Published:Updated:

``அமைச்சர் கனவு கிடையாது; ஆனால், த.மா.கா-வுக்கு அங்கீகாரம் தேவை!''- என்ன சொல்கிறார் ஜி.கே.வாசன்?

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன் ( க.பாலாஜி )

மதச்சார்பின்மை என்ற அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து விலகிச் செல்கிறாரா ஜி.கே.வாசன், பா.ஜ.க-வின் தயவினாலேயே அவருக்கு எம்.பி பதவி கிடைத்திருக்கிறதா... போன்ற பல்வேறு கேள்விகள் வரிசைகட்டிவரும் சூழலில், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்துப் பேசினோம்...

காங்கிரஸ் பாரம்பர்யமிக்க குடும்பத்திலிருந்து வந்த ஜி.கே.வாசன், இப்போது அகில இந்திய அளவிலான பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகித்துவரும் அ.தி.மு.க அணியின் சார்பில், ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்வாகயிருக்கிறார். தன் தந்தை ஜி.கே.மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு த.மா.கா-வின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திவந்த ஜி.கே.வாசன், ஒருகட்டத்தில் தாய்க்கழகமான `அகில இந்திய காங்கிரஸ்' கட்சியுடன் த.மா.கா-வை இணைத்துக்கொண்டார். அதன்பின்னர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், எம்.பி., மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துவந்தவர், கடந்த 2014-ம் ஆண்டு மறுபடியும் அகில இந்திய காங்கிரஸுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதையடுத்து, மீண்டும் `த.மா.கா'வைப் புதுப்பித்துத் தலைவர் ஆனார் ஜி.கே.வாசன்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்
க.பாலாஜி

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, யாரோடு கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வது என்ற குழப்பத்தில், திக்கித் திணறியது த.மா.கா. தேர்தல் நெருக்கம்வரையிலும் அ.தி.மு.கவோடு நட்பு பாராட்டிவந்த ஜி.கே.வாசன், தொகுதிப் பங்கீட்டில் போதிய இடம் கிடைக்காத காரணத்தினால் எதிர் முகாமான தி.மு.க பக்கம் சாயத் திட்டமிட்டார். ஆனால், கடைசி நேரத்தில் அந்த முயற்சியும் கைநழுவிப்போக, தி.மு.க - அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக, மூன்றாவது அணியாக அப்போது பரபரப்பு கிளப்பிவந்த மக்கள் நலக் கூட்டணியில் ஒட்டிக்கொண்டார்.

ஜி.கே.வாசனின் இந்த முடிவு, த.மா.கா-விலிருந்த மூத்த தலைவர்கள் பலருக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. அக்கட்சியில் அனுபவம் வாய்ந்த தலைவராக வலம்வந்த பீட்டர் அல்போன்ஸ், ஜி.கே.வாசனின் முடிவை எதிர்த்து த.மா.கா-விலிருந்து விலகி காங்கிரஸில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார்.

` `மை லார்ட்',`யுவர் லார்ட்ஷிப்'.. இதெல்லாம் வேண்டாமே..!' - நீதிபதி முரளிதரின் கோரிக்கை

அப்போது, பத்திரிகையாளர்களிடம் பேசிய பீட்டர் அல்போன்ஸ், ``த.மா.கா தொடங்கியபோது, `மதச்சார்பற்ற இந்தியா’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தினோம். தமிழகம் முழுக்க இதுபோன்ற கருத்தரங்குகளை நடத்துவதற்கு முதலில் ஒப்புக்கொண்ட ஜி.கே.வாசன் பின்னர் மறுத்துவிட்டார். `காங்கிரஸிலிருந்து விலகி நீண்டதூரம் பயணித்துவிட்டோம்' என்று இப்போது ஜி.கே.வாசன் பேசி வருகிறார். அவர், பா.ஜ.க-வை நெருங்கிவருகிறாரோ என்ற அச்சம் எங்களுக்கு வந்துவிட்டது. அதனாலேயே த.மா.கா-விலிருந்து விலகிவிட்டேன்!'' என்றார்.

