கட்டுரைகள்
Published:Updated:

விரும்பத் தகாத தொழிலதிபர்களுடன் ராகுல் சந்திப்பு? - குலாம் நபி ஆசாத் புகார்!

ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ராகுல் காந்தி

குலாம் நபி ஆசாத் சொல்வது சரிதான். ராகுல் காந்தி குடும்பத்துக்குப் பல தொழிலதிபர்களுடன் தொடர்பு இருப்பது உண்மைதான். போஃபர்ஸ் ஊழலில் தொடங்கி பல விவகாரங்களில் ராகுல் குடும்பம் ஈடுபட்டிருக்கிறது.

ராகுல் காந்திமீது சரமாரியான புகார் வாசித்திருக்கிறார் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் நிறுவனர் குலாம் நபி ஆசாத். இதற்கு பா.ஜ.க தரப்பில் ஆதரவும், காங்கிரஸ் கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நீண்டகாலம் காங்கிரஸ் கட்சியுடன் பயணித்து, சமீபத்தில் அதிலிருந்து விலகி, ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியைத் தொடங்கியவர் குலாம் நபி ஆசாத். தற்போது அவர் ராகுல் காந்திமீது பரபரப்புப் புகாரைக் கிளப்பியிருக்கிறார். மலையாளத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘ராகுல் காந்தியின் குடும்பம் பல தொழிலதிபர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறது. விரும்பத் தகாத சில தொழிலதிபர்களைச் சந்திப்பதற்காக இந்தியாவுக்கு வெளியே எங்கு வேண்டுமானாலும் ராகுல் செல்வார். அதற்கு என்னால் பத்து எடுத்துக்காட்டுகளைக் கொடுக்க முடியும். 'பாரத் ஜோடோ' நடத்தியதால், ராகுலின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டதற்கோ, தகுதிநீக்கம் செய்ததற்கோ ஒரு கொசுகூட அழவில்லை. கட்சியின் மூத்த தலைவர்களைவிட இளைய தலைமுறையினர் பத்து மடங்கு விரக்தியில் இருக்கின்றனர். சொல்லப்போனால் பா.ஜ.க-வை மிருக பலத்துடன் வளர்த்துவிட்டதே ராகுல் குடும்பமும், காங்கிரஸும்தான்'' என்று விமர்சித்திருந்தார்.

கோபண்ணா, நாராயணன் திருப்பதி
கோபண்ணா, நாராயணன் திருப்பதி

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ‘‘குலாம் நபி ஆசாத் சொல்வது சரிதான். ராகுல் காந்தி குடும்பத்துக்குப் பல தொழிலதிபர்களுடன் தொடர்பு இருப்பது உண்மைதான். போஃபர்ஸ் ஊழலில் தொடங்கி பல விவகாரங்களில் ராகுல் குடும்பம் ஈடுபட்டிருக்கிறது. ஆனால், அந்தத் தொழிலதிபர்கள் யார் என்பதையும் குலாம் நபி ஆசாத் தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பணம் வாங்கியிருக்கிறது. இந்தியாவில் மதரீதியிலான பிரச்னைகளை உருவாக்குவது, வெளிநாடுகளில் நமது நாட்டைப் பற்றித் தவறாகப் பேசுவது போன்ற பல்வேறு விஷயங்களை காங்கிரஸ் கட்சி செய்துவருகிறது. அதனடிப்படையில் ராகுல் காந்தி தொழிலதிபர்களைச் சந்தித்திருக்கலாம். பாரத் ஜோடோ யாத்திரையில் மக்களின் பங்களிப்பும் இல்லை. அதற்கு மக்களின் ஆதரவும் இல்லை. அதைத்தான் குலாம் நபி ஆசாத் தெரிவித்திருக்கிறார்'' என்றார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் ஊடகத்துறைத் தலைவர் கோபண்ணா, ‘‘குலாம் நபி ஆசாத் இளமைப் பருவம் முதல் 50 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ்காரராக இருந்தவர். கட்சியில் அவர் வகிக்காத பதவிகளே கிடையாது. பிரதமராகவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் மட்டுமே அவர் பதவி வகிக்கவில்லை. அப்பேர்ப்பட்டவர் இன்று காங்கிரஸிலிருந்து வெளியேறிய பிறகு கட்சி குறித்தும், ராகுல் காந்தி குறித்தும் விமர்சிக்கிறேன் என்ற பெயரில் அவதூறு செய்வதை ஏற்க முடியாது. அவர் பேச்சில், அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. பா.ஜ.க-வின் ‘பி - டீம்' என்று மாறிய பிறகு, அவர்களின் ஊதுகுழல்போல இந்தப் புகார்களை வாசிக்கிறார். இளைய தலைமுறையினர் ராகுல் காந்தியின் தலைமையில் எழுச்சியுடன் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை அவர் ஒருங்கிணைத்துவருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வையும், அவர்களின் பி-டீம்களையும் மக்கள் அப்புறப்படுத்துவார்கள்'' என்றார்.