Published:Updated:

``திமுக-வின் காழ்ப்புணர்ச்சியே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டுக்கு காரணம்” - ஜி.கே.வாசன்

கட்சி நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன்

முன்னாள் அ‌.தி.மு.க அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, தி.மு.கவின் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடத்தப்படுவதாக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

``திமுக-வின் காழ்ப்புணர்ச்சியே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டுக்கு காரணம்” - ஜி.கே.வாசன்

முன்னாள் அ‌.தி.மு.க அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, தி.மு.கவின் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடத்தப்படுவதாக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Published:Updated:
கட்சி நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன்

ராமேஸ்வரத்தில் கட்சி நிர்வாகி இல்ல விழாவுக்கு வந்த த.மா.கா தலைவரும், மேல்சபை எம்.பியுமான ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசினார்...

``தமிழக அரசு சொத்து வரியை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 19-ந் தேதி த.மா.கா. சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.

அ‌.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி , விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ``தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த உடனேயே, காழ்ப்புணர்ச்சி அரசியலுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே இந்த சோதனையானது நடத்தப்படுவதாக தெரிகிறது. ஆக்கப்பூர்வமான அரசியல் செய்ய வேண்டும் என்பதுதான் மக்களுடைய எண்ணம். காழ்ப்புணர்ச்சி அரசியலில் செய்வதை மக்கள் விரும்பவில்லை. சட்டம் இருக்கிறது அது தன் கடமையை செய்யட்டும். மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்காத மாடலாக திராவிட மாடல் இருக்கிறது. குறிப்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மாடலாக திராவிட மாடல் இருக்கிறது. மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்கள் மீது சுமையை ஏற்றும் மாடலாக திராவிட மாடல் இருக்கிறது.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

காங்கிரஸ் கட்சி 98 சதவீத மாநிலங்களில் ஆட்சியில் இல்லை. அக்கட்சி மிக பலவீனமாக இருக்கிறது. அதற்காக அவர்கள் ஒரு யுத்தியை கையாளுகிறார்கள். இது நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எந்த விதத்திலும் பிரயோஜனமும் இல்லை.

இலங்கை அரசோடு மத்திய, மாநில அரசுகள் கண்டிப்போடு பேச வேண்டும். ஆக்கபூர்வமான ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதன் அடிப்படையிலே நம்முடைய இந்திய மீனவர்கள் 100 சதவீதம் தொழிலுக்கு செல்லும்போது பயமில்லாமல் தைரியமாக செல்லக்கூடிய நிலை ஏற்படுத்த வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து தருகிறது. ஆனால் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் அனைத்தும் கொடுக்கும் நிதியை வீணடிக்கும் வகையில் ஆடம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. அதனை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.வாசன்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.வாசன்

தமிழகத்தில் காவல்துறையினுடைய கைகள் கட்டப்பட்டுள்ளதாக மக்கள் கருதுகிறார்கள். காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் சட்டம் ஒழுங்கு சரியாக செயல்பட வாய்ப்பு உண்டு. இன்று சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்துள்ளது. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக அரசு காவல்துறை கைகளை கட்டி போட வேண்டாம்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தொடர்கிறது. மூன்று மாதம் ஒரு குழு அமைத்து கூட அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை என்றால் இறந்தவர்களுடைய உயிர்களுக்கு யார் பொறுப்பேற்பது?. தொடர்ந்து பல குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கிறது. ஏழை, எளிய நடுத்தர மாணவர்கள் இந்த சூதாட்டத்திலே தங்களை அடிமையாக்கி கொண்டு கடன் பெற்று வீட்டில் இருக்கும் பணத்தை திருடக்கூடிய நிலை இன்று ஏற்படுகிறது. இதைப்பற்றி அரசு கவலைபடுவது கிடையாது. இதன் உள்நோக்கம் என்ன, காரணம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. டாஸ்மாக் கடைகளை வளர்ப்பது தான் தமிழக அரசின் பணியாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. கடைகளை படிப்படியாக மூடக்கூடிய செயலை கூட அவர்கள் செய்யவில்லை. தாய்மார்கள் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறை தெளிவாக தெரிகிறது” என கூறினார்.