மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து த.மா.கா சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம், ``மாநில அரசு தொடர்ந்து மத்திய அரசின் மீது பழிபோட்டு மக்களை ஏமாற்ற முடியாது. பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் மக்களுக்கு சுமை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைப்பதற்கு மத்திய அரசு முயன்றுகொண்டிருப்பதாக அறிவிப்பை வெளியிடுகிறார்கள். சொத்து வரியைக் குறைக்க மாட்டேன் என தி.மு.க ஆணவமாகக் கூறுவது வருத்தத்துக்குரியது, வேதனைக்குரியது.

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம்தான். அதிலும் சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வும், பொருளாதார மாற்றமுமே அதற்குக் காரணம். ஆனால் சொத்து வரி உயர்வு என்பது 150 சதவிகிதம் என்பது ஏழைகளை மிக அதிகமாக பாதிக்கிறது. வரி போடாமல் அரசை நடத்த முடியாது என்றாலும், இதைச் சரிபாதியாகக் குறைக்க தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் சொத்து வரியைக் குறைக்க வேண்டும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு. தினசரி கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, நகைப்பறிப்பு ஆகியவை அதிகரித்துவருகின்றன. அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டியது தமிழக அரசின் கடமை. தமிழகத்தின் சாமானிய மக்கள் முதல் கவர்னர் வரை பாதுகாப்பு கொடுக்கவேண்டியது மாநில அரசின் கடமை. மதுக்கடைகளைப் படிப்படியாக மூடவேண்டியது அரசின் கடமை.
அந்த அறிவிப்பை தாய்மார்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய இயலாமையை மறைப்பதற்கு, பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என தமிழக அரசு நினைத்தால், மக்களிடம் இந்தமுறை அவர்கள் ஏமாந்துபோவார்கள்.

மின்வெட்டு தொடரக் கூடாது. அது இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது தமிழக அரசின் கடமை. கண்மூடித்தனமாக அதற்கும் மத்திய அரசுதான் காரணம் எனக் கூறினால், மாநில அரசை மக்கள் மறந்துவிடுவார்கள். மத்திய அரசு தவறாமல் நிலக்கரியை ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இது சம்பந்தமாக மத்திய அமைச்சரிடம் பேசவிருக்கிறேன். மக்கள் செல்வாக்கை இழக்க தொடங்கிய ஆளுங்கட்சி கவர்னரைக் குறை சொல்வதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது. சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் ஆளுங்கட்சியோடு ஜனநாயகத்தோடு செயல்படுபவர்களுக்கு மோதல் இருக்கத்தான் செய்யும். கவர்னர் கார்மீது தாக்குதல் நடந்ததற்கு தொலைகாட்சிகளே சாட்சி. தமிழகத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை கூட்டணிக் கட்சியாக நாங்கள் வலியுறுத்திவருகிறோம்" என்றார்.