2016-ல் பீட்டர் அல்போன்ஸ் வெளிப்படுத்திய அந்த அச்சத்தை உண்மையென 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபித்தார் ஜி.கே.வாசன். அகில இந்திய அளவில் பா.ஜ.க தலைமையேற்று வழிநடத்திவந்த அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா-வையும் இணைத்துத் தேர்தலை எதிர்கொண்டார் அவர். தேர்தலில், படுதோல்வியை இக்கூட்டணி சந்தித்தபோதிலும், தொடர்ந்து அந்தக் கூட்டணியிலேயே தொடர்ந்து வந்தது த.மா.கா.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

இந்த நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் 2-ம் தேதியுடன் அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் 3 பேர்களுக்கு பதவிக்காலம் முடிகிறது. மீண்டும் புதிய மாநிலங்களவை உறுப்பினராக அ.தி.மு.க தரப்பில் தேர்வாகப்போகும் எம்.பி வேட்பாளர்கள் யார் யார் என்ற பரபரப்பு, கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலை தடதடக்க வைத்தது. அ.தி.மு.க-விலுள்ள மூத்த தலைவர்களே போட்டிபோட்டு எம்.பி சீட் கேட்டுவந்த நிலையில், கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க., `தங்களுக்கும் ஒரு சீட் வேண்டும்' என வெளிப்படையாகக் கேட்டது. த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனும் இதுசம்பந்தமாக அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசிவந்தார்.

இந்த நிலையில், 3 எம்.பி வேட்பாளர் பட்டியலில் ஒருவராக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனும் தற்போது தேர்வாகியிருப்பது அக்கட்சியினருக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதற்கிடையில், `காங்கிரஸ் பாரம்பர்யத்திலிருந்து வந்திருக்கும் ஜி.கே.வாசன், தொடர்ந்து பா.ஜ.க-வோடு அதீத நெருக்கம் காட்டிவருவதற்கான பரிசாகவே எம்.பி பதவி கிடைத்திருக்கிறது. இதன் பின்னணியில் பா.ஜ.க தலைவர்களின் முயற்சிகள் இருக்கின்றன' என்பதுபோன்ற பேச்சுகள் உலவுகின்றன.

மதச்சார்பின்மை என்ற அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து விலகிச் செல்கிறாரா ஜி.கே.வாசன்? பா.ஜ.க-வின் தயவினாலேயே அவருக்கு எம்.பி பதவி கிடைத்திருக்கிறதா... என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் வரிசைகட்டிவரும் சூழலில், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்துப் பேசினோம்....

மோடியுடன் ஜி.கே.வாசன்
மோடியுடன் ஜி.கே.வாசன்

`` `மதச்சார்பின்மையைக் காப்பதற்காகவே த.மா.கா'வை ஆரம்பித்திருக்கிறோம் என்று பேசிவந்த நீங்கள் இப்போது பா.ஜ.க கூட்டணியில் பயணிப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதே?''

``மதச்சார்பின்மை என்ற பெயரிலே இன்றைக்கு நாட்டில் நடமாடிக்கொண்டிருக்கிற கட்சிகள் எல்லாம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. எனவே, `மத நல்லிணக்க முறை'தான் சரி. அதுதான் ஒழுங்காக இருக்கும். மக்களும்கூட அதைத்தான் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நிலையில் நாங்களும் எங்கள் நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறோம். த.மா.கா-வின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது. இது வளரும், சிறக்கும், உயரும்! இன்றைக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் நாங்கள் அடுத்த வருடம் சட்டமன்றத்திலும் குரல் கொடுப்போம். எங்கள் வளர்ச்சியையோ அ.தி.மு.க., பா.ஜ.க-வோடு கூட்டணி வைப்பதையோ அல்லது துணை நிற்பதையோ யாராலும் தடுக்க முடியாது''

`` `காமராஜரின் பொற்கால ஆட்சி அமைப்போம்' என்று கூறிவரும் த.மா.கா, இனி மதவாதத்தை முழுமூச்சாக எதிர்த்து அரசியல் செய்யத் துணியுமா?''

``எங்களுக்கு மதவாதமும் இல்லை; மதச்சார்பின்மையும் இல்லை. மத நல்லிணக்கம் மட்டும்தான். நாட்டில் இன்றைய சூழலில், எந்தக் கட்சிக்குமே மதவாதமும் கிடையாது, மதச் சார்பின்மையும் கிடையாது. இரண்டுமே போலி. இனிமேல், மக்கள் நலன் சார்ந்த அரசைத்தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்''

எடப்பாடி பழனிசாமி - ஜி.கே.வாசன் - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - ஜி.கே.வாசன் - ஓ.பன்னீர்செல்வம்

``காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளிவருகிறவர்களுக்கு பா.ஜ.க-வில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதே?''

