Published:Updated:

வெங்கைய நாயுடு கொடுத்த ஐடியா; சக்சஸ் செய்த ஜி.கே.வாசன்! - மோடி சந்திப்பின் பின்னணி

பி.ஜே.பி-யுடன் ஒரு தோழமைக்கட்சியாக த.மா.கா இருக்கிறது. எதிர்காலத்திலும் அந்தக் கட்சியுடன் கூட்டணி தொடரும். அதற்காகக் கட்சியை பி.ஜே.பி-யுடன் இணைப்பதற்கு வாய்ப்பில்லை. மோடியை, ஜி.கே.வாசன் சந்தித்ததுக்கான காரணமே வேறு.

 ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

``பி.ஜே.பி-யில் சேரப்போகிறார் ஜி.கே.வாசன். மோடியுடன் சந்திப்புக்கான காரணம் இதுதான். விரைவில் மத்திய அமைச்சராகப்போகிறார்” என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் குறித்து செய்திகள் வட்டமடித்து வருகின்றன. காங்கிரஸ் பாரம்பர்யத்திலிருந்து வந்த ஜி.கே.வாசன், காவிக்கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பிரதமர் மோடியை டெல்லியில் தனியாகச் சந்தித்ததே இந்தச் செய்தி பரவுவதற்கான ஒரே காரணம்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நடத்திவரும் ஜி.கே.வாசன், யாருமே எதிர்பாராதவிதமாகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியில் இணைந்தார். அவருடைய கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. கூட்டணிக்கு தலைமை வகித்த அ.தி.மு.க-விடம் ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட் கேட்டபோது அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று சமாளித்துவிட்டது.

சீனா அதிபர் சந்திப்புக்காக பிரதமர் மோடி சென்னை வந்தபோது அவரை வரவேற்கச் சென்றார் ஜி.கே.வாசன். அப்போது ஜி.கே.வாசனிடம் வாஞ்சையோடு மோடி உரையாடியதைப் பார்த்த பி.ஜே.பி தலைவர்களே அதிர்ந்துபோனார்கள். அதற்குப் பிறகே த.மா.கா-வை கலைத்துவிட்டு பி.ஜே.பி-யில் சேரப்போகிறார் ஜி.கே.வாசன் என்கிற செய்திகள் கசிய ஆரம்பித்தன. அந்தச் செய்திக்கு வலுசேர்க்கும் விதத்தில் மோடியை சந்திக்க அவர் கிளம்பியதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது.

மோடி
மோடி

அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம்.``பி.ஜே.பி-யுடன் த.மா.கா எந்த வகையில் இணைய முடியும்? காங்கிரஸ் பாரம்பர்யத்திலிருந்து வந்தவர் ஜி.கே. வாசன். இப்போது பி.ஜே.பி-யுடன் ஒரு தோழமைக்கட்சியாக த.மா.கா இருக்கிறது. எதிர்காலத்திலும் அந்தக் கட்சியுடன் கூட்டணி தொடரும். அதற்காகக் கட்சியைக் கலைத்துவிட்டு போய்ச் சேருவதற்கு வாய்ப்பில்லை. இப்போது மோடியைச் சந்தித்ததுக்கான காரணமே வேறு.

டெல்லியில் 3 நாள் முகாமிடும் ஜி.கே.வாசன்! - அமித் ஷா சந்திப்பின் நோக்கம் என்ன?

திருவையாறு தியாகராஜ சபை வாசன் குடும்பத்துக்கு நெருக்கமான தொடர்புடையது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவையாறு சங்கீத உற்சவத்தை இந்த சபையின் மூலமே நடத்துவார்கள். இந்த சபையின் தலைவராகத் தற்போது வாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சபையின் மூலம் வரும் ஜனவரி 14-ம் தேதி திருவையாற்றில் ஆண்டுவிழா நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராகத் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு கலந்துகொள்ள உள்ளார். இதற்காக வெங்கைய நாயுடுவை அழைக்கச் சென்றபோது அவர், ``நான் விழாவுக்கு கண்டிப்பாக வருகிறேன். மோடி உங்கள் மீது மிகுந்த மரியாதையோடு இருக்கிறார். அவரையும் சந்தித்து அழைப்பு கொடுங்கள்’’ என்று ஐடியா கொடுத்துள்ளார். அதற்குப் பிறகுதான் வாசன் தரப்பிலிருந்து மோடி சந்திப்புக்கான அப்பாயின்மென்ட் கேட்கப்பட்டுள்ளது.

வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு

அந்த நேரத்தில்தான் பி.ஜே.பி-யுடன் இணையப்போகிறார் வாசன் என்கிற செய்தியும் வெளியானது. இன்று மோடியைச் சந்தித்து திருவையாறு விழாவைப்பற்றியும் வெங்கைய நாயுடுக்கு அழைப்பு கொடுத்துள்ளதைப் பற்றியும் வாசன் தெளிவாக விளக்கியுள்ளார். அந்த விழாவில் மோடியும் கலந்துகொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்துள்ளார் வாசன். முதல்முறையாக வாசனுக்கும் மோடிக்கும் இடையே தனிப்பட்ட சந்திப்பாக இது அமைந்தது. இந்தச் சந்திப்பில் கட்சி இணைப்பு குறித்தோ, அமைச்சர் பதவி குறித்தோ ஏதும் பேசிக்கொள்ளவில்லை“ என்றார்கள்.