Published:Updated:

கெலாட் Vs பைலட்: ஓயாத ராஜஸ்தான் காங்கிரஸ் சண்டை... தீர்த்து வைப்பாரா ராகுல் காந்தி?!

கெலாட் VS பைலட்

கெலாட் VS பைலட்: ராஜஸ்தான் காங்கிரஸ் சண்டை எப்போது முடிவுக்கு வரும்?

கெலாட் Vs பைலட்: ஓயாத ராஜஸ்தான் காங்கிரஸ் சண்டை... தீர்த்து வைப்பாரா ராகுல் காந்தி?!

கெலாட் VS பைலட்: ராஜஸ்தான் காங்கிரஸ் சண்டை எப்போது முடிவுக்கு வரும்?

Published:Updated:
கெலாட் VS பைலட்

சில காலம் அடங்கியிருந்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சண்டைகள், தற்போது மீண்டும் தலை தூக்கியிருக்கின்றன. முதலமைச்சர் அசோக் கெலாட் தரப்புக்கும், காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்திருக்கிறது. ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரைக்காக ராஜஸ்தான் வரவிருக்கும் நிலையில் கட்சிக்குள் மோதல் வெடித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

எப்போது ஆரம்பித்தது மோதல்?

2013 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது காங்கிரஸ். இதையடுத்து, ராஜஸ்தானில் கட்சியை மீட்டெடுக்கும் பணி சச்சின் பைலட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. தீவிரமாக வேலை செய்து, 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை வெற்றிபெறச் செய்தது பைலட் தரப்பு. சீனியர் என்பதால் அசோக் கெலாட் முதல்வராக்கப்பட்டார். பைலட்டுக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. இதனால் அப்செட்டான பைலட் துணை முதல்வராக இருந்துகொண்டே கெலாட்மீது வெளிப்படையாகக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க, கட்சிக்குள் கலகம் மூண்டது.

அசோக் கெலாட், சச்சின் பைலட் - ராஜஸ்தான் காங்கிரஸ்
அசோக் கெலாட், சச்சின் பைலட் - ராஜஸ்தான் காங்கிரஸ்

2020-ம் ஆண்டு இருவருக்கும் இடையிலான பனிப்போர் முற்றியது. 19 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு கிளர்ச்சி செய்தார் பைலட். `பா.ஜ.க-வுடன் கைகோத்துக்கொண்டு ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார் பைலட்’ என்றது கெலாட் தரப்பு. சமரசப் பேச்சுவார்த்தைகளின் வழியாக ஓரளவுக்குப் பிரச்னைகளைச் சரிசெய்து ஆட்சியைக் காப்பாற்றியது மேலிடம். பைலட், தனது துணை முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, அவ்வப்போது இரு தரப்புக்குமிடையே சண்டைகள் நடப்பது வழக்கமானது.

சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தயாரானார் கெலாட். பின்னர், தனது முதல்வர் பதவி பறிபோய்விடும் என்று எண்ணி அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். அப்போது மீண்டும் கெலாட் தரப்புக்கும், பைலட் தரப்புக்குமான மோதல் அதிகமானது. இந்த நிலையில், தற்போது அந்த மோதல் அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது.

புயலைக் கிளப்பிய கெலாட்டின் பேட்டி!

சில வாரங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ``இந்தியாவின் முதல்வர்களில் மூத்த முதல்வர் எனும் பெருமை அசோக் கெலாட்டுக்கு உண்டு. அசோக் கெலாட்டும், நானும் ஒரே காலத்தில் முதல்வராகப் பணியாற்றியிருக்கிறோம்'' என்று புகழ்ந்து பேசினார். பதிலுக்கு கெலாட், ``மோடி எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும் அவருக்கு மிகச் சிறந்த வரவேற்பும் கௌரவமும் அளிக்கப்படுகின்றன'' என்றார்.

இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய சச்சின் பைலட், ``நேற்று முதல்வர் அசோக் கெலாட்டை பிரதமர் மோடி பாராட்டிப் பேசியதைப் பார்த்தோம். இதே போன்று மாநிலங்களவை எம்.பி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற குலாம் நபி ஆசாத்தையும் மோடி புகழ்ந்து பேசினார். ஆனால், அதன் பிறகு என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். கட்சி மேலிடம் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது'' என்றார்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காகக் குஜராத் சென்றிருக்கும் அசோக் கெலாட் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அதில், ``நாட்டிலேயே மாநிலக் கட்சித் தலைவர் ஒருவர் சொந்த அரசையே கவிழ்க்க முயன்றார் என்றால் அது ராஜஸ்தானில்தான் நடந்ததாக இருக்கும். வெறும் 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுகூட இல்லாத ஒருவரை எப்படிக் கட்சித் தலைமை முதல்வராக்கும்? சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்தவர். துரோகி எப்படி முதல்வராக முடியும்... சச்சின் பைலட் டெல்லியில் அமித் ஷா, தர்மேந்திர பிரதான் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அவருக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் சிலர் 5 கோடியும், சிலர் 10 கோடியும் பெற்றனர். இந்தப் பணம் பா.ஜ.க அலுவலகத்திலிருந்து வந்தது'' என்று பேசியிருந்தார்.

சச்சின் பைலட், ராகுல் காந்தி, அசோக் கெலாட்
சச்சின் பைலட், ராகுல் காந்தி, அசோக் கெலாட்
Twitter

இதனால் ஆத்திரமடைந்த பைலட், ``அசோக் கெலாட் அனுபவம்மிக்கவர். மூத்த தலைவர். முற்றிலும் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அனுபவமுள்ள தலைவருக்குத் தகுதியில்லாதது. நாம் அனைவரும் பா.ஜ.க-வை எதிர்த்து போராட வேண்டும். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என்று கூறினார். பைலட் தரப்பு எம்.எல்.ஏ-க்களும், ``எங்கள் தலைவர் வசம்தான் 80% எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்'' என்று பேசி சலசலப்பை அதிகரித்து வருகின்றனர்.

சண்டை எப்போது ஓயும்?

டிசம்பர் 6-ம் தேதி அன்று, பாரத் ஜோடோ யாத்திரைக்காக ராஜஸ்தான் வரவிருக்கிறார் ராகுல் காந்தி. 18 நாள்கள் அங்கு யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார். இந்தச் சூழலில் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் அதிகரித்திருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. ``2023-ல் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது ராஜஸ்தான் மாநிலம். அந்தத் தேர்தலில் சச்சின் பைலட்டை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கட்சி மேலிடம் திட்டமிட்டுவருகிறது. அதனால், தேவையின்றி எந்தச் சண்டைக்கும் செல்லவேண்டாம் என்ற முடிவில் பைலட் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், ராகுலின் பாத யாத்திரையை வெகு சிறப்பாக நடத்தி முடித்து, அவரிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்ற முடிவில் பைலட் இருக்கிறார். ராகுல், ராஜஸ்தான் வரும்போது இரு தலைவர்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்பிருக்கிறது. கட்சிக்குள் உள்ள சண்டைகளைச் சரி செய்தால் மட்டுமே ராஜஸ்தானில் காங்கிரஸ், ஆட்சியைத் தக்கவைக்கும்" என்கிறார்கள் ராஜஸ்தான் அரசியலை உற்றுநோக்குபவர்கள்.