``ஒரு தேசியக் கட்சியிலிருந்து இன்னொரு தேசியக் கட்சிக்கு மாறிப்போகிறவர்களின் எண்ணிக்கை என்பது வழக்கமானதுதான். இது தேர்தல் நேரத்தின்போது இன்னும் அதிகமாக இருக்கும். இன்றைய அரசியலில், இது ஒன்றும் சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல. ஆனால், மத்தியப்பிரதேசத்தில் ஓர் ஆட்சியே மாறிப்போய்விடுகிறதென்றால், அங்கே காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி எந்தளவு அதிருப்தியோடு நடந்துகொண்டிருந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.''

` `மை லார்ட்',`யுவர் லார்ட்ஷிப்'.. இதெல்லாம் வேண்டாமே..!' - நீதிபதி முரளிதரின் கோரிக்கை

``பா.ஜ.க அமைச்சரவையில் உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிறார்களே....?''

``தமிழக சட்டமன்றத்தில், எங்கள் கட்சிக்கு எம்.எல்.ஏ-க்களே இல்லாதிருந்த சூழலில், இந்த ராஜ்ய சபா எம்.பி பதவியையே நான் நினைத்துப்பார்க்கவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க கூட்டணியில், கடைசியாகத்தான் வந்து சேர்ந்துகொண்டோம். அப்போதே, 3 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புக் கேட்டோம். அதற்கு வாய்ப்பில்லாத சூழல் ஏற்படவே, ஒரு ராஜ்ய சபா, ஒரு லோக்சபா என இரண்டு சீட் கேட்டோம். ஆனால், எதுவும் கிடைக்காத சூழலில்தான் ஒரு சீட் மட்டும் பெற்றுக்கொண்டு போட்டியிட்டோம். எண்ணம்தான் பெரிது, எண்ணிக்கை பெரிதல்ல என்பதை உறுதிசெய்துகொண்டு தேர்தல் வேலை செய்தோம். தேர்தலுக்குப் பிறகும் எங்கள் தொடர் கோரிக்கையை ஏற்று இப்போது எங்களுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுத்து அங்கீகரித்திருக்கிறார்கள். அதற்காக அ.தி.மு.க-வுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எனக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்ற கனவில் என்றைக்கும் நான் இருந்தது கிடையாது. த.மா.கா-வின் கடுமையான உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் தேவை. அந்த அங்கீகாரம் எந்தவிதத்தில் கிடைத்தாலும் அதை நாங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்வோம்.''

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

``தமிழக அரசியல் சூழல் ரஜினி - கமல் என ரொம்பவே மாறி நிற்கிறது. இந்தச் சூழலில், வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலில், த.மா.கா யாரோடு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும்?''

``தமிழக அரசியலில் தி.மு.க - அ.தி.மு.க என இரு கூட்டணிகள்தான். இதில், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி தொடர்ந்து, மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்காக 100 சதவிகித உத்தரவாதம் கொடுத்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து வரும் அ.தி.மு.க கூட்டணியின் செயல்பாடு இன்னும் தொடர வேண்டும், சிறக்க வேண்டும், உயர வேண்டும். அதன் அடிப்படையிலேயே த.மா.கா-வின் நிலைப்பாடும் அமையும்''

(பா.ஜ.க-வின் தயவினாலேயே உங்களுக்கு எம்.பி பதவி கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்களே?

த.மா.கா-வைவிட அதிக வாக்குவங்கியைக் கொண்ட தே.மு.தி.க, வெளிப்படையாகக் கேட்டும்கூடக் கிடைக்காத ராஜ்யசபா எம்.பி பதவி, உங்களுக்குக் கிடைத்திருக்கிறதே?

- என்பது உள்ளிட்ட பரபர கேள்விகளுக்கு ஜி.கே.வாசன் அளித்திருக்கும் விறுவிறு பதில்களை வருகிற வியாழனன்று வெளிவரும் ஆனந்தவிகடன் இதழில் படிக்கலாம்....)

அடுத்த கட்டுரைக்கு