்!’- நாட்டைவிட்டு வெளியேறச் சொன்ன அதிகாரிகள்

ஜெர்மன் மாணவர் - ஜேக்கப் லிண்டெந்தால்
ஜெர்மன் மாணவர் - ஜேக்கப் லிண்டெந்தால் ( facebook )

ஜெர்மனியில் இருந்த ஹிட்லரின் ஆட்சியைக் குறிப்பிடும் வகையில் ``1933 முதல் 1945 வரை; நாங்கள் அங்கே இருந்தோம்” என்கிற வாசகம் அடங்கிய பதாகையை கையிலேந்தியபடி ஜெர்மன் மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளும் மாணவர்களின் போராட்டத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஜெர்மனைச் சேர்ந்த சென்னை ஐ.ஐ.டி மாணவர் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டதுக்காக நாட்டைவிட்டு வெளியேறும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். இச்சம்பவம், மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மன் மாணவர் - ஜேக்கப் லிண்டெந்தால்
ஜெர்மன் மாணவர் - ஜேக்கப் லிண்டெந்தால்

ஜேக்கப் லிண்டெந்தால், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மாணவர். ஐஐடி, சென்னையில் இயற்பியல் துறையில் முதுகலை பயின்று வந்துள்ளார். குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக சென்னை ஐஐடி, வள்ளுவர் கோட்டம் மற்றும் சேப்பாக்கம் ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் இவர் பங்கெடுத்துள்ளார். ஜெர்மனியில் இருந்த ஹிட்லரின் ஆட்சியை குறிப்பிடும் வகையில் ``1933 முதல் 1945 வரை; நாங்கள் அங்கே இருந்தோம்” என்கிற வாசகம் அடங்கிய பதாகையை கையிலேந்தியபடி போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். மற்றோரு பதாகையில் ``Uninformed criminals = criminals” என்றும் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் ஆட்சியை ஹிட்லரின் ஆட்சியுடன் ஒப்பிட்டு போராட்டக்களத்திலும் இருந்துள்ளார் என்று கூறி இந்தியாவில் ஜேக்கப் தங்கிப் படிப்பதற்கான அனுமதியை குடியேற்ற துறையினர் (Immigration Department) ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடந்து தன்னுடய நாட்டுக்கு மாணவர் திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசியுள்ளார் அந்த மாணவர்.

அதில் பேசிய மாணவர், ``பெங்களூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கெடுப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றேன். அப்போது, எனக்கு இதுதொடர்பாக முதல் மெயில் வந்தது. சென்னைக்குத் திரும்பிய பிறகு என்னுடைய ஒருங்கிணைப்பாளர்கள் குடியேற்ற அதிகாரியை உடனே சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவர்களைச் சந்தித்ததும் இங்கு தங்குவது தொடர்பான சில நிர்வாகச் சிக்கல்கள் குறித்து எனக்குத் தெரிவித்தனர். என்னுடைய பொழுதுபோக்கு மற்றும் அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றைப் பற்றி சாதாரணமாக கேட்டனர். குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது குறித்தும் கேள்வி எழுப்பினர்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, ``கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னர், குடியுரிமை விசாவில் இருக்கும் விதிகளை மீறியதற்காக நாட்டைவிட்டு வெளியேறும்படி கூறினர். எழுத்துபூர்வமான கடிதத்தைக் கேட்டதும் பாஸ்போர்ட்டை எனது கையில் கொடுத்து, நீங்கள் செல்லலாம் என்று கூறினர். எழுத்துபூர்வமான கடிதம் விரைவில் உங்களுக்குக் கிடைக்கும் என்றனர். ஆனால், இப்போது வரை எழுதப்பட்ட கடிதம் எனக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும் நான் அவசரமாக ஐஐடி வளாகத்துக்கு வந்து டிக்கெட் பதிவு செய்து கிளம்பியுள்ளேன்” என்றார்.

மேலும், ``நான் ஐ.ஐ.டி வளாகத்தை நேசிக்கிறேன், நான் இந்தியாவை நேசிக்கிறேன், ஆனால், நாட்டில் தற்போது நிலவும் சூழல் கவலை அளிக்கிறது. ஜெர்மனியில், சட்டம் தொடர்பான போராட்டங்களில் பங்கேற்றதற்காக யாரும் வெளியேற்றப்படுவதில்லை" என்றும் கூறியுள்ளார். ஜேக்கப் போராட்டத்தில் பங்கேற்ற சில புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது

இதுகுறித்து ஜேக்கப்பின் நண்பர்கள், ``இந்தியாவில் கருத்து சுதந்தரத்துக்கு இடமில்லாமல் போகிறது. அவர் அமைதியாக மட்டுமே தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்” என்று அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர். சிந்தா பார் என்ற ஐஐடி மாணவ அமைப்பினர் தங்களுடைய முகநூல் பக்கத்தில், ``இந்தியாவில் மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக நடந்த போராட்டத்தில் பங்கெடுத்ததற்காகவும் மனிதநேயம் குறித்த அவரது அக்கறைக்காகